மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

maram valarpom katturai in tamil

இந்த பதிவில் உலகின் சமநிலைக்கு அவசியமான “மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை” பதிவை காணலாம்.

மரங்களின் உதவியின்றி மனிதகுலம் வாழாது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மரங்களின் அவசியம்
  3. மரங்களின் பயன்கள்
  4. மரங்களின் அழிப்பு
  5. மரங்களை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள்
  6. மரங்களைப் பாதுகாப்போம்
  7. முடிவுரை

முன்னுரை

இயற்கையின் அற்புதப் படைப்புக்களில் ஒன்றாகவும்⸴ இயற்கை அன்னை மடியில் வளர்ந்த முதல் குழந்தைகளாகவும் மரங்கள் திகழ்கின்றன. நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரங்களும் தான் நம் சமுதாயத்தையும்⸴ அடுத்துவரும் சமுதாயத்தையும் வாழ வைக்கும்.

மரங்களின் உதவியின்றி மனிதகுலம் வாழாது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத மரங்களை நாம் வளர்க்க வேண்டும். இதனை மறந்து மனிதன் மரங்களை வெட்டி சுயலாபம் காண்கின்றான்.

இதனால் பல விளைவுகளையும் எதிர் நோக்கிய வண்ணமுள்ளான். அவ்வகையில் மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

மரங்களின் அவசியம்

மரங்கள் உயிர் வாழ்க்கைக்கு அவசியமாகின்றது. மரங்கள் இன்றி மனிதனால் உயிர்வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும். மரங்கள் மழை பொழியச் செய்கின்றன.

சூரிய வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத உயிரினங்களுக்கு மரங்கள் நிழலை கொடுக்கின்றன.

மண்சரிவு⸴ மண்ணரிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து மனிதனைக் காப்பதற்கு மரங்கள் அவசியமாகின்றன.

மரங்கள் இல்லையெனில் மனிதன் இல்லை. உயிர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் பசியைப் போக்கவும் மரங்கள் அவசியமாகின்றன.

மரங்களின் பயன்கள்

மரங்கள் மனிதனுக்கும்⸴ பூமிக்கும் பயன்களைத் தருகின்றன. காற்று⸴ மழை போன்றவற்றைக் கொடுக்கின்றன. உயிர் வாழ்க்கைக்குத் உறுதுணையாகின்றன. மனிதர்களுக்கு நிழல் கொடுக்கின்றன.

அதுமட்டுமன்றி பறவைகள் விலங்குகளின் இருப்பிடமாகவும் திகழ்கின்றன. சூரியக் கதிர்வீச்சு⸴ வேகமான காற்று போன்றவற்றிலிருந்து மனிதர் முதல் உயிரினங்களைப் பாதுகாக்கின்றன.

அழகான பூக்கள்⸴ காய் கனிகளைத் தந்து பூமியை மேலும் அழகுபடுத்துகின்றன. உண்பதற்கு காய்கறிகள்⸴ பழங்கள்⸴ கிழங்கு வகைகள்⸴ கீரை வகைகள் தருகின்றன. காய்ந்த மரங்கள் கூட நமக்கு எரி பொருளாகப் பயன்படுகின்றன.

மரங்களின் அழிப்பு

இன்று உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் மனித சுயநலத்திற்காகவும்⸴ மனித தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டுவிட்டன. இன்றும் அழிக்கப்பட்ட வண்ணமேயுள்ளன.

குறிப்பாக சேனைப் பயிர்ச்செய்கை⸴ கட்டுமானத் தேவைகள்⸴ குடியிருப்பு⸴ தொழிற்சாலைகள் அமைத்தல்⸴ சாலை விரிவாக்கம்⸴ விமான நிலையங்கள் அமைப்பு⸴ சுரங்கப் பாதைகள் அமைப்பு போன்ற பல காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன.

இவ்வாறு மரங்களை அழிப்பதனால் அதன் பயன்கள் மறைந்து எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகின்றன.

காட்டுத்தீ⸴ சூறாவளி⸴ வெள்ளப்பெருக்கு⸴ வறட்சி போன்ற இயற்கை காரணங்களாலும் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

மரங்களை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள்

முற்காலத்தில் போல் இல்லாது மனித வாழ்க்கை மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மரங்களை வெட்டுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது.

பயிர்ச்செய்கை நேரத்தில் வரட்சியும் அறுவடை நேரத்தில் புயலும் தோன்றுகின்றது. நாள்தோறும் வெப்பம் அதிகரிக்கின்றது. பயிர் நிலங்கள் தரிசு நிலங்களாகின்றன. பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் வறண்டு போகின்றன.

இதனால் விலங்குகளும்⸴ பறவைகளும் பெரிதும் பாதிப்படைகின்றன. மண்சரிவு ஏற்படும் போது வளமான மண் எடுத்துச் செல்லப்படுகின்றது.

மரங்களைப் பாதுகாப்போம்

அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட சாலையெங்கும் மரங்கள் நட்டான் என்பதே அதிகம் நினைவிலுள்ளது. அவ்வகையில் நாமும் மரங்களை நட்டு அதனைப் பாதுகாக்க வேண்டும்.

சுபகாரியங்களை மேற்கொள்ளும் போது அதன் நினைவாக மரங்களை நடலாம். அதன் பயனை நாம் பெற்றுக் கொள்ளலாம். சிறுவயதிலிருந்தே மரங்களின் அவசியத்தையும்⸴ அதன் பயனையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் மனிதர்கள் மரங்களை நேசிப்பார்கள். ஒரு மரத்தை வெட்டினால் அதற்குப் பதிலாக பல மரக்கன்றுகளை நடவேண்டும்.

முடிவுரை

இன்று நாம் தண்ணீரை பணம் செலவழித்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே விழித்துக் கொள்வோம்.

மரங்களை நாட்டி பயன்களைப் பெறுவோம். மரங்கள் நம் மண்ணின் வரங்கள். எனவே மரங்களை நாம் பாதுகாப்போம். மரங்கள் நம்மைக் காக்கும்.

You May Also Like :
மரம் வளர்ப்போம் சிறுவர் கட்டுரை
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் கட்டுரை