வீரத்தியாகி சுகதேவ் வரலாறு

sukhdev history in tamil

இந்திய நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களால் ஆங்கிலேயரிடையே நடுக்கத்தை ஏற்படுத்தி, 1931 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் விடுதலைக்காக தங்கள் மரணத்தையே செயல்திட்டமாக்கி, தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரர்களான பகத்சிங், ராஜகுரு என்பவர்களுடன் சுகதேவ்வும் குறிப்பிடத்தக்க ஒருவராக காணப்படுகின்றார்.

பிறந்த ஆண்டு1907 மே 15
பிறந்த இடம்லூதியானா, பஞ்சாப்
தந்தைராம் லால் தாப்பர்
இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
இறப்பு1931 மார்ச் 23 (அகவை 24)

ஆரம்பகால வாழ்க்கை

சுகதேவ் தாபர் தன்னுடைய 3 வயதில் தந்தையை இழந்தார். இவரது சித்தப்பா லாலா அசிந்தராம் உடன் வளர்ந்தார். அவர் ஒரு தேசபக்தர் ஆவார். ஆரிய சமாஜத்தில் பற்றும் கொண்டவர். அவரிடம் வளர்ந்ததால் இவரும் சிறு வயது முதலே ஆரிய சமாஜக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடும், தேசப்பற்றும் கொண்டிருந்தார்.

அத்துடன், யோகா பயிற்சிகள், மந்திரங்கள் கற்பதிலும் வல்லவராக இருந்த சுகதேவ் தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தார். ஏழு வயது வரை “லாயல்பூர் தன்பத்மல்” பள்ளியில் பயின்றார்.

பள்ளி மாணவனாக இருந்த இவரை இங்கிலாந்து அரசின் ‘யூனியன் ஜாக்’ அமைப்பின் கொடிக்கு சல்யூட் அடிக்கச் சொன்னார்கள். அதனை சுகதேவ் விடாப்பிடியாக மறுத்து அடி, உதை, தண்டனையைப் பெற்றார்.

சுகதேவ் “லாகூர் தேசியக் கல்லூரி”யில் 1920-ல் சேர்ந்தார். அப்போது பகத்சிங்குடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நட்பு கொண்டார்.

1921-ல் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டார். அந்நிய ஆடைகளை எறிந்துவிட்டு, கதராடை அணிந்தார். அத்துடன் “சைமன் கமிஷன்” வருகையை எதிர்த்து, பகத்சிங்குடனும், தோழர்களுடனும் இணைந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் மேற்கொண்டார்.

சகோதரிகளும், தாயும் இவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். ‘நாட்டுக்காக சேவையாற்றப் போவதால் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டு நாட்டுக்காக போராடினார்.

பின்னர், இந்துஸ்தான் குடியரசுப் படையில் தன்னை இணைத்துக்கொண்டார். இயக்கம் எத்தகைய பணியை அளித்தாலும் அதை முழு மனதுடன் செய்ததால், பஞ்சாப் மாநிலத்துக்கான பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது இலட்சியம்

சோஷலிசம் குறித்து நன்கு அறிந்தவர். அதீத நினைவாற்றல் கொண்டவர். கடினமான தத்துவ நூல்களைக்கூட இரண்டு, மூன்று நாட்களில் படித்து விடுவார். குறிப்புகள் எடுக்காமலேயே, அதில் உள்ள பல விஷயங்களை மேற்கோளுடன் கூறுவார்.

கட்சித் தோழர்களின் தேவைகளை அறிந்து, அக்கறையோடு நிறைவேற்றிக் கொடுப்பார்.

நாட்டில் சோஷலிச ஜனநாயக அமைப்பை நிறுவுவதே அவரது உயரிய இலட்சியமாகக் காணப்பட்டது.

சிறை வாழ்க்கை

“சைமன் கமிஷன்” வருகையை எதிர்த்து காதர் ஆடை அணிந்து, பகத்சிங்குடனும், தோழர்களுடனும் இணைந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் மேற்கொண்டமையால் சுகதேவ் கைது செய்யப்பட்டார். சிறிது காலத்தின்பின் விடுதலையானார்.

நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது தொடர்பாக பகத்சிங் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் காவல்துறை அதிகாரி “சாண்டர்ஸ்” கொலை மற்றும் “லாகூர் சதி” வழக்குக்காக சுகதேவ் 1929-ல் கைது செய்யப்பட்டார்.

1930 லாகூர் மத்திய சிறையில் 15 நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உணவு அளிக்க முயன்ற காவல் அதிகாரிகளைத் தாக்கினார். அத்துடன் சிறையில் பகத்சிங் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

காந்தியடிகளுக்கு எழுதிய கடிதம்

மகாத்மா காந்தி புரட்சிப் போராளிகளான சுகதேவ், பகத்சிங், ராஜகுரு போன்றோர் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கை புரட்சியாளர்களை மிகவும் ஆத்திரமடையச் செய்தது.

இது குறித்து பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் சிறைக்குள் விவாதித்தனர். இறுதியில், புரட்சியாளர்கள் சார்பாக மகாத்மா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுவது என்றும், அதை சுகதேவ் எழுத வேண்டுமென்றும் முடிவு செய்தனர்.

அம்முடிவின்படி, சுகதேவ் காந்திக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் வடித்திருந்த சிந்தனைச் சிதறல்களை சுதந்திர புரட்சிப் போராளிகளின் எண்ணங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தார்.

அவர் அந்த கடிதத்தில் கூறியிருந்த விடயங்கள் சில

இந்த நாட்டில் சோசலிச சனநாயக அமைப்பை நிறுவுவதுதான் புரட்சியாளர்களின் இலட்சியம் அந்த இலட்சியத்தில், திருத்தத்திற்கு இடமில்லை, புரட்சியாளர்கள் எவரும் வறட்டுக் கற்பனையாளர்கள் அல்ல. அவர்களுக்கு அழிவுச் செயல்களில் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகிறது எனத் தாங்களும் கருதமாட்டீர்கள் இதை நான் நம்புகிறேன்.

இந்த உண்மையைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் ஒவ்வொரு நடவடிக்கை எடுப்பதற்கும் முன்னால், நாங்கள் அனைத்து நிலைமைகள் பற்றியும் சிந்திக்கிறோம். நாங்கள் எங்கள் பொறுப்புகளை உணர்ந்து தான் இருக்கிறோம். நாங்கள் எங்கள் புரட்சிகரமான திட்டத்தில் ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கே பிரதான இடமளிக்கிறோம் என்றாலும், இன்றைய சூழ்நிலையிலே அழிவுச் செயல்களைத் தான் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது.

புரட்சியாளர்களின் தலைமையிலே, அவர்களுடைய கொடியின் நிழலில் நம் தாய்நாட்டு மக்கள் உயர்ந்த சோசலிச சனநாயகக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

காலத்தின் தேவைகளைப் பொறுத்து புரட்சியாளர்கள் தீர யோசித்து தங்களையும், தங்கள் போராட்ட வழிமுறைகளையும் மாற்றிக் கொள்வதுண்டு. அத்துடன், எங்கள் நோக்கம் நிறைவேறும் வரைத் தொடர்ந்து போராட்டம் நடத்த நாங்கள் கடமைப்பட்டவர்கள்.

புரட்சியாளர்கள் போராட்டமுறை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக உருக்கொள்கிறது. சில நேரங்களில் அது வெளிப்படையாகவும், சில நேரங்களில் அது இரகசியமாகவும் உருவம் கொள்கிறது. சில சமயம் வெறும் கிளர்ச்சி மட்டுமே நடக்கிறது. சில சமயம் ஜீவமரணப் போராட்டமாக நடக்கிறது.

பிரிட்டீஷாருடன் உடன்பாடு செய்து கொண்டு நீங்கள், கிளர்ச்சியை நிறுத்தி விட்டீர்கள். அதனால் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

ஆனால், புரட்சியாளர்கள் இன்றும் சிறையில் வதைபடுகிறார்கள். 1915 ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட கதர் கட்சியைச் சேர்ந்த போராளிகள் தண்டனைக்காலம் முடிந்த பிறகும் சிறைக் கொட்டடிகளில் இன்னும் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

தில்லி, சிட்டகாங், பம்பாய், கல்கத்தா, லாகூர் போன்ற சதி வழக்குகள் இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன. பல போராளிகள் தூக்குமேடையை எதிர்நோக்கி உள்ளனர்.

இறப்பு

பிரித்தானிய காவல்துறை அதிகாரியான சான்டர்சு கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு, எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனர்.

You May Also Like :
மனிதம் காப்போம் கட்டுரை
செக்கிழுத்த செம்மல் கட்டுரை