மனிதனை குடிக்கும் மது கட்டுரை

manithanai kudikkum mathu katturai

இந்த பதிவில் “மனிதனை குடிக்கும் மது கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதனின் மதுப் பழக்கமானது அவனை மட்டுமன்றி சமூகத்தையும் சீரழித்து வருகின்றது.

மனிதனை குடிக்கும் மது கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாழ்க்கையை அழிக்கும் குடிப்பழக்கம்
  3. மது குடிப்பதால் ஏற்படும் நோய்கள்
  4. குடிப்பழக்கத்தால் ஏற்படும் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள்
  5. மது ஒழிப்பு
  6. முடிவுரை

முன்னுரை

மனிதன் தனது தீய பழக்கவழக்கங்களால் அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் மனிதனாகவும் படைத்துள்ளது.

எனினும் மனிதனின் மதுப் பழக்கமானது அவனை மட்டுமன்றி சமூகத்தையும் சீரழித்து வருகின்றது. மனிதனை செயல்பட இயலாத மனிதனாக மாற்றுகிறது.

மனிதனை குடிக்கும் மது அதனது தாக்கம் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் போன்ற பலவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வாழ்க்கையை அழிக்கும் குடிப்பழக்கம்

சமீப காலங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் மது பாவனைக்கு அடிமையாகி உள்ளமை வருத்தத்திற்குரியது ஆகும்.

பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் மதுப்பழக்கம் பின் எந்நேரமும் மதுவைப் பற்றி நினைவுடனேயே இருக்க வைத்துவிடும். குடிக்கும் அளவு எல்லை மீறிப்போகும். நாளடைவில் வாழ்க்கையையே சீரழிக்கும் நிலையை உருவாக்கி விடுகின்றது.

மது குடிப்பதால் ஏற்படும் நோய்கள்

குடிப்பதால் மூளையின் செயல்பாடு குழம்பிப் போகிறது. மூளையில் இரத்தக்கசிவு ஏற்படவும், மூளையில் சின்னச் சின்ன அடிபட்டாலும் மூளையில் இரத்தம் உறைதல் ஏற்படும்.

மதுவால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பு மிகவும் மோசமானதாகும். எந்த நிலையிலும் இந்த நரம்பு பாதிப்பு சரியாகாது. சிறுமூளை, பெருமூளை பாதிப்பு போன்றன ஏற்படும்.

கை நடுக்கம், கால்நடுக்கம், உடல் தளர்ச்சி, ஞாபக சக்தி குறைவு ஏற்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். சக்கரை நோய் கணைய புற்றுநோய் போன்றவையும் ஏற்படுகின்றன.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள்

குடிப்பழக்கம் ஒழுக்க நெறிமுறை தவறி நடக்கச்செய்கிறது. மரியாதைக் குறைவாக பேசச்செய்வதோடு, எந்தப் பெரிய குற்றத்தையும் செய்ய, மனிதன் மதுவைத் துணையாகக் கொள்கிறான்.

இன்று நாட்டில் நடைபெறும் அதிகக் குற்றங்கள் மதுவின் துணையோடு நடப்பவை தான். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகப் பங்கு மதுவுக்கே உண்டு.

அன்றாடம் வேலை செய்வோர் குடிப்பதால், அவர்களின் வேலையின் தரம் குறைகிறது. முக்கியமாக ஓட்டுனர்கள் குடித்துவிட்டு ஓட்டுவதால் சிலசமயங்களில் விபத்து நிகழ்ந்து பல உயிர்கள் இழப்புக்கு காரணமாகி விடுகிறது.

மது ஒழிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆனால் மதுபானங்கள் மட்டும் எல்லா இடங்களிலும் தாராளாமாகக் கிடைப்பது வருத்தத்திற்குரியது ஆகும்.

இன்றைய சமுதாயத்தில் அதிக அளவிற்கு காரணமாக இருக்கும் தீய குணங்கள், வன்முறைகள், தவறான செயல்கள் போன்றவற்றை அடியோடு அழிப்பதற்கு மது ஒழிப்பு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.

முடிவுரை

மதுமயமாகி விட்ட ஒரு சமூகத்தில் ஒழுக்கத்தை, நல்ல பண்பாட்டை எதிர் பார்க்க முடியாது. மதுவின் மூலம் மனிதன் தன் உயர்ந்த அறிவுச்செல்வத்தை இழக்கிறான்.

அறிவை இழந்தவன் அனைத்தையும் இழப்பான் என்பதை மது குடிப்பவர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி மனிதனைக் குடிக்கும் மதுவை ஒழிப்போம் சமூகம் காப்போம்.

You May Also Like :
மது பற்றிய கட்டுரை
உடல் நலமும் உள நலமும் கட்டுரை