ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு

ondiveeran history in tamil

இந்த பதிவில் ஒப்பற்ற மாவீரன் “ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

கிபி 18ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற மன்னன் வீரன் பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கியவர் ஒண்டிவீரன் ஆவார். தனி ஒருவனாக ஒண்டியாக எதிரிகளின் படைகளை துவம்சம் செய்ததால் ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார்.

பூலித்தேவனின் போர்வாள் என்ற சிறப்புக்குரியவர். ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர். ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாகச் செயல்பட்டவர்.

கொரில்லாப் போர் முறையிலும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர். ஈடு இணை எதுவுமே இல்லாத் தளபதி ஒண்டிவீரன்.

புலித்தேவனின் படைத்தளபதி

இன்றைய நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் கிராமத்தில் இருந்து வடமேற்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்தான் நெற்கட்டான் செவ்வல் எனும் கிராமம் ஆகும்.

அதனையும் அதனைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாளையங்களை எல்லாம் ஒன்றிணைத்த பகுதிதான் நெற்கட்டான் செவ்வல் பாளையமாகும்.

இந்தப் பாலயம் என்பது அக்காலத்தில் குறுநில மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் பேரரசுக்கு வரியாக நெல்லை கட்டுவதால் நெற்கட்டும் செவல் என்று அழைக்கப்பட்டது. இவ்வூரை அன்றைய மன்னனான பூலித்தேவன் ஆண்டு கொண்டிருந்தார்.

இப்பகுதியில் காலம் காலமாக முகலாய அரசுக்கு வரி கொடுத்து வந்தனர். இப் பூலித்தேவனின் படைத்தளபதியாக இருந்தவர் தான் ஒண்டிவீரன் ஆவார். பூலித்தேவனின் தலைமைத் தளபதியான ஒண்டிவீரன் பூலித்தேவனின் போர்வாளாகவே கருதப்பட்டார்.

நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்த் திட்டங்கள் வகுப்பதிலும்⸴ மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செய்வதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஆவார்.

போர் வெற்றிகள்

நெற்கட்டான் செவல் திருநெல்வேலி வாசுதேவ நல்லூர்⸴ களக்காடு⸴ கங்கைகொண்டான்⸴ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றியை குவித்துள்ளார்.

அக்காலகட்டத்தில் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர் வரி கேட்டு ஆட்கள் அனுப்பிய போது அதனைக் கட்ட பூலித்தேவன் மறுப்புத் தெரிவித்தார்.

இதன் காரணமாக 1755 ஆம் ஆண்டு பூலித்தேவனுக்கு எதிராக ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். ஆங்கிலேயப் படைக்கு அலெக்சாண்டர் ஹெரான் தலைமை தாங்கினார்.

அப்போது பூலித்தேவனது கோட்டையைத் தகர்க்கும் அளவு ஆங்கிலேயரிடம் வெடிகுண்டு இல்லாத காரணத்தால் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் பூலித்தேவனும் அவருடைய படைத்தளபதியான ஒண்டிவீரனும் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு ஆங்கிலேயப் படையை மதுரைக்கு திருப்பிச் செல்ல வைத்தனர்.

ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் பீரங்கிகளை வைத்தே அவர்களது கதையை முழுவதுமாக முடிக்க சரியான ஆள் ஒண்டிவீரன் என புலித்தேவன் முடிவு செய்தார்.

அந்த ஆற்றல் மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

ஒண்டிவீரன் இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்குத் தன்னந்தனியாகச் சென்றான். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன்.

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையை நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கிக் கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.

அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டியை தரையில் குத்தினான். அந்த ஈட்டி ஒண்டிவீரனது கைகளைக் கிளித்து தரையில் குற்றி நின்றது.

சத்தம் போடாது அந்த வலியைப் பொறுத்துக் கொண்டார். ஈட்டியைக் கையிலிருந்து பிடுங்க முயன்றார் ஆனால் குதிரை கனைத்து விட்டால் எதிரி படை விழித்து விடும் எனக் கருதி இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையால் எடுத்து வெட்டிக் கொண்டு எழுந்தார் அந்த வீரன்.

பின்பு பீரங்கிகளை ஆங்கிலயர்களின் கோட்டையை நோக்கி திருப்பி வைத்து விட்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை.

இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

பூலித்தேவனுக்குப் பிறகும் கூட, அவரது மகன்களுக்கும் உதவியாக இருந்து புதுக்கோட்டைப் போர் முதலியவற்றில் வெள்ளையர்களை எதிர்த்து வெற்றிவாகை சூடியவர்.

இவரைப் பற்றி வீர காவியமே பாடலாம். நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே அவனது வீரத்திற்கு சாட்சி.

ஒண்டிவீரனின் மரணம் பற்றிய முழுத் தகவல்கள் பெரிதாக இல்லை. எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது என நம்பப்படுகிறது.

மணிமண்டபம்

2000 ஆம் ஆண்டு தமிழக அரசிடம் ஒண்டிவீரனின் இனத்தவர்கள் தங்கள் சார்ந்த வீரனுக்கு ஒரு நினைவுமண்டபம் கட்டவேன்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள்.

இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு அப்போதைய தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதியின் மூலம் 49 லட்சம் ஒதுக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் ரூபாய் 50 இலட்சம் செலவில் ஒண்டிவீரன் மணிமண்டபம் தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் 1 மார்ச் 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.

You May Also Like:
ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை
வள்ளலார் வாழ்க்கை வரலாறு