பெண் கல்வி கட்டுரை

Pen Kalvi Katturai In Tamil

இந்த பதிவில் சமூதாயத்தின் தேவைப்பாடான “பெண் கல்வி கட்டுரை” பதிவை காணலாம்.

பெண் கல்வியை ஊக்குவிக்க பலர் இருந்தாலும் அதற்கு எதிராக வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

பெண் கல்வி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெண் கல்வியின் அவசியம்
  3. பெண்கள் நாட்டின் கண்கள்
  4. பெண் கல்விக்கு எதிரான வாதங்கள்
  5. பெண் கல்வியின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

படைப்புகளில் மனித படைப்பானது சிறப்பான படைப்பாகும்.
“ஆணும்⸴ பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமார்..ˮ என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாக்கிற்கிணங்க

ஆணும் பெண்ணும் சமம் என்று நம் அனைவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விடவேண்டும். நாடும்⸴ வீடும் வளம் பெற வேண்டுமெனில் பெண்கல்வி முக்கியமாகும். பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் தெளிவாகக் காண்போம்.

பெண் கல்வியின் அவசியம்

“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகˮ என்று கல்வியின் முக்கியத்துவத்தை அன்றே இரண்டடியில் வள்ளுவர் எடுத்துக் கூறியுள்ளார்.

இவ்வுலகில் பெண்கள் கௌரவமாகவும்⸴ கம்பீரமாகவும் வாழ வேண்டுமெனில் பெண்களுக்கு கல்வியறிவு அவசியம். பெண்கல்வி நாட்டுக்கு மிகவும் முக்கியமாகும்.

வீட்டில் உள்ளவர்கள் கல்வியறிவு பெற வேண்டுமெனில் பெண் கல்வி அறிவைப் பெறுவது தேவைப்பாடாகும். சமுதாயம் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் பெண்கல்வி அவசியமாகும்.

பெண்கள் நாட்டின் கண்கள்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பெண் கல்வியிலும் தங்கியுள்ளது. பெண்கள் கல்வியால் தான் முன்னேற்றம் காண வேண்டும்.

பெண் கல்வி⸴ பெண்கள் முன்னேற்றம் பற்றி எல்லோரும் அறியும்படி கூறி பெண் விடுதலைக்கு பாடுபட்ட பெரியார் “பெண் முன்னேற்றம் அவர்களின் முயற்சியாலேயே முடியும்ˮ என்றார்.

இன்று நாட்டில் பெரும் பதவிகளில் பெண்களின் பங்களிப்புள்ளது. பல துறைகளைப் பெண்கள் முனைப்புடன் நடத்தி வருகின்றனர்.

வைத்தியத்துறை⸴ சட்டத்துறை⸴ தொழில்நுட்பத்துறை⸴ அரசியல் போன்ற பல துறைகளில் இவர்களின் பங்கு அளப்பரியதாகும்.

பெண் கல்விக்கு எதிரான வாதங்கள்

பெண் கல்வியை ஊக்குவிக்க பலர் இருந்தாலும் அதற்கு எதிராக வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றது. பெண்களின் வளர்ச்சியையும்⸴ முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்த வீணர்கள் சிலர் பற்றி காண்போம்.

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்குˮ என்று உளறி வைத்தனர். மேலும் “பெண் புத்தி பின் புத்திˮ எனக் கூறுகின்றனர்.

வறுமை, சமுதாயக் கட்டுப்பாடுகள் போன்ற பல காரணங்களை காரணம் காட்டி பெண் கல்விக்கு தடையாகச் செயற்படுகின்றனர். பருவமடைந்த பின் பெண்கள் கல்வி கற்க மறுப்பு தெரிவிக்கும் போக்கு இருக்கின்றது.

பெண் கல்வியின் பயன்கள்

பெண்கள் கல்வி கற்கும் போது நாட்டில் சமுதாய ரீதியில் மாற்றங்கள் அதிகரிக்கும். குழந்தைத் திருமணங்களின் சதவீதம் குறையும். பெண்கல்வி மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதனால் பொருளாதார ரீதியில் அவர்கள் முன்னேற்றம் அடைவர்.

பெண் கல்வி மூலம் அறியாமை நீங்கும். உடல் சார்ந்த⸴ சமூகம் சார்ந்த உரிமைகளை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடும் துணிச்சல் ஏற்படும்.

இன்று உலகின் பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் கடமைகளை ஆற்றியுள்ளனர். விளையாட்டுத்துறை முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை பல்வேறு துறை வரை பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

கல்பனா சாவ்லா முதல் பி.வி சிந்து⸴ இந்திராகாந்தி வரை பெண்கள் சாதனை படைத்துள்ளனர். இவை கல்வியின் பயனாலாகும்.

முடிவுரை

“ஊது குழலை கையில் எடுக்கும் பெண்கள் எழுதுகோலை கையில் எடுக்க வேண்டும்ˮ என்று பாரதி பாடியுள்ளார். இதன்மூலம் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

இதற்கிணங்க பெண்கள் கல்வி என்னும் ஒளி பெற்றால் நாடு சிறந்தோங்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உலகின் மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்குபவர்கள் பெண்கள். அவர்கள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். பெண் கல்வியை முன்னேற்றுவோம். அதில் நாட்டின் முன்னேற்றத்தைக் காண்போம்.

You May Also Like:
இளமையில் கல்வி கட்டுரை
கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை