இந்த பதிவில் “நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.
நமது மரபு ரீதியான ஆயர்வேத வைத்தியத்தினால் கூட குணமாக்க முடியாத பல நோய்களை நவீன மருத்துவத்தின் மூலம் குணமாக்க முடியும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அன்றாட வாழ்வில் தொழில்நுட்ப வளர்ச்சி
- மருத்துவத்துறை
- தொழிற்துறை
- போக்குவரத்து
- முடிவுரை
முன்னுரை
நாம் எல்லோரும் எமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட வரப்பிரசாதம் உலகம் எனலாம்.
பரந்த இவ்வுலகமானது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணத்தால் மிகவும் சுருங்கியதாக காணப்படுகின்றது.
இத்தொழில் நுட்ப வளர்ச்சியானது மனித செயற்பாடுகளில் எந்தெந்த துறைகளில் எவ்வாறான முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது என இக்கட்டுரையில் ஆராயலாம்.
அன்றாட வாழ்வில் தொழில்நுட்ப வளர்ச்சி
ஒரு மனிதன் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அனைத்து செயற்பாடுகளிலும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.
வீட்டில் சமைக்கும் போது பயன்படுத்தும் மின் அடுப்பு, சலவை இயந்திரம் வரை தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.
மேலும் தொலை தொடர்பு சாதனங்களான தொலைபேசி, தொலைக்காட்சி என்பன மனித வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத விடயங்களாகிவிட்டன.
மருத்துவத்துறை
நமது மரபு ரீதியான ஆயர்வேத வைத்தியத்தினால் கூட குணமாக்க முடியாத பல நோய்களை நவீன மருத்துவத்தின் மூலம் குணமாக்க முடியும்.
அத்துடன் நாகரீக வாழ்க்கை பண்புகளால் உருவாக்கப்படும் நோய்களுக்கு உரிய நிவாரணிகளும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினூடாகவே உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் நோய்களை இனங்காண்பதற்கு பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மருத்துவத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியத்துவத்தினையும் மேம்பாட்டினையும் வெளிப்படுத்துகின்றது.
தொழிற்துறை
தொழிற்துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியினை நோக்கினால் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் சேதன பசளைகள், புதிய நீர்ப்பாசன முறைகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதையினங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
மேலும் கைத்தொழில்களில் ஏற்பட்ட அதீத வளர்ச்சிக்கு அதனுள் உட்புகுத்தப்பட்ட இயந்திரப்பாவனையுமே காரணமாகும். இதனால் மனித வலுவினை பயன்படுத்த வேண்டிய தேவை குறைவடைந்ததுடன் குறைவான நேரத்தில் அதிக உற்பத்தியை மேற்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
தொழிற்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணத்தினாலேயே அதிகரிக்கும் சனத்தொகையின் தேவையினையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தியினை மேற்கொள்ள கூடியதாக உள்ளது.
போக்குவரத்து
போக்குவரத்தினை எடுத்துக் கொண்டால் பண்டைய காலத்தில் விலங்குகளை அடிப்படையாக கொண்டே போக்குவரத்து வசதிகள் காணப்பட்டன. உதாரணமாக மாட்டு வண்டி, குதிரை வண்டி முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
ஆனால் தற்காலத்தில் தரை, கடல், ஆகாயம் என மூன்று மார்க்கங்களிலும் போக்குவரத்து செய்யக் கூடிய வகையில் போக்குவரத்து சாதனங்கள் காணப்படுகின்றன.
ஒளியின் வேகத்தில் செல்லக்கூடிய விமானங்கள், அதிவேக ரயில்கள், பல்லாயிரக்கணக்கான கொள்கலன்களை ஏற்றிச் செல்லக் கூடிய பாரிய கப்பல்கள் என்பன போக்குவரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்ச நிலையினை உணர்த்துகின்றன.
முடிவுரை
மேற்குறிப்பிடப்பட்டவை மட்டுமல்லாது கல்வி, வணிகம், தகவல் தொடர்பாடல் என அனைத்து துறைகளிலுமே தொழில்நுட்ப வளர்ச்சியானது தனது செல்வாக்கினை செலுத்துகின்றது.
தொழில்நுட்பம் ஊடாக உலக மக்கள் அன்றாடம் தமது வேலைகளை இலகுபடுத்தி கொள்கின்றனர். அத்தோடு சிறப்பான பொழுது போக்கினையும் உருவாக்கி கொள்கின்றனர்.
இவ்வாறான பல நன்மைகள் தொழில்நுட்ப வளர்ச்சியினூடாக கிடைக்கப் பெற்றாலும் கூட ஒரு சில தீமைகளும் காணப்படுகின்றன. இன்றளவில் சிலர் தவறான வழிகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமக்கும் தம்மை சார்ந்தோருக்கும் தீமைகளை ஏற்படுத்துகின்றனர்.
எனவே மனித அறிவின் ஊடான தொழில்நுட்ப வளர்ச்சியினை நன்மை நோக்கத்துடன் மாத்திரம் பயன்படுத்துவது எமது கடமையாகும்.
You May Also Like: |
---|
தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை |
அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் |