இந்த பதிவில் உயரிய பண்பான “அறம் செய்ய விரும்பு கட்டுரை தமிழ்” பதிவை காணலாம்.
மனிதர்களாகிய நாம் வாழ்வில் மேன்மை அடைய அறம் என்கின்ற உயரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அறம் செய்ய விரும்பு கட்டுரை தமிழ்
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறம் என்பதன் பொருள்
- அறத்தின் சிறப்பு
- ஒளவையார் கருத்து
- திருவள்ளுவர் கருத்து
- முடிவுரை
முன்னுரை
இன்றைய சமுதாயத்தில் மனிதப் பிறவி வாழ்வாங்கு வாழ அறவழிப் பாதை இன்றியமையாததாகக் காணப்படுகிறது. ஒரு தனிமனித வாழ்க்கைக்கு அறநெறி அல்லது ஒழுக்க நெறி என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். வாரிக்கொடுத்த வள்ளல்கள் பலர் வாழ்ந்த புண்ணிய பூமி இது.
நாம் இந்த பிறவியில் செய்யும் ஒவ்வொரு பலன்களும் தான் நமக்கும், நம் சந்ததியினருக்கும் நற்பலன்களை கொடுக்கும். அந்த வகையில் அறம் செய்ய விரும்பு பற்றி நோக்குவதாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.
அறம் என்பதன் பொருள்
அறம் என்ற சொல்லிற்கு கடமை, நோன்பு, தர்மம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை போன்றன பொருள் கொள்ளப்படுகின்றன.
அறம் என்பது கையேந்தி வருபவர்களுக்கு உணவளித்தல், நேர்மையாக இருத்தல், பொய் பேசாமல் உண்மையை மட்டும் பேசுதல், மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வது ஆகும்.
அத்துடன் மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே, முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவார்.
தானம் என்று மட்டுமல்ல பொருள். அறவழியல் நிற்றல் ஒழுங்கான தர்ம வழியில் நிற்பது எனவும் பொருள்படும்.
கேட்டுக் கொடுப்பது யாசகம். கேட்காமல் கொடுப்பது உதவி. உதவி பெறுபவருக்கே கொடுப்பவர் யாரென்ற விளம்பரம் இன்றிக் கொடுப்பதே அறம்.
இதன் வெளிப்பாடே “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்”.
அறத்தின் சிறப்பு
மக்களாய்ப் பிறந்த நாமெல்லாம் இம்மையிலும் மறுமையிலும் மேன்மை பெற்று வாழ வேண்டுமானால் அறத்தையே செய்ய வேண்டும். எப்பொழுதும் எந்நேரத்திலும் அறம் செய்யலாம்.
இந்த நிலையில்லாத உடம்பு இருக்கும் பொழுதே நிலையான அறத்தைச் செய்து நாற்பொருட்களான அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை அடைந்து கொள்ள வேண்டும்.
அறம் கொண்டு வாழ்பவரின் வாழ்க்கை எப்போதும் செல்வாக்கு, புகழ் கொண்டு சிறப்பாக அமைகிறது. நேர்மையில்லாமல் வாழ்பவர்கள் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை சந்திக்கிறார்கள்.
அறத்தின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று தான் திருவள்ளுவர் தனது அறத்துப்பால் என்ற அதிகாரத்திலும், ஒளவையார் தனது ஆத்திசூடியிலும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒளவையாரின் கருத்து
அறத்தின் நெறி தவறியவர்கள் மறு ஜென்மத்தில் வாழ்வதற்கான தகுதியை இழந்தவர்கள் என்கின்றார் ஒளவையார். வறுமையிலும் நாம் சிறப்பான நிலையில் வாழ வேண்டும் என்றால் அறநெறியை பின்பற்றி வாழ வேண்டும்.
மனிதப் பிறவி பெற்ற அனைவரும் அறத்தின் பால் கட்டுண்டு முதுமையில் பிறவிப் பயனை அடைய வேண்டும் என்கின்றார். இதனையே தனது நூலான ஆத்திசூடியில் முதல் வரியில் “அறம் செய்ய விரும்பு” எனக் குறிப்பிடுக்கின்றார்.
வள்ளுவரின் கருத்து
“அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” எனும் குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் பொறாமை, தீயசெயல், வெகுளி போன்றவற்றை தகர்த்து அறத்துடன் வாழ வேண்டும் என்று கூறுகிறார் வள்ளுவர்.
நாம் மற்றவர்களுக்கு செய்கின்ற தர்மம் எப்பொழுதுமே நமக்கு துன்பத்தை தராது, அது எப்போதுமே இன்பத்தை மட்டுமே தரும். இந் நிலையில்லாத உடம்பு இருக்கும் போதே நிலையான அறத்தைச் செய்து துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளுவர்.
இதனையே இவர் தனது குறட்பாவில் “அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் “அறன் வலியுறுத்தல்” எனும் அதிகாரத்தின் மூலமும் அறம் பற்றி தெளிவாக குறிப்பிடுகின்றார்.
முடிவுரை
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல” என்கிறார் வள்ளுவர். அறச்செயல்களைச் செய்வதால் கிடைப்பதுதான் இன்பம் மற்றவர்களால் கிடைப்பது இன்பமும் இல்லை, புகழும் இல்லை.
அறப்பணியை மேற்கொண்டு வாழ்பவர்களின் உயிர் இப்பூமியை விட்டு பிரியும் போது சொர்க்கத்தை அடைவார்கள். மனிதர்களாகிய நாம் வாழ்வில் மேன்மை அடைய அறம் என்கின்ற உயரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அறம் என்ற உணர்வு மட்டும் இல்லையென்றால் மனிதர்களின் இதயத்தில் மிருகங்கள் வாழ ஆரம்பித்து விடும். இன்றைய சூழலில் அறத்தின் வழியில் நடப்பவர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது.
நேர்மையின்மையும், அநியாயமும் இப்போது அதிகமாக உள்ளது. இதனை தவிர்த்து நாம் அறத்துடன் வாழ வேண்டும், மற்றவர்களுக்கும் அறத்தின் சிறப்பை எடுத்துரைக்க வேண்டும். “அறம் செய்வோம், வாழ்க்கையை அழகாக்குவோம்”.
You May Also Like: |
---|
அறம் பற்றிய கட்டுரை |
அறம் செய்ய விரும்பு பேச்சு போட்டி |