அறிவே அழகு கட்டுரை

நாம் சேர்க்கும் எந்த செல்வங்கள் அழிந்தாலும் அறிவு செல்வம் என்றும் நிலையானதாக இருக்கும். நாம் அனைவரும் வாசிப்பு பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும் இது எம் அறிவை வளர்க்க உதவும்.

அறிவே அழகு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அறிவு என்பதன் பொருள்
  • அறிவின் அவசியம்
  • அறிவின் மகிமை
  • முடிவுரை

முன்னுரை

பொய்கள் எல்லாம் உண்மையாகி, மெய்களைப் பொய்களாக்கி, கொடுமையே அறமாகி திரிகின்ற இன்றைய காலகட்டத்தில் அழகையும், அறிவையும் பகுத்தறிவு கொண்டு நாம் ஆராய்ந்து வாழ வேண்டிய சூழலில் உள்ளோம்.

அழகு என்பது காண்பவர்களது பார்வையை பொறுத்தது ஆனால் அறிவே அழகு என்கின்ற போது அது சிந்தனையை பொறுத்ததாகும். இக்கட்டுரையில் அறிவு பற்றி நோக்கலாம்.

அறிவு என்பதன் பொருள்

அறிவு என்ற சொல்லின் பொருள் பகுத்தறியப்படுகின்ற திறன், தெளிந்த விவேகம் எனலாம்.

இதனையே திருவள்ளுவர் “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என தனது குறளின் மூலம் எடுத்தியம்புகின்றார். எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும் என்பதே இதன் பொருளாகும்.

அறிவின் அவசியம்

அறிவானது எல்லா மனிதர்களுக்கும் அவசியமான ஒன்றாகும். அறிவில்லாதவர்கள் துன்பம் நிறைந்த வாழ்க்கையே வாழ்வர்.

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் ஆகும் இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் அழகிய கருவி அறிவாகும் பகைவரும் உட்பகுந்து அழிக்க இயலாத கோட்டை அறிவு ஆகவேதான் நாம் நல்லறியுடைய மனிதர்களாக வாழ வேண்டும். அப்போதுதான் மகிழ்வான வாழ்வை வாழ முடியும்.

அறிவின் மகிமை

மனிதனின் அறிவு தான் அவனை சிந்திக்க வைத்து இன்று வாழும் நாகரீக மனிதனை உருவாக்கியது. ஆதிகால மனிதன் படிப்படியாக அறிவு வளர்ச்சியினால் தான் இன்று மாற்றம் கொண்டு உலகை ஆளுகின்றான்.

அறிவே நன் மனிதனை தொடக்கி வைக்கின்றது. அதுவே ஒரு மனிதனை முழுமையடையவும் வைக்கின்றது. அறிவின் துணை கொண்டே ஆயிரம் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இந்த உலகானது அழகாக காட்சியளிப்பதற்கு அறிவுடையவர்கள் தான் காரணம். ஏனெனில் உண்மை அழகை நாம் அறிவுக் கண் கொண்டே உணர வேண்டும். அறிவானது துன்பத்தினை உடைத்தெறியவல்லது. ஞானப் படைப்பை கொண்ட அறிவானதே நிலையானது.

நாம் காணும் பொருட்கள் அனைத்திலும் அழகு அடங்கியிருப்பினும், அதை அறிவுக் கண் கொண்டு தேட வேண்டியுள்ளது.

அதாவது, ஒருவர் அணியும் ஆடை ஆபரணங்களின் அழகு பெற்றுத்தந்துடாத பெருமையை அறிவின் அழகு பெற்றுத்தந்திடும். நெஞ்சத்தால் நல்லவராய் நடுநிலமை வழுவாமல் இருக்கத் துணை புரியும் கல்வியே (அறிவே) ஒருவருக்கு அழகு தருவதாகும் எனக் கூறி அறிவின் அழகை மகிமைப்படுத்துகின்றது நாலடியார்.

அறிவே ஒரு மனிதனைப் பெருமையுடைய மனிதனாக உருவாக்கி நல்ல முறையில் வாழ வழிவகை செய்கின்றது. கல்வியறிவு, அனுபவம் மூலம் வரும் அறிவு இரண்டுமுடையவர்கள் சிறந்த அறிவுடையவர்களாக கருதப்படுவர்.

முடிவுரை

இன்றுள்ள சமுதாயமானது முக அழகைப் பார்த்து கானல் நீரைக் கண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற மான்கள் கூட்டத்தைப் போல் புற அழகைக் கண்டு ஓடி தங்கள் சுய அறிவினை இழந்து விடுகின்றார்கள். உண்மையில் அழகே அறிவு என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

அறிவால், ஆற்றலால் பல சமூக தடைகளைக் கடந்து அப்பழுக்கற்ற அழகுக்கு சொந்தக்காரராக மாறி நாட்டையும், சமூகத்தையும் தலைநிமிரச் செய்வோமாக.

You May Also Like:

அறிவு பற்றிய கட்டுரை

அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் கட்டுரை