கணினி பற்றிய கட்டுரை

Kanini Katturai In Tamil

இன்று உலகை ஆளும் “கணினி பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

இன்று கணினிகள் இல்லாமல் வேலை செய்ய முடியாது என்ற அளவுக்கு கணினிகளின் பயன்பாடுகள் அனைத்து துறைகளிலும் உண்டு.

கணினி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. அறிமுகம்
  2. கணினியின் தோற்றம்
  3. கணினி வழிக்கல்வி
  4. கணினியின் பயன்பாடு
  5. கணினித் தமிழ் வளர்ச்சி
  6. முடிவுரை

அறிமுகம்

இன்றைய உலகில் கணினியின் தேவை இன்றியமையாததாகும். கணினி இல்லையென்றால் தற்போது உலகம் இயங்காது என்ற நிலையில் உள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் முதன்மையானது கணினியின் கண்டுபிடிப்பு என்றால் அதுமிகையாகாது.

அன்றாட வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படும் கணினி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கணினியின் தோற்றம்

1946 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC என்ற கணினி தான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினியாகும். இது பிரம்மாண்டமான கணினி ஆகும்.

27000 கிலோ கிராமிற்கும் அதிகமான எடை கொண்டது. 1833 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாபேஜ் என்பவரே கணினியினை முதன் முதலில் வடிவமைத்தவர் ஆவார்.

ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான “லேடி லவ்லேஸ்” என்பவர் கணிதச் செயற்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வடிவமைத்தமையால் முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார்.

தொடர்ந்து மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி ஹவார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்சன் என்பவரை ஜி. பி. எம் பொறியியலாளர் துணையுடன் எண்ணிலடங்கா கணினியை கண்டறிய தூண்டியது.

தற்போது அமெரிக்கா ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீத்திறன் கணினியை உருவாக்கி சாதனை படைக்க மேலும் மேலும் முயற்சித்து வருகின்றன.

கணினி வழிக் கல்வி

கணினி வழி கல்வி என்பது கணினியை பயன்படுத்தி கல்வி கற்கும் முறையை குறிக்கின்றது. வீட்டிலிருந்தபடியே அனைத்து விதமான கற்கைநெறிகளையும் தொடர முடியும்.

இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்களை கணினியின் துணையுடன் தெளிவு பெற முடியும். கல்வி சம்பந்தமான அனைத்து தேடல்களையும் கண்டறிய கணனி உதவுகின்றது.

வீட்டிலிருந்தபடியே நேருக்கு நேர் தொடர்பு கொண்டு கல்வியை தொடர கணினி வழிக்கல்வி உறுதுணையாக அமைகின்றது. நவீன வளர்ச்சியின் கால ஓட்டமாக கல்வியில் கணினியின் பங்களிப்பு அளப்பெரியது என்றே கூறலாம்.

கணினியின் பயன்பாடு

கணினியின் பயன்பாடுகள் இல்லாத துறையே இல்லை என்று கூற வேண்டும். அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது.

வணிகம்⸴ மருத்துவம்⸴ கல்வி⸴ போக்குவரத்து⸴ பாதுகாப்பு⸴ தொழில்நுட்பம்⸴ தொலைத்தொடர்பு⸴ அறிவியல் போன்ற அனைத்து துறைகளிலும் கணினி பயன்பட்டு வருகின்றது.

பேருந்து நிலையங்கள்⸴ வங்கிகள்⸴ கல்வி நிலையங்கள்⸴ உணவகங்கள் போன்ற இடங்களில் கணினியின் ஆட்சியே நிலவுகின்றது. கணனி சிறந்த பொழுது போக்குச் சாதனமாகவும் திகழ்கின்றது.

வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் துணை புரிகின்றது. உடனுக்குடன் தொடர்பு கொள்ளவும் தகவல்களை அறிந்து கொள்ளவும் கணினி பயன்படுகின்றது.

கணினி தமிழ் வளர்ச்சி

சுமார் 30 ஆண்டுகள் முன்னர் கணினியில் தமிழ் உள்ளீடு செய்வதற்கு வசதிகள் கிடையாது. ஆனால் இன்று அந்த குறை இல்லை.

முதலில் தமிழ் உரையை ரோமன் எழுத்துக்களில் உள்ளீடு செய்யப்பட்டது. தமிழ் எழுத்துகளுக்கான எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன.

அடுத்த கட்ட வளர்ச்சியாக தமிழ் விசைப் பலகை உருவாக்கப்பட்டது. இதன் பயனாக நேரடியாக தமிழைக் கணினியில் உள்ளீடு செய்ய வசதிகள் ஏற்பட்டன. தமிழ் இணையத்தளங்கள்⸴ வலைப்பூக்கள் என்பன இன்று அதிகம் உள்ளன.

முடிவுரை

இன்று சமூகத்துடன் கணினிப் பயன்பாடு இரண்டறக் கலந்து விட்டது. அன்றாட வாழ்க்கை பயன்பாட்டில் ஒன்றாகிவிட்டது. கணினியைச் சரியான வகையில் பயன்படுத்தி அனைவரும் பயன் அடைவோமாக.

You May Also Like:

வியத்தகு விந்தை கணிதம் கட்டுரை
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை