கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை

பழைய புத்தகம் ஒன்றின் சுயசரிதை

அதிக பாவனையால் புத்தகங்கள் முதுமை அடைவது இயற்கையான ஒன்றுதான் அந்த வகையில் இந்த பதிவில் கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை பதிவை காணலாம்.

எமது அறிவினை கூர்மையாக்க பயன்படும் புத்தகங்களை அனைவரும் சிறுவயதில் இருந்தே பாதுகாப்பாகவும் அக்கறையாகவும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை – 1

நல்ல புத்தகங்கள் மனிதனின் சிறந்த நண்பர்கள். சிறந்த அறிவையும், உலக ஞானத்தையும் புத்தகங்கள் எமக்குப் பெற்றுத் தருகின்றன. அந்த வகையில் மனிதர்களிற்கு அறிவொளி ஊட்டிய நான் ஒரு பழைய கிழிந்த புத்தகமாவேன்.

நான் மிகவும் மனமுடைந்து கவலையான மனநிலையில் வாழ்ந்து வருகின்றேன். தேடுவாரற்று தேற்றுவோர் யாருமற்ற என் நிலை பரிதாபத்திற்குரியது. என் துயரக் கதையை கூறுவது புத்தகத்தை பயன்படுத்துவோர் மிகக்கவனமாக புத்தகங்களை பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குமாகையினால் அதனைக் கூறுகின்றேன்.

அச்சகம் ஒன்றில் அழகாக அச்சிடப்பட்ட என்னை நாட்டிலுள்ள சிறந்த எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். புத்தகக் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த என்னை மாணவன் ஒருவன் விலைகொடுத்து பெற்றுக் கொண்டான்.

அதனால் மிகுந்த மகிழ்ச்சியும், அளவில்லாத ஆனந்தமும் கொண்டேன். என்னை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்த அவன், நேரங்கிடைக்கும் போதெல்லாம் ஆர்வத்துடன் வாசிப்பான். ஒருநாள் அவன் வீட்டிற்கு வருகைதந்த நண்பனொருவன் வாசிப்பதற்காக என்னைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான்.

நானும் மிகுந்த ஆர்வத்துடன் தயாரானேன். ஆர்வமுடன் பெற்றுக் கொண்ட அவன் என்னை திறந்து பார்க்காமலே பழைய ஒரு அலுமாரியில் வைத்தான். அங்கிருந்த தூசிகள் என்னைக் சூழ்ந்து மூச்சுமுட்ட வைத்தன. சரிவர சுவாசிக்க முடியாமல் திணறினேன்.

அலுமாரியிலிருந்த சிறு சிறு பூச்சிகள் என்னை அரிக்கத் தொடங்கின. அதன் வலிதாங்காமல் கண்ணீர் விட்டு அழுதேன். நாளாக நாளாக என்னுடைய பாகங்கள் அனைத்தும் சிதையத் தொடங்கின.

ஒருநாள் அலங்கோலமாக இருந்த என்னை குப்பைக் கூடைக்குள் விசிறியெறிந்தான். தற்போது குப்பைக்கூடைக்குள் வசிக்கும் நான் புத்தகங்களை சரிவர பேணத்தெரியாத அந்த சிறுவனை நினைத்து பெருங்கோபத்தோடு வாழ்ந்து வருகின்றேன்.

கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை – 2

தொடக்கம் இருக்கும் எந்த விடயத்திற்கும் முடிவுப்புள்ளி ஒன்று காணப்படும். பிறப்பு இருக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் முதுமையும் இழப்பும் காணப்படும். இன்று முதுமையில் வாழும் நான் ஒரு புத்தகமாவேன்.

நான் பல வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய அறக் கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு காவியமாவேன். என்னுடைய பெயர் திருக்குறள் என்பதாகும். பழம்பெரும் தமிழ்ப் புலவரான திருவள்ளுவரால் இயற்றப்பட்ட விலைமதிக்க முடியாத பொக்கிசமாவேன்.

ஈரடிக்குறள்கள் ஆயிரத்தெட்டை உள்ளடக்கியுள்ளேன். சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இப்பூமியில் வாழ்வாங்கு வாழ நல்ல கருத்துக்களை நான் அள்ளி வழங்குவதனால் வயது வேறுபாடின்றி அனைவரும் விலைகொடுத்து வாங்குவார்கள்.

இன்று கிழிந்த நிலையில் காணப்படும் நான் ஒரு காலத்தில் பெரியவர் ஒருவரின் கைப்பையிலே அதிக காலத்தை செலவழித்தேன். அப்பெரியவர் தான் போகும் இடமெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

சொற்பொழிவுகள் நடாத்தும் போதும், மாணவர்களிற்கு அறிவுரை கூறும் போதும் என்னை வெளியில் எடுத்து என்னிலுள்ள வரிகளை உதாரணம் காட்டுவார்.

என்னிலுள்ள ஒவ்வொரு வரிகளையும் மனப்பாடம் செய்து வைத்திருந்ததோடு, ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்துக் செல்வதனால் புதிய மனிதர்களை பார்ப்பது எனக்கு மிகவும் புத்துணர்ச்சியை அளித்தது.

அழகாக சென்று கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கையில் பெரும்புயல் அடிக்க தொடங்கியது. நீண்டகால பயன்பாட்டின் விளைவாக நான் என்னுடைய சுயத்தை இழக்கத் தொடங்கினேன். அங்காங்கே கிழிந்து அலங்கோலமாகக் காட்சி அளித்தேன்.

அதனால் வீட்டிலுள்ள அலுமாரியொன்றில் பத்திரப்படுத்தப்பட்டேன். ஒருநாள் பெரியவரின் வீட்டில் எதிர்பாராமல் பற்றியெரிந்த தீக்கு நானும் நண்பர்களும் பலியானோம்.

அரைவாசி எரிந்த நிலையில் என்னை மீட்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை பயன்பாடுகள் ஏதுமற்றவனாக ஒரு மூலையில் கிடக்கின்றேன்.

You May Also Like:

நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை