வாய்மையே வெல்லும் கட்டுரை

vaimaye vellum katturai in tamil

இந்த பதிவில் “வாய்மையே வெல்லும் கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு பொய்யை நாம் உரைத்து விட்டால் அதன் பொருட்டு பல பொய்களை கூற வேண்டிய நிலை ஏற்படும்.

வாய்மையே வெல்லும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாய்மையின் சிறப்பு
  • வாய்மை பற்றிய கருத்துகள்
  • வாய்மையின் பயன்கள்
  • வாய்மையால் உயர்ந்தவர்கள்
  • முடிவுரை

முன்னுரை

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொல்” என்கின்றார் வள்ளுவர். யாரொருவரிற்கும் தீமையைப் பெற்றுத் தராத சொற்களைப் பேசுவது தவறு என்கின்றார்.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை மனதளவில் பாதிக்கின்ற தீங்கு விளைவிக்கின்ற சொற்களை பேசாது தவிர்ப்பது மனிதர்களிற்குரிய நற்பண்பாகும்.

சிலர் தம்முடைய சந்தர்ப்பதற்கு ஏற்றாற் போல பொய்களைப் பேசி இறுதியில் பொய்யை மட்டுமே பேசுகின்றவர்களாக வாழ்கின்றனர்.

சிறுவர்களுக்கு சிறுவயதில் இருந்தே பொய் பேசுவதன் தீமைகளையும், உண்மை பேசுவதன் சிறப்புக்களையும் எடுத்துக் கூறுவது அவசியமாகும்.

வாய்மையின் சிறப்பு

“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்” என்கின்றார் திருவள்ளுவர்.

தன்னுடைய உள்ளமறிய பொய்யை பேசாமல் உண்மையாக வாழ்பவன் இந்த உலகத்துள் ஆகக் கூடிய உயர்வைப் பெறுவான் என்கின்றது திருக்குறள். அதுவே வாய்மையின் சிறப்பாகும்.

உண்மையை பேசும் போது மனிதர்களிடையேயும் சமூகத்திலும் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளலாம். உண்மை பேசி நடுநிலையாக நீதி வழியில் வாழ்பவர்களை சமூகம் போற்றுகின்றது.

வாய்மை பற்றிய கருத்துக்கள்

பாரதியார் தனது பாடல்களில் உண்மையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். சிறுவயது தொடக்கம் உண்மை பேசுவதனை ஓர் நற்பண்பாக புகட்டி வளர்க்கப்படல் வேண்டும் என்பததையே சிறுவர்களிற்கு அறிவுரை கூறும் முகமாக “பொய் சொல்லக் கூடாது பாப்பா” என பாடியுள்ளார்.

ஒளவையார் தனது நூலாகிய உலக நீதியில் “நெஞ்சாரப் பொய்தனை சொல்ல வேண்டாம்” என்று குறிப்பிடுகின்றார். எமக்குத் தெரிந்து உண்மையை மறைத்து பொய் கூறக் கூடாது என்பதே அதன் பொருளாகும்.

வாய்மையின் பயன்கள்

வாய்மை பேசுவது ஒரு மனிதனிற்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுத் தருகின்றது. வாய்மை உரைக்கும் போது நம்முடைய சிந்தனைகள் சரியானவையாகவும், நாம் மனச்சஞ்சலம் அற்றவர்களாகவும் வாழ முடியும்.

இதனையே “அகத் தூய்மை வாய்மையால் காணப்படும்” என்று குறிப்பிடுகின்றது திருக்குறள். இதனைத் தவிர ”பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்றும் திருக்குறளில் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு பொய்யை நாம் உரைத்து விட்டால் அதன் பொருட்டு பல பொய்களை கூற வேண்டிய நிலை ஏற்படும். பொய்யை உரைத்து விட்டோம் என்கின்ற குற்ற உணர்ச்சி மனதை வாட்டும். வாய்மை உரைக்கும் போது இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாது. மன அமைதியும் நிதானமும் ஏற்படும்.

வாய்மையால் உயர்ந்தவர்கள்

காந்தியடிகள் தன் வாழ்நாள் முழுவதும் உண்மை பேசி உண்மை வழியில் வாழ்ந்தவர். அதனாலேயே இந்திய நாட்டின் மகத்தானதொரு தலைவராகப் போற்றப்படுகின்றார்.

வாய்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவன் அரிச்சந்திரன். இதிகாசக் காலம் தொடக்கம் இன்றுவரை அவன் நினைவு கூறப்படுவதற்காக காரணம் உண்மை பேசி அறநெறியில் வாழ்ந்ததால் ஆகும்.

முடிவுரை

வாய்மை பேசுவது நன்மையை தேடித்தரும். உண்மையை மறைக்கும் போது ஏற்படும் மனரீதியான சிக்கல்கள் உண்மை பேசுவதால் தவிர்க்கப்படும்.

சிறுவர்கள் பொய் பேசும் போது அவர்களை கண்டித்து வாய்மை உரைப்பதனை ஊக்குவிக்க வேண்டும்.

சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க உண்மையை பேசி உத்தமர்களாய் வாழ்வோமாக.

You May Also Like:
நேர்மை பற்றிய கட்டுரை
பொறுமை பற்றிய கட்டுரை