அன்பு பற்றிய கட்டுரை

Anbu Katturai In Tamil

இந்த பதிவில் கொடுக்க கொடுக்க குறையாத “அன்பு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இவ்வுலகில் அன்பு அள்ள அள்ளக் குறையாதது. அன்பு பிறருக்கு கொடுக்க கொடுக்க மேலும் பெருகும்.

அன்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அன்பின்அவசியம்
  3. அன்பின் பெருமை
  4. உயிர்களிடத்தில் அன்பு
  5. இயற்கையின் மீது அன்பு
  6. முடிவுரை

முன்னுரை

இப்பூவுலகில் விலைமதிப்பற்றது அன்பாகும். இல்லறம் நல்லறமாக மாறா அன்பு இன்றியமையாதது. அன்பினால் கிடைக்கக்கூடிய பயன்கள் எண்ணிலடங்காதவை ஆகும்.

நமது ஆற்றல், மனவலிமை, உடல்வலிமை இவற்றிற்கு உறுதுணையாக நிற்பது அன்பே ஆகும்.

இதனைத்தான் வள்ளுவர் “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று கூறுகின்றார்.

நம் வாழ்க்கை என்பது நிலையற்றது. ஆதலால் உயிர்களிடத்தில் அன்பு கொண்டு வாழும் நாட்களில் அன்பு உடையவர்களாக வாழ்ந்து அன்பினை பரப்புவது சிறந்தது. அன்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அன்பின் அவசியம்

மனிதன் தனது வாழ்நாளில் மகிழ்வுடன் வாழ அன்பு அவசியமாகும். வசதியாய் வாழப் பணம் தேவை ஆனால், அந்த வாழ்வை மகிழ்வாகவும், நிறைவாகவும் வாழ அன்பு மட்டுமே போதும் ஆகின்றது.

சமாதானமாகவும், ஒற்றுமையாகவும், சண்டை சச்சரவின்றி அமைதியாகவும், பிறரிடம் அன்பு கொள்ளவது அவசியமாகின்றது.

ஆபத்தின் போதும், அவசர நிலையின் போதும் பிறருக்கு உதவிட அன்பு முக்கியம் பெறுகின்றது. அன்பு மனதில் இருந்தால் மட்டுமே அவற்றை செய்திட முடியும்.

அன்பின் பெருமை

அன்பினால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் ஏதுமில்லை என்றால் அது மிகையாகாது. அன்பு கொண்டவர்கள் தங்கள் உயிரைக் கூட பிறருக்கு கொடுத்து துணிவார்கள். அன்புடையார் பிறர் துன்பப்படும் போது அது கண்டு தானும் துன்பம் கொள்ளுவர்.

மதம், சாதி, இனம் என்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து ஒருவர் மீது இரக்கத்தையும், நேசத்தையும் உண்டு பண்ணக் கூடிய சக்தி அன்பிற்கு உண்டு.

அன்பிற்கு ஈடாக எதையும் கூறிவிடமுடியாது. அன்பை யாராலும் தடுக்க முடியாது.

உயிர்களிடத்தில் அன்பு

இவ்வுலகில் பிறந்தவர்கள் வாழும் குறுகிய காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி அன்பாக நடந்து அவர்கள் அன்பையும் பெற்று பேரானந்தம் அடையலாம்.

மனிதர்களிடம் மட்டுமின்றி மிருகங்கள், பறவைகளுடனும் அன்பு செலுத்த வேண்டும். அன்பிற்கு கட்டுப்படாத உயிர்கள் ஏதுமில்லை. எல்லா மதங்களுமே அன்பு வழியில் நின்று எம்மை ஆற்றுகின்றன.

மிருகங்கள், பறவைகளிடம் நாம் அன்பு செலுத்தும் போது அவை எம்மிடம் கனிவாகப் பழகிடும்.

ஐந்தறிவு படைத்த மிருகங்களே அன்பு செலுத்தும் போது ஆறறிவு கொண்ட மனிதர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டுமல்லவா?

இயற்கையின் மீது அன்பு

உயிர்களிடத்தில் எவ்வாறு அன்பு செலுத்துவது முக்கியமோ அது போல் நாம் இயற்கை மீதும் அன்பு செலுத்த வேண்டும்.

இயற்கை மனிதனுக்கு வாழ்வளித்து வாழ்க்கையை கற்றுக் கொடுக்கின்றது. இயற்கை இல்லை என்றால் மண்ணில் ஈரமில்லை, விளைச்சல் இல்லை, மனித வாழ்க்கையும் இல்லை.

எனவே இயற்கை மீது அன்பு செலுத்தி அதனை பாதுகாக்கவும் வளப்படுத்தவும் நம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

முடிவுரை

இவ்வுலகில் அன்பு அள்ள அள்ளக் குறையாதது. அன்பு பிறருக்கு கொடுக்க கொடுக்க மேலும் வளரும், பெருகும். நமக்கு நன்மையையும், மகிழ்வையும் கொண்டுவரும், சாந்தியையும், சமாதானத்தையும் தரும்.

எனவே இத்தகைய அன்பினை அனைத்து உயிர்களிடத்திலும் இயற்கையிடமும் செலுத்தி மகிழ்வான வாழ்வை வாழ்ந்து அன்பு நிறைந்த அமைதியான உலகை உருவாக்குவோம்.

You May Also Like:
அன்னை தெரசா கட்டுரை
அறிவியலின் நன்மைகள் கட்டுரை