முதியோர் தினம் கொண்டாடப்படும் நாள்
உலக முதியோர் தினம் | அக்டோபர் 1 |
International Day of Older Persons | October 1 |
முதுமையும், இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத நிலைகளாகும். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதியவர்களே. முதியவர்கள் அனுபவங்களின் அமுத சுரபிகளாவர்.
வார்த்தைகள் தடுமாறினாலும் வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்களாவர். இன்றைய நவீன உலகில் முதியோரின் முக்கியத்துவம் உணரப்படுவதில்லை. இது துரதிஷ்டமானது.
முதியோரைப் போணிப்பாதுகாப்பதை இளைய சமுதாயம் தங்களது கடமைகளில் ஒன்றாக ஏற்க வேண்டும்.
முதியோர் தினம் வரலாறு
சர்வதேச முதியோர் தினம் என்பது உலகெங்கிலுள்ள முதியவர்கள் அல்லது மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு நாளாகும்.
இந்நாளின் உருவாக்கப் பின்னணியை நோக்கின், முதுமை குறித்த வியன்னா சர்வதேச செயல் திட்டம் முன்முயற்சிகளாக முன்வைக்கப்பட்டன. இது 1982 ஆம் ஆண்டு முதுமை குறித்த உலக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. டிசம்பர் 14, 1990 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு உலகளாவிய ரீதியில் உலக முதியோர் தினத்தைக் கொண்டாடி வருகின்றது.
உலக முதியோர் தினத்தை உருவாக்கியதன் நோக்கம்
நமது சமுதாயத்தில் மூத்த குடிமக்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், சமூகத்திற்கு முதியவர்கள் செய்யும் பங்களிப்புகளை மதிப்பதற்கும், அதனைப் பாராட்டுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
முதியோர்களுக்கான சுகாதார ஏற்பாடுகள் மற்றும் சமூக அக்கறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை பரப்புதல், வயதானவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உலக முதியோர் தினம் உருவாக்கப்பட்டது.
உலக முதியோர் தினத்தின் முக்கியத்துவம்
வீட்டில், சமுதாயத்தின் தலைவர்களாக தங்கள் தோள்களில் நிறைய பொறுப்புகளை சுமக்கிறார்கள். இவர்கள் சமூகத்தின் மரபுகள், கலாச்சாரம் போன்றவற்றை அடுத்த சந்ததியினருக்கு கடத்துகின்றார்கள். மற்றும் இளைய தலைமுறையினருக்கு அறிவை வழங்குகிறார்கள்.
இத்தகைய முதியோர்கள் வறுமையால் பாதிக்கப்படுகின்றனர், உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர், சில சமயங்களில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர் இவற்றைத் தடுப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை இதற்கு உலக முதியோர் தினம் முக்கியம் பெறுகின்றது.
முதியோர்கள் அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள். பலதுறைகளில் அனுபவம் கொண்டவர்கள். இவர்களது அறிவும், ஆலோசனைகளும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு அவசியமாகும்.
மூத்த குடிமக்கள் என்று பெருமையாகப் பேசப்படும் முதியோரை அன்பு, பாசம், நேசத்துடன் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் முதியோர் தினத்தில் மட்டுமல்லாது என்றென்றும் அவர்களை மதிக்கவும், அன்பு காட்டவும், கௌரவப்படுத்தவும் முன்வர வேண்டும்.
முதியவர்களை எமக்கு வழிகாட்டியாகவும், நம்மை ஈன்றெடுத்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாகவும் பேணிப்பாதுகாப்பது நமது கடமையாகும் என்று உறுதியேற்பதுமே முதியோருக்கு நம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.
You May Also Like : |
---|
உலக மன்னிப்பு தினம் |
உலக முத்த தினம் |