உலக மிதிவண்டி தினம்

மிதிவண்டி தினம்

உலக மிதிவண்டி தினம்ஜூன் 3
World Bicycle DayJune 3

நம் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளையுமே நமது உடலை வலிமையாக்கும் பொருட்டே உருவாக்கினர்.

பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸை சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் அவர்களால் (Comte mede de Sivrac) உருவாக்கியது தான் மிதிவண்டி ஆகும்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை உலக மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மிதி வண்டி காணப்பட்டது.

உலக மிதிவண்டி தினம்

மிதிவண்டி தினம் வரலாறு

அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் Role of bicycle in development என்னும் திட்டத்தை மேற்கொண்டார். அப்போது மிதிவண்டிக்கு என தனியானதொரு தினம் இருந்தால் மட்டுமே மிதிவண்டியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வார்கள் என்று நம்பினார்.

அதனடிப்படையில் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த வேண்டும் என பரப்புரை செய்தார்.

ஏப்ரல் 12, 2018 அன்று, ஜூன் 3 ஆம் தேதியை உலக மிதிவண்டி தினமாக அறிவிக்கும் தீர்மானம் ஐநா பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் உலகளாவிய ரீதியில் உலக மிதிவண்டி தினம் ஆண்டுதோறும் ஜூன் 3 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக மிதிவண்டி தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்

மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மிதிவண்டி பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகின்றது.

எளிமையான, மலிவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வழிமுறையான மிதிவண்டியை பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றிய கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக மிதிவண்டி தினம் உள்ளது.

சமூகத்தில் அனைவரிடமும் மிதிவண்டி ஓட்டுவதை ஊக்குவிக்கவும், உடல் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கின்றது.

மேலும் உலக மிதிவண்டி தினம் இனம், மதம், பாலினம், வயது போன்ற எதனையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும்.

பயனுள்ள போக்குவரத்து சாதனம் மிதிவண்டி

இன்று பல வடிவங்களில் போக்குவரத்து சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மிதிவண்டியின் பயன்பாடு போக்குவரத்திற்கு மிகவும் அருகி விட்டது. எனினும், அண்மைக் காலங்களாக மீண்டும் செல்வாக்குப் பெற்று வருகின்றது.

இப்போதெல்லாம், மிதிவண்டிகள் உடற்பயிற்சிக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கும், சுற்றுச்சூழலுக்காகவும் அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றன.

பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் தங்கள் தலைநகரங்களில் மிதிவண்டிக்கான பிரத்தியேகப் பாதையை அதிகரித்துள்ளன.

எளிமையான அதேவேளை நிலையான போக்குவரத்து வழிமுறையாக மிதிவண்டி உள்ளது. அது மட்டுமன்றி உடல் மற்றும் உள ஆரோக்கியத்திற்கும் மிதிவண்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அத்தகைய உடற் சுறுசுறுப்பை தரக்கூடியது மிதிவண்டியே..!

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வடிவமைக்க மிதிவண்டி பயனுள்ள போக்குவரத்து சாதனம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

You May Also Like :
உலக எழுத்தறிவு தினம்
உலக தம்பதியர் தினம்