நூலகத்தின் பயன்கள் கட்டுரை

noolagam payangal katturai in tamil

இந்த பதிவில் “நூலகத்தின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

சிறு பிள்ளைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை நூலகத்தைப் பயன்படுத்தி பல பயன்களை அடைந்து வருகின்றனர்.

நூலகத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நூலகம் என்பது
  3. நூலகம் தரும் நன்மைகள்
  4. நூலகமும் மாணவர்களும் நூலகங்களும்
  5. நூலகத்தில் செய்யக்கூடாதவை
  6. முடிவுரை

முன்னுரை

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்கின்றார் அவ்வையார். அதாவது அவரவர் கற்ற நூல்களைப் பொறுத்தே அறிவுத்திறன் அமையும். இதற்கு முதுகெலும்பாய் திகழ்வது நூலகங்களே ஆகும்.

மனிதனது அறிவாற்றல் விருத்தி என்பது எந்தளவு புதிய விடயங்களை உள்வாங்கி இருக்கின்றனர் என்பதிலேயே தங்கியுள்ளது. நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க அறிவு பெருகும். மதிப்பு கூடும்.

சிறு பிள்ளைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை நூலகத்தைப் பயன்படுத்தி பல பயன்களை அடைந்து வருகின்றனர். நூல்கத்தின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நூலகம் என்பது

கடந்த கால மற்றும் நிகழ்கால கலாச்சாரப் பதிவுகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஒரு இடம் நூலகம் எனலாம்.

மேலும் மனிதகுல வரலாறு மற்றும் சிந்தனைகளின் எழுத்துப் பதிவுகளாக அமைந்திருக்கும் நூல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமித்து வைக்கப்பட்டு ஒருவருக்கோ பலருக்கோ வாசிக்க இடமளிக்கும் போது அவ்விடம் நூலகம் என்றழைக்கப்படுகிறது.

நூலகம் தரும் நன்மைகள்

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். பல்துறை சார்ந்த நூல்களைப் படிக்கும்போது சிறந்த அறிவுடையவர்கள் ஆகலாம். நாம் மொழி அறிவை வளர்க்கவும், வாசிப்புத் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றது.

நூலகங்கள் பாமர மக்களையும் பண்டிதர்கள் ஆக்குகின்றன. நூலகம் அதிகமுள்ள நாடுகளில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் தோன்றுகின்றன.

ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். உலகில் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளவும் நூலகங்கள் உதவுகின்றன. பயன்மிக்க பொழுது போக்காகவும் நூலகம் அமைகின்றது.

நூலகமும் மாணவர்களும் நூலகங்களும்

மாணவர்களும், நூலகமும் உற்ற நண்பர்கள் ஆகும் போது மாணவர்களுக்கு அறிவுப் பஞ்சமே கிடையாது. இன்று பாடசாலைகளில் நூலகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாடப்புத்தகங்களை தவிர ஏனைய நல்ல புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க முடிகின்றது.

மாணவர்களிடத்தில் நூலகப் பயன்பாட்டுப் பழக்கத்தை ஏற்படுத்தல், அகலவாசித்தல், ஆழவாசித்தல் என்பவற்றில் ஆர்வத்தை ஊட்டுதல் என்பதுடன், பயன்மிக்க பொழுது போக்காக வாசிப்பைத் தூண்டுதல் ஆகியவற்றிலும் பாடசாலை நூலகங்கள் உதவுகின்றன.

நூலகத்தில் செய்யக்கூடாதவை

நூலகத்தில் அமர்ந்து படிக்கும் போது சத்தம் போடுதல் கூடாது, அமைதியான முறையில் படித்தல் வேண்டும். நூலக புத்தங்களில் குறிப்புகள் எழுதுவதோ, தாள்களை மடிப்பதோ, கிழிப்பதோ, எச்சில் தொட்டுப் புரட்டுவதோ கூடாது.

நூல்களை அனுமதியின்றி வீட்டுக்கு எடுத்தல் மேலும் திருடுதல் கூடாது. நூலகத்தில் தொலைபேசியைப் பாவித்தலோ அல்லது தொலைபேசியில் உரையாடுதல் கூடாது.

முடிவுரை

ஒரு நாட்டில் நேர்மையுள்ள, புத்திக் கூர்மையுள்ள, நன்னடத்தையுள்ள, எல்லாவற்றிற்கும் மேலாக சிந்திக்கும் ஆற்றல் மிக்க குடிமக்களை உருவாக்குவதில் நூலகங்கள் அளப்பெரிய சேவையாற்றுகின்றன.

அத்தகைய நூலகங்களைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

அறிஞர் அண்ணா கூறியது போல வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும். அப்போதுதான் அறியாமை எனும் இருள் நீங்கும்.

எனவே மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயன் அறிந்து, நூலகம் சென்று நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.

You May Also Like :
ஆறுகளின் பயன்கள் கட்டுரை
விலங்குகளின் பயன்கள் கட்டுரை