விவசாயம் காப்போம் கட்டுரை

vivasayam kappom katturai in tamil

மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு ஆகும். ஒரு மனிதன் பணம், பதவி, அந்தஸ்து, கௌரவம் போன்ற எதிலும் உயரத்திற்குச் சென்றாலும், உண்ணும் உணவைப் பொறுத்தமட்டில் அனைவருமே விவசாயத்திற்குக் கீழ்ப்பட்டவர்களேயாவர்.

விவசாயம் செழித்தால் விவசாயின் குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடும் செழிப்படையும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

விவசாயம் காப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • விவசாயத்தின் முக்கியத்துவம்
  • விவசாயிகள்
  • இயற்கை விவசாயம்
  • வேளாண்மைப் புரட்சி
  • முடிவுரை

முன்னுரை

“சுழன்று ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

என்கின்றார் வள்ளுவர். அதாவது இந்த உலகம் உழவுத் தொழிலாலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உழவுத் தொழில் இல்லாமல் போனால் பசி, பஞ்சம், பட்டினி, அதிகரித்து மக்கள் உணவில்லாமல் திண்டாடும் நிலை உருவாகும்.

ஒவ்வொரு கைப்பிடி சோறும் உண்ணும் போதும் விவசாயிகளை நினைத்துப் பார்த்தால் உணவை ஒருபோதும் வீணடிக்க தோன்றாது.

விவசாயத்தின் முக்கியத்துவம்

மனிதனை வாழ வைப்பதில் விவசாயம் இன்றியமையாததாக உள்ளது. விவசாயிகளின் பொருளாதாரத் தேவைகளுக்கு விவசாயமே அடிப்படையாகும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதில் விவசாயத்தின் பங்கு அளப்பெரியதாகும்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாயத்தின் தேவையும் அதிகரித்து வருகின்றது. இத்தகைய முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலக நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற விவசாயத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன.

விவசாயிகள்

உணவு இல்லையெனில் மனிதனால் உயிர் வாழ முடியாது. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் எல்லோருக்கும் உணவளிக்கும் மேலாண்மையான தொழிலாக விவசாயம் உள்ளது.

விவசாயி பல்வேறு பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்யவில்லையென்றால் பலரும் பட்டினியில் தள்ளப்படுவார்கள். விவசாயிகளும் அவர்களுடைய வயலில் வேலை செய்பவர்களும் தான் சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கின்றனர்.

விவசாயிகளின் அறிவும், அனுபவமும், உழைப்பும் அளவிட முடியாதவையாகும். விவசாயி இல்லையெனில் நமக்கு உணவு ஒரு கேள்விக்குறியே!

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் என்பது செயற்கை உரம் பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட கழிவுகளை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்ச்சுழற்சி, பசு உரம், மக்கிய குப்பைகள், கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றைப் பயிருக்குப் உரமாகப் பயன்படுத்தும் விவசாய முறையாகும்.

இன்று மக்கள் தொகை அதிகரிதன் காரணத்தால் சத்தான உணவுப் பொருட்களை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மண் வளத்தைப் பாதுகாக்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும், உடலுக்குத் தீங்கற்ற உணவுகளை உற்பத்தி செய்யவும் இயற்கை விவசாயம் முக்கியம் பெறுகின்றது.

வேளாண்மைப் புரட்சி

காலத்திற்கேற்ப நீர்வளத்தைப் பெருக்கவும், பயிர் விளைவைப் பன்மடங்காக்கவும், பூச்சிகளால் பயிரழியாமல் காக்கவும் பல புதிய முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேளாண்மைக்காக ஆராய்ச்சி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நல்ல விளைச்சலுக்கு வீரியமுள்ள விதைகள் இன்றியமையாததாகும். வேளாண் துறையினர் குறைந்த காலத்தில் நிறைந்த விளைச்சலை தரக்கூடிய புதிய வகை நெல் விதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முடிவுரை

நம் முன்னோர்கள் விவசாயத்தை கௌரவத் தொழிலாக செய்து வந்தனர். இத்தகைய உழவுத் தொழிலை நாம் மதிக்க வேண்டும்.

உழவன் கணக்கு பார்த்தான் என்றால் உலகத்து உயிர்கள் அதாவது மனிதன் உட்பட ஒன்று கூட மிஞ்சாது என்பது பழமொழியாகும். இத்தகைய விவசாய தொழிலுக்கு உறுதுணை செய்வோம்.

You May Also Like:

விவசாயம் பற்றிய கட்டுரை

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை