குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு

kumaraguruparar history in tamil

17ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் முகலாயர்களின் படையெடுப்பு இந்திய தேசம் முழுவதையும் ஆட்கொண்டு பாரிய பல இன்னல்களை ஏற்படுத்திய வேளையில், இந்து தர்ம கலாச்சாரம், பாரம்பரியம் என்பன நலிவுற்ற காலப்பகுதியில் இவற்றை சீர்த்திருத்தி நிலைநாட்ட தோற்றம் பெற்ற மகான்களுள் குமரகுருபரரும் ஒருவராக திகழ்கிறார்.

காலப்பகுதி17ஆம் நூற்றாண்டு
தந்தைசண்முக சிகாமணி கவிராயர்
தாய்சிவகாமி சுந்தரி
பிறந்த இடம்திருச்செந்தூரின் திருவைகுண்டம்
பட்டம்தம்பிரான்
குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை

சண்முக சிகாமணி கவிராயருக்கும், சிவகாமி சுந்தரி அம்மைக்கும் நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இன்மையால் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். பின்னர் முருகப் பெருமானை நோக்கி கந்தசஷ்டி விரதம் நோற்றனர். இதன் பலனாக இவர்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை குமரகுருபரர் பிறந்தார்.

குமரகுருபரர் பிறந்தது முதல் அவருடைய ஐந்து வயது வரை பேசும் திறன் அற்று இருந்தார். பின்னர் இவரது பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று பல பிரார்த்தனைகள் செய்ததன் பலனாகப் பேசும் திறன் வாய்க்கப் பெற்றார்.

பேசும் திறன் கிடைக்கப் பெற்ற ஐந்து வயதிலேயே கந்தர் கலி வெண்பா என்னும் பாடலைத் திருச்செந்தூர் முருகக் கடவுளை நோக்கி புகழ்ந்து போற்றிப் பாடியுள்ளார்.

சில வருடங்களுக்குப் பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் என்பவற்றை சிறப்புறப் பயின்றார்.

குருபரர் தனது குருவைக் காணும் நோக்கத்தில் மதுரை நகருக்கு வந்தார். அச்சமயத்தில் மதுரையைத் திருமலை நாயக்கர் எனும் நாயக்க மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் குமரகுருபரரை நன்முறையில் வரவேற்று கௌரவித்தார்.

அவரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூலைப் பாடினார். அத்துடன் மீனாட்சி அம்மனை நோக்கி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

குருவைக் காணுதல்

குமரகுருபரர் அவருடைய இளம் வயதிலேயே கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தானே தேடி அவரது வீட்டை விட்டு வெளியேறி, திருச்செந்தூரில் அவர் இருந்தபோது, தன் குருவைக் காணும்போது தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார்.

தருமபுரத்தில் பாரம்பரிய சைவ மடம் ஒன்று இருந்தது. அதன் பெயர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் என்பதாகும். அந்த மடத்தை மாசிலாமணி தேசிகர் எனும் துறவி ஒருவர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார்.

அப்போது மாசிலாமணி தேசிகர், குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் “ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா” எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார்.

அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற “சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாரால் அதை விளக்க முடியும்?

குமரகுருபரர் இதைக் கேட்டதும் வாயடைத்து நின்றார். அவருக்குத் தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் என உணர்ந்து கொண்டு அவரைச் சரணடைந்தார்.

அதிசய நிகழ்வு

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலில் உள்ள “வருகைப்பருவம்” என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

சமயப் பணி

குமரகுருபரர், தருமபுரம் மடத்திற்கு வந்த பிறகு, சைவ சித்தாந்த அமைப்பைப் பற்றி விரிவான ஆய்வு செய்து, தமிழ் குறித்த தனது அறிவை மேம்படுத்துவதில் பணியாற்றினார்.

ஒரு துறவு வாழ்க்கை முறையை வழிநடத்துவதில் அவரது ஆழ்ந்த கற்றல் மற்றும் நேர்மையை உணர்ந்து, மடத்தின் தலைவர்கள் அவருக்கு “தம்பிரான்” என்ற பட்டத்தை வழங்கினர்.

குருவின் ஆணைப்படி, காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். மேலும், காசியில் மடத்தை நிறுவி இறக்கும்வரை அங்குத் தங்கியிருந்தார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.

2010-ஆவது ஆண்டு குமரகுருபரர் நினைவாக ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

  1. மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
  2. மதுரை மீனாட்சி அம்மை குறம்
  3. தில்லை சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
  4. காசித் துண்டி விநாயகர் பதிகம்
  5. திருவாரூர் நான்மணிமாலை
  6. சிதம்பரம் செய்யுட்கோவை
  7. மீனாட்சி பிள்ளைத்தமிழ்
  8. பண்டார மும்மணிக்கோவை
  9. கந்தர்கலி வெண்பா
  10. காசிக் கலம்பகம்
  11. மதுரைக்கலம்பகம்
  12. சகலகலாவல்லி மாலை
  13. நீதிநெறி விளக்கம்
  14. கயிலை கலம்பகம்
  15. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  16. சிதம்பர மும்மணிக்கோவை
You May Also Like :
ஆடி கிருத்திகை வரலாறு
அழகர் கோவில் வரலாறு