மலேசிய சுதந்திர தினம் கட்டுரை

Malaysia Suthanthiram Katturai In Tamil

இந்த பதிவில் பிரித்தானியக் காலனித்துவத்திற்கு உட்பட்டு சுதந்திரமடைந்த “மலேசிய சுதந்திர தினம் கட்டுரை” பற்றி காணலாம்.

மலேசியா என்னும் உன்னத நாட்டைக் கட்டமைப்பதில் இனம்⸴ மொழி⸴ மதம் கடந்து மலேசியர்கள் என்னும் ஒற்றுமையும் உயரிய சித்தாந்தமும் பெரும் பங்காற்றியுள்ளது.

மலேசிய சுதந்திர தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரிமை
  2. விடுதலையின் பின்னணி
  3. மலேசியாவின் சிறப்புகள்
  4. ஒற்றுமையும் புரிந்துணர்வும்
  5. சுதந்திர தின கொண்டாட்டம்
  6. முடிவுரை

முன்னுரிமை

கலாச்சாரக் கலவையும்⸴ அழகும், புதுமையும்⸴ நாகரீகமும்⸴ இயற்கை அழகும் ஒன்றாக அமைந்த நாடு தான் மலேசியா. உலகின் பல நாடுகளும் பிரித்தானியக் காலனித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளாக காணப்பட்டன. அவ்வகையில் மலேசியாவும் பிரித்தானியக் காலனித்துவத்திற்கு உட்பட்டு சுதந்திரமடைந்தது.

பிரித்தானியக் காலனித்துவத்திற்கு உட்பட்டுக் காணப்பட்ட போது “மலாய்” என்று அழைக்கப்பட்டது.

ஏகாதிபத்தியத்தாலும்⸴ அந்நியரின் ஆளுகையாலும் அடிமைப்பட்டு கிடந்த மலேசியாவிற்கு சுதந்திர முழக்கம் 1957களில் நாட்டின் முதல் பிரதமரும் சுதந்திர தந்தையுமான துங்கு அப்துல் ரகுமான் அவர்களால் மெர்டேக்கா சதுக்கத்தில் ஏழுமுறை மெர்டேக்கா⸴ மெர்டேக்கா என்று முழங்கப்பட்டது.

இன்று மலேசியர்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தின் அச்சாரம் இதுவாகும். சுதந்திர தினம்⸴ மலேசியாவின் சிறப்புப் போன்ற பல அம்சங்களை இக்கட்டுரையில் காண்போம்.

விடுதலையின் பின்னணி

பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டு இருந்த காலப்பகுதியில் விடுதலைக்கான பேச்சுவார்த்தைக்காக துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் பலரும் லண்டன் சென்றனர்.

மலாயா அரசர் காலத்தில் கம்யூனிச அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும் 1956 பெப்ரவரி 8ஆம் திகதி பிரித்தானியா ஆட்சியாளரிடம் இருந்து விடுதலைக்கான ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் நிர்வாக காரணங்களினால் 31 ஆகஸ்ட் 1957 அன்று இறுதி முடிவானது. அன்றே மலாய் சுதந்திரமடைந்தது. 1963 செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது.

மலேசியாவின் சிறப்புகள்

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியா மேற்கு மலேசியா⸴ கிழக்கு மலேசியா என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் மொத்தமாக 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்திருக்கின்றன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுரகிலோ மீட்டர் ஆகும் .

கோலாலம்பூரைத் தனது தலைநகரமாக கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

வானுயர்ந்த கட்டிடங்கள்⸴ கோபுரங்கள்⸴ அடுக்குமாடி குடியிருப்புகள்⸴ கோவில்கள்⸴ மசூதிகள் என்று அனைத்துமே நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

ஒற்றுமையும் புரிந்துணர்வும்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல்லினம் ஒற்றுமையாகவும்⸴ புரிந்துணர்வுடனும் பல்வேறு கலாச்சாரங்களை உயிர்ப்பிக்கும் உன்னத தேசமாகவும் மலேசியா உயர்ந்து நிற்கின்றது.

மலேசியா என்னும் உன்னத நாட்டைக் கட்டமைப்பதில் இனம்⸴ மொழி⸴ மதம் கடந்து மலேசியர்கள் என்னும் ஒற்றுமையும் உயரிய சித்தாந்தமும் பெரும் பங்காற்றியுள்ளது.

சுதந்திர மலேசியாவை உருவாக்குவதற்கு நாட்டின் முதன்மை இனங்களான மலாய்⸴ சீனர்⸴ இந்தியர் என மூவினத்தினரின் பிரதிநிதிகளையும் அழைத்து சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிடச் செய்தது சிறப்பம்சமாகும். மூவினத்தின் ஒற்றுமையை முன்வைத்தே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது.

சுதந்திர தின கொண்டாட்டம்

மலேசியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாகவும் மக்களால் மகிழ்வுடன் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருவதை காணலாம்.

தலைநகரின் அடையாளமாகத் திகழும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் வானவேடிக்கைகளால் நிரப்பப்படுவது வழக்கம் கிராமங்களில் இந்நாட்டுத் தேசியக் கொடியுடன் விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று மகிழ்வர்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மலேசியத் தேசியத் தலைவர்⸴ ராணுவத் தளபதிகளும் பாதுகாப்புடன் பங்கேற்பர். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

முடிவுரை

மூவின மக்களும் வாழும் இந் நாடானது அனைத்து இனத்தவர்களுக்குமே சொந்தமானது. நாம் தான் இம்மண்ணின் சொந்தக்காரர் எனச் சொந்தம் கொள்ளாது அனைவரும் ஒற்றுமையுடனும்⸴ மகிழ்வுடனும் வாழ்ந்து வருகின்றமை போற்றுதற்குரியதாகும்.

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த புனித ஆத்மாக்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் மலேசியாவின் அடையாளத்தை மலேசியா வாழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து காட்டி போற்றிப் பாதுகாக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

You May Also Like:

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
பகத்சிங் பற்றிய கட்டுரை