அன்புடைமை பற்றிய கட்டுரை

Anbudaimai Katturai In Tamil

இந்த பதிவில் பண்புகளில் உயரிய பண்பான “அன்புடைமை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

அன்பு இல்லாதவர், எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். பிறருக்கு எதையும் கொடுக்கமாட்டார்.

அன்புடைமை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. திருக்குறளின் சிறப்புக்கள்
  3. அதிகார விளக்கம்
  4. அன்புடமைப் பயன்கள்
  5. அன்பிலாதோர்
  6. முடிவுரை

முன்னுரை

இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வைத்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம் திருக்குறளாகும்.

இதில் அன்பின் உயர்வு மற்றும் சிறப்பு பற்றியும், அன்பினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பெருநாவலரான திருவள்ளுவர் தமது எட்டாவது “அன்புடைமை” என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார்.

அன்பு என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய உயரிய பண்பாகும். அன்பினால் சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை என்றால் அது மிகையாகாது. தன்னலம் கருதாது பிறர் நலம் பேணுவதே அன்பாகும். அன்புடமை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

திருக்குறள் சிறப்புக்கள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகின்றது.

வள்ளுவர் கூறிய உடைமைகள் 10 ஆகும். அவையாவன, அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என்பனவாகும்.

திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.

அதிகார விளக்கம்

அன்பின் அவசியத்தை, தன்மையை மற்றும் அதன் சிறப்பை கூறும் அதிகாரம் ஆகும். ஒருவர் அன்பானவராக இருந்தால், அவரால் இரக்கத்தை மறைக்க முடியாது. கண்களில் கண்ணிர் வழியும்.

தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் உயிரையும் அடுத்தவற்குத் தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள்

அன்புடமைப் பயன்கள்

அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கை பயனுடையதாகும். அன்பு, பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

அன்புடையோர் தங்களது உயிரைக் கூடப் பிறருக்காக வழங்க முன்வருவர். அன்பினால் நல்ல பண்புகள் வளரும். வீரத்திற்கும் அன்பு துணை நிற்கும்.

அன்பிலாதோர்

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழு வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போன்றது. அதாவது கருகிய மரம் மீண்டும் துளிர்ப்பது என்பது கடினமான ஒன்று. அதுபோலவே மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்புத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். அன்பு இல்லாதவர், எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். பிறருக்கு எதையும் கொடுக்கமாட்டார்.

முடிவுரை

திருக்குறளானது வாழ்விற்குத் தேவையான அத்தனை அறங்களையும் கூறியுள்ளது. வாழ்வில் அன்பு என்பது இன்றியமையாததாகும். மனித குலத்தை அன்பே ஆளுகின்றது.

அன்பினால் எக்காரியத்தினையும் சிறப்பாகச் செய்திடலாம். எப்போதும் பிறருடன் அன்போடு பழகிட வேண்டும். அன்பு வாழ்வை மகிழ்வித்து வளமாக்கும் உயரிய பண்பாகும்.

You May Also Like:
அன்பு பற்றிய கட்டுரை
மனிதநேயம் பேச்சு போட்டி