எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை

enakku piditha vilayattu katturai

உலகளவில் இன்று பல்வேறு விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. அவற்றுள் மைதான விளையாட்டுகள், உள் அரங்க விளையாட்டுகள் கிராமிய விளையாட்டுகள் என பல்வேறு வகைகள் காணப்படுகின்றன.

இவற்றுள் எனக்குப் பிடித்த கபடி விளையாட்டானது எமது தமிழ்நாட்டின் பெருமைகளை உலக அளவில் எடுத்துச் சொல்லும் சிறப்பு மங்காத ஓர் ஆரோக்கியமான விளையாட்டு ஆகும்.

எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கபடியின் வரலாறு
  • கபடி விளையாட்டு
  • கபடியின் சிறப்புகள்
  • கபடியின் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

தமிழகத்தின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்றான கபடியானது குழுவாக விளையாடக்கூடிய ஓர் விளையாட்டு ஆகும். இன்று பல்வேறு கிராமப்புறங்களில் இந்த கபடி விளையாட்டானது அதிகமாக விளையாடப்படுவதனை நாம் காண முடியும்.

கிராமப்புறங்களில் விளையாடப்படக்கூடிய வீர விளையாட்டுகளில் முக்கியமான விளையாட்டான எனக்கு மிகவும் விருப்பமான கபடி விளையாட்டு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

கபடியின் வரலாறு

கபடி விளையாட்டின் ஆரம்பமானது சுமார் 4000 வருடங்கள் பழமையானதாகும். அதாவது ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சிதான் பிற்பட்ட காலங்களில் இந்த கபடி விளையாட்டாக உருவெடுத்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியது.

கை-பிடி என்ற வார்த்தையே கபடி என மருவியதோடு, கபாடி, சடுகுடு, பலிஞ்சடுகுடு என்று பல்வேறு பெயர்களாலும் இந்த விளையாட்டு அழைக்கப்படுவதனையும் காணலாம்.

தமிழ் மண்ணில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த வீர விளையாட்டானது இன்று உலக நாடுகளில் பரவலாக விளையாடப்படுவது தமிழர்களுக்கு பெருமையானதொன்றாகும்.

கபடி விளையாட்டு

பொதுவாகவே கபடி விளையாட்டு என்பதே இரு குழுகளுக்கு இடையில் இடம்பெறும் ஒரு குழு விளையாட்டாகும்.

இதன்படி ஒரு குழுவில் 12 உறுப்பினர்கள் காணப்படுவர். அதில் ஏழு பேர் களமிறங்கி விளையாடிக் கூடியவர்களாகவும் மீதி ஐந்து பேர் களத்தில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு காயம் அல்லது உடல் நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்கக் கூடியவர்களாகவும் காணப்படுவர்.

ஒரு குழுவினர் களம் இறங்கியதும் அதில் உள்ள ஒருவர் கபடி, கபடி என பாடிக்கொண்டே எதிராணியின் கோட்டுக்குள் வந்து ஒருவரை அல்லது பலரையோ பலரையோ தொட்டுவிட்டு எல்லை கோட்டை நோக்கி வெளியேற வேண்டும்.

அவ்வாறாக ஒருவர் களம் இறங்கி வரும்போது எதிர் அணியினர் தங்கள் கோட்டுக்குள் வைத்து அன் நபரை பிடித்து அவர் ஆட்டத்தை முடிக்கவும் முடியும்.

இவ்வாறாக மாறி மாறி இரு அணியினரும் விளையாடி முடிக்கையில் எந்த அணியினர் அதிகமான நபர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளனரோ அவர்களே வெற்றி பெறுவார்.

கபடியின் சிறப்புகள்

தமிழர் பழங்குடியினரால் உருவாக்கப்பட்டு காலாகாலமாக தமிழ் மக்களினால் விளையாடப்படும் ஓர் விளையாட்டே கபடி ஆகும். இன்று இந்த விளையாட்டு உலக அளவில் விளையாடப்படுவதனால் அது தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் சிறப்பை தரக்கூடிய ஓர் விளையாட்டாகும்.

2004 ஆம் ஆண்டில் இருந்து கபடிக்கான உலகக்கோப்பை உருவாக்கப்பட்டமையானது இந்த விளையாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் தமிழர்களின் வீரத்தையும், ஆற்றலையும் பறைசாற்றுவதாகவும் இந்த கபடி காணப்படுகின்றமையானது இதன் சிறப்பே ஆகும்.

கபடியின் பயன்கள்

உலகில் விளையாட படக்கூடிய எல்லா விளையாட்டுக்களுமே ஏதோ ஒரு வகையில் பல்வேறு பயன்களை மக்களுக்கு வழங்குவதாகவே காணப்படுகின்றன. இந்த வகையில் கபடி விளையாட்டின் மூலமும் மனிதர்கள் பல்வேறு பயன்களை பெற்றுக் கொள்கின்றனர்.

அதன்படி சிறந்த உடற்பயிற்சி, வீரம் மற்றும் விவேகத்தினைப் பெற்றுக்கொள்ளுதல், உடல் உறுதியை பெற்றுக் கொள்ளுதல், மன வலிமையை பெற முடிதல், உடல் ஆரோக்கியத்தை பெற்றுக் கொள்ள முடிதல் மற்றும் கபடி விளையாட்டு பயிற்சியின் மூலமாக திடகாத்திரமான உடல் கட்டமைப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு வெற்றி தோல்வி என்பவற்றை சகஜமாக எடுக்கும் தன்மையும் இந்த விளையாட்டின் மூலம் ஒருவருக்கு கிடைக்கும் பயன் என குறிப்பிடலாம்.

முடிவுரை

கபடியின் தாயகமாக இந்தியா காணப்படுகின்றமையினால் இன்று இங்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என தனித்தனியான அணிகளாக கபடி விளையாட்டுகளில் ஈடுபடுவதனைக் காண முடியும்.

அதன் அடிப்படையில் எனக்குப் பிடித்த கபடி விளையாட்டுகளில் பல ஆண்டுகளாக நம் நாடு உலக சாம்பியன் பட்டம் பெறுகின்றமையானது நமக்கும் பெருமையான ஒரு விடயமாகும்.

ஆகவே தமிழர்களாகிய நாம் அனைவரும் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி பற்றி அறிந்து கொள்வதோடு நமது சந்ததியினருக்கும் அது பற்றிய தெளிவினை கொடுக்க வேண்டும்.

You May Also Like:

எரிபொருள் பயன்பாடு கட்டுரை

காக்கை குருவி எங்கள் ஜாதி கட்டுரை