விசுவாமித்திரர் வரலாறு

vishwamitra history tamil

ஆரம்ப காலத்தில் அரசனாக வாழ்ந்து பின்னர் வசிட்டர் உடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, கடுமையான பல தவங்களை புரிந்து மிகப்பெரிய முனிவராக மாற்றம் பெற்றவரே விசுவாமித்திரர் ஆவார்.

இவரே காயத்ரி மந்திரத்தினதும், பழைய ரிக் வேதத்தினது பல பகுதிகளை சிறப்புற எழுதியுள்ளார் என்றும் பல புராணங்கள் கூறுகின்றன.

இயற்பெயர்கௌசிகன்
தந்தைகாதி
மனைவி மேனகை

விசுவாமித்திரரின் பிறப்பு

காதி எனும் அரசனுக்கு ஆண் குழந்தை ஏதும் இருக்கவில்லை. ஒரே ஒரு பெண் குழந்தை மாத்திரமே காணப்பட்டது. அவளது பெயர் ” சத்யவதி” ஆகும். அழகு பொருந்திய அவள் திருமண வயதை அடைந்ததும் அவளுக்கு காதி அரசர் நல்ல வசதியான அரசனைப் பார்த்து திருமணம் செய்ய உத்தேசித்து பணியில் ஈடுபட்டார்.

அவ்வேளையில் காதி அரசரைக் காண வந்த “ரிஷிகர் என்ற முனிவர் சத்யவதியின் அழகையும், குணத்தையும் கண்டு வியந்து அவளை அவருக்கு திருமணம் செய்து தரும்படி காதி அரசரிடம் கேட்டுக்கொண்டார்.

அரசனுக்கு சத்யவதியை ரிஷிகர் முனிவருக்கு மணமுடித்து கொடுப்பதற்கு துளியும் விருப்பமில்லை. தான் மறுத்துவிட்டால், முனிவர் சபித்து விடுவார் என்ற ஐயத்தில்,

அவரை எவ்வாறாவது சூக்குமமாக தவிர்க்க எண்ணி, ஒருநாள் ரிஷிகர் முனிவரை அழைத்து, தனக்கு ஆயிரம் வெள்ளைக் குதிரைகள் ஒரு காது மாத்திரம் கருப்பாக இருக்குமாறு, ஒப்படைத்தால் தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறினார்.

ரிஷிகர் முனிவர் வர்ண பகவானை நோக்கி வேண்டி காதி அரசர் கூறிய அடையாளங்களுடன் கூடிய ஆயிரம் குதிரைகளை பெற்று வந்து மன்னனிடம் ஒப்படைத்து சத்தியவதியை திருமணம் செய்து இன்புற்று வாழ்ந்தார்.

ரிஷிக முனிவர் சத்யவதிக்கு வரம் கொடுக்க ஆசை கொண்டு, அவளை அழைத்து உனக்கு என்ன வரம் வேண்டும் என வினவினார். அப்போது அவள், எனக்கு இப்போதும் ஏதும் வேண்டாம். தேவை ஏற்படின் நானே கேட்டு பெற்றுக் கொள்வதாக கூறினார்.

மறுநாள் சத்யவதி தனது தாயாரை காண அரண்மனைக்கு சென்றார். அங்கே தாயாரிடம் பல விடயங்களைப் பற்றியும் தனது கணவனை பற்றி உரையாடினார். பின்னர் அவளுடைய கணவர் தனக்கு வரம் தருவதாக கூறியதையும், தான் அதை பின்னொருநாள் கேட்டுப் பெற்றுக் கொள்வதாக கூறியதையும், தாயாரிடம் கூறுகின்றார்.

பின்னர் தாயாரை நோக்கி உங்களுக்கு ஏதேனும் உள்ளதா அன்னையே ஏதும் இருந்தால் என்னிடம் கூறுங்கள், அதை நான் எனக்காக கேட்பது போல் கேட்டு எனது கணவனிடமிருந்து பெற்றுத் தருகிறேன் என்று கூறினார்.

அதற்கு அவளது தாயார் “உனக்கு ஒரு சகோதரன் இருந்தால் நன்றாக இருக்கும். இது என்னுடைய நீண்டநாள் ஆசை. அது இன்று வரை நிறைவேறவில்லை. இது நடந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார். பின்னர் சிறிது நேரம் தாயாருடன் உரையாடிவிட்டு தனது இல்லம் நோக்கி வந்தாள்.

மறுநாள் சத்யவதி தன் கணவரிடம் நீங்கள் தருவதாகக் கூறிய அந்த வரத்தை இப்போது எனக்கு தருவீர்களா? என்று கேட்க, அவர் யாது வேண்டும்? என வினவினார். “எனக்கு புத்திர பேறு வேண்டும் அதே போல எனது அன்னைக்கும் புத்திரப்பேறு வேண்டும்” என கேட்கின்றாள்.

ரிஷிகளும் ஒப்புக் கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து வரும்போது, இரண்டு பிரசாதங்களை கொண்டுவந்து அவற்றில் ஒன்றை குறிப்பிட்டு இதனை நீயும் மற்றையதை உமது தாயாரும் உட்கொள்ள வேண்டும்.

அத்தோடு நாளை காலை இருவரும் நீராடிவிட்டு, நீ அத்தி மரத்தையும் உமது அன்னையார் அரச மரத்தையும் சுற்றி வலம் வர வேண்டும் என்று கூறினார். மறுநாள் தனது தாயாரிடம் சென்று நடந்தவற்றை கூறுகிறாள்.

சத்யவதியின் அன்னையார் “என் மீது கோபம் கொள்ளாதே, நான் கூறுவதை சற்று நிதானமாக கேள். எந்த தந்தையும் தனது மகனே சிறந்தவனாக திகழ வேண்டும் என எண்ணுவார்கள்.

எனவே உனது கணவனார் உனக்கு கூறியவற்றை நானும், எனக்கு கூறியவற்றை நீயும் மாறி செய்வோம். உனது சகோதரனுக்காக இதை செய்ய மாட்டாயா” என்று கேட்க, சத்யவதியும் ஒப்புக்கொண்டு அன்னை கூறியவாறு செய்கின்றாள்.

நாட்கள் செல்ல செல்ல சத்தியவதியின் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு ரிஷிகள் முனிவர்கள் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. “நான் அன்று கூறியவற்றை செய்வதில் ஏதும் தவறுகள் செய்து விட்டீர்களா?” என சத்தியவதியிடம் கேட்கிறார்.

சத்யவதி நடந்தவற்றை கூற முனிவர் அதிர்ச்சி அடைந்து “நான் ஒரு முனிவர் அதனால் எனக்குப் பிறக்கப் போகும் மகன் சாத்வீக குணங்களைக் கொண்ட ஒரு பிராமணனாகவும்,

உமது தந்தை ஓர் அரசன் அதனால் அவரது மகன் போர் குணங்களை உடைய சத்திரியனாகவும் பிறக்க வேண்டிய செய்தேன்.” என்று கூறுகிறார். சத்யவதி தமது தவறை திருத்துமாறு வேண்டுகிறார்.

சற்று தியானம் மேற்கொண்டு விட்டு, “எமக்கு பிறக்கும் குழந்தை அந்தணராகவே காணப்படுவான். ஆனால் உமது அன்னைக்கு பிறக்கும் குழந்தை சத்திரியனாக இருந்தாலும் பிற்காலத்தில் முனிவராக மாறி விடுவான்” என்று கூறுகிறார்.

இதன் விளைவாக, ரிஷிக முனிவருக்கும் பிறந்த குழந்தை வளர்ந்து ஜமத்கன் என முனிவராக காணப்பட்டார்.

காதி அரசருக்கு பிறந்த குழந்தை ஆரம்ப காலத்தில் சத்திரியனாக காணப்பட்டாலும், பிற்காலத்தில் பல தவங்களை புரிந்து விசுவாமித்திரர் என்ற முனிவராக திகழ்கிறார்.

முனிவராக மாறியமை

காதி அரசரின் மறைவுக்குப்பின் கௌசிக மன்னர் நாட்டை ஆண்டு வந்தான். அவனது காலத்தில் நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. ஒருநாள் கௌசிக மன்னர் தனது படைவீரர்களுடன் காட்டு வழியே செல்லும்போது, வசிட்ட முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர்.

இவர்களைக் கண்ட வசிட்ட முனிவர் அவர்களுக்கு அன்னம் அளிக்க விரும்பினார். ஆனால் கௌசிக மன்னர் “காட்டுக்குள் இருக்கும் உங்களிடம் எங்கள் அனைவருக்கும் உணவு அளிக்கக்கூடிய உணவு பொருட்கள் காணப்படாது.

எனவே எங்களுக்கு உணவு ஏதும் வேண்டாம்.” என்று கூறினார். ஆனால் வசிட்ட முனிவர் “இல்லை. என்னால் உங்கள் அனைவருக்கும் உணவு அளிக்க முடியும்” என்று கூறி அனைவரையும் அமர செய்தார்.

சிறிது நேரத்தின் பின் அனைவருக்கும் பலவகையான உணவுப் பொருட்களை அன்புடன் பரிமாறினார். உணவருந்திய பின் கௌசிகர், வசிட்ட முனிவரை நோக்கி “உங்களால் எவ்வாறு எங்கள் அனைவருக்கும் சிறந்த முறைகள் உணவளிக்க முடிந்தது” என்று வினவினார்.

அப்போது வசிட்ட முனிவர் ஆசிரமத்திற்கு பின்னே அழைத்துச் சென்று, காமதேனு பசுவை காண்பித்து, ” இது தெய்வீக பசு காமதேனு ஆகும். இதனுடைய கன்றான “சபலை” நாம் விரும்பும் அனைத்தையும் நமக்கு வழங்கும் என்று கூறினார்.

இதனைக்கேட்ட கௌசிக மன்னர் இந்த பசுவானது தம்முடன் இருந்தால், நம்முடைய நாட்டில் பஞ்சம் தீரும் என எண்ணி, அவரிடம் அந்த பசுவை தருமாறு வேண்டினார்.

அதற்கு வசிட்டர் ” நீங்கள் அழைத்து அந்த பசு வந்தால் எவ்வித தயக்கமுமின்றி நீங்கள் அதனை அழைத்து செல்லலாம்.” என்று கூறினார். ஆனால் சபலை பசுவானது கௌசிகனுடன் செல்வதற்கு தயங்கி வசிட்ட முனிவரிடம் சென்றது.

இதனால் கோபமுற்ற கௌசிக மன்னர் தனது படையினரிடம் அந்த பசுவினை கட்டி இழுத்து வருமாறு கூறினார். பசுவை கட்டி இழுத்து துன்புறுத்துவதை கண்ட வசிட்டர் சபலையின் உதவியுடன் படைவீரர்கள் எரிந்து சாம்பலாக போகும்படி சபித்தார்.

வசிட்டரின் தவ வலிமையைக் கண்டு வியந்த கௌசிக மன்னர் தானும், உங்களைப்போல பிரம்மரிஷி ஆகவேண்டும் என்று கூறினார்.

அதற்கு வசிட்ட முனிவர் பிரம்மரிஷி ஆவது என்பது சாதாரண விடயமல்ல. கடும் தவம் மேற்கொள்ள வேண்டும். அரச சுக போகங்களை அனுபவித்து வாழ்ந்த உங்களால் கடும் தவம் மேற்கொள்ள இயலாது என்று கூறினார்.

ஆனால் கௌசிக மன்னர் தன்னால் இயலும் என்று கூறி, “வசிட்டரே! உம்முடைய வாயால் எம்மை பிரம்மரிஷி என்று ஒரு நாள் நீங்கள் கூறுவீர்கள்.” என்று உரைத்து விட்டு, கடும் தவம் மேற்கொள்ள சென்றார்.

சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இதனால் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி அவருக்கு பூரண தனுர் வேதத்தையும், சகல அஸ்திரங்களையும் வழங்கினார்.

அவற்றை அனைத்தையும் பெற்றுக் கொண்ட கௌசிகர் வசிட்டரிடம் வந்து அவ்வாயுதங்களை கொண்டு அவரை தாக்கினார். ஆனால் வசிட்ட முனிவர் அவரது தவ வலிமையால் அவரது தண்டத்தை கொண்டு கௌசிகனது அஸ்திரங்களின் வலிமை இழக்கச் செய்தார்.

பின்னர் பிரம்ம தேவனை நோக்கி கடும் தவம் புரிந்து இராஜரிஷிபட்டத்தையும், மகாரிஷி பதவியையும் பெற்றுக் கொண்டார். அன்றிலிருந்து விஸ்வாமித்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.

திரிசங்க சொர்க்கம் அமைத்தமை

திரிசங்க என்னும் அரசன் தனது பூத உடலுடன் சொர்க்கம் செல்ல ஆசை கொண்டான். அதற்காக தனது குலகுருவான வசிட்டரிடம் சென்று தனது ஆசையை தெரிவித்தான்.

வசிட்டர் அதனை மறுத்து விடவே, வசிட்டரின் மகன்களிடம் சென்று தனது கோரிக்கையை முன்வைத்தார். குருவையும், தந்தையையும் மதிக்காததால் மகன்கள் அவரை சண்டாளராகும்படி சபித்தார். இதனால் அரசன் விசுவாமித்திரரின் உதவியை நாடினான்.

விசுவாமித்திரர் தனது தவ வலிமையால் திரிசங்க அரசனை சொர்க்கம் அனுப்புவதாக கூறி யாகங்கள் மேற்கொண்டார். இதன் விளைவாக அரசன் சொர்க்கம் சென்றான். அங்கு சென்ற திரிசங்கனை இந்திரபகவான் கீழே தள்ளி விட்டார்.

கீழே விழும் திரிசங்க அரசனுக்கு என்று சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையிலேயே “திரிசங்க சொர்க்கம்” என்னும் உலகை விசுவாமித்திரர் தனது தவத்தின் முழு பயனையும் கொண்டு அமைத்தார்.

மேனகை திருமணம்

“திரிசங்க சொர்க்கம்” அமைத்ததன் விளைவாக தனது தவ வலிமையை முற்றாக இழந்த விசுவாமித்திரர் பிரம்மாவை நோக்கி தவம் புரிய ஆரம்பித்த போது, இவரை கண்டு அச்சம் கொண்ட இந்திரன் இவரது தவத்தை கலைக்க முகமாக, இந்திர லோகத்தில் இருந்து மேனகையை பூலோகம் அனுப்பி, அவரின் முன் நடனமான செய்தார்.

மேனகையின் நடனத்தை கண்டு மயங்கி விசுவாமித்திரர் தவம் கலைந்தார். பின்னர் மேனகையை திருமணம் செய்து கொண்டார்.

சிறிது காலத்தின் பின் மீண்டும் பிரம்மதேவனை நோக்கி தவம் புரிந்தார்.

You May Also Like :
பூணூல் வரலாறு
பாண்டுரங்கன் வரலாறு