அழகிய மாலை வானம் கட்டுரை

Malai Katchi Katturai In Tamil

இந்த பதிவில் “அழகிய மாலை வானம் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம்.

கதிரவன் இப்பூமியை விட்டு அகலும் வேளையில் பல வண்ணக் கலவைகளால் நிரம்பிய வானம் செந்தீயைப்போல சிவந்து காணப்படும்.

அழகிய மாலை வானம் கட்டுரை

எல்லையற்ற இந்த பூமிப்பரப்பை இருளானது விழுங்கும் நேரமே மாலைப் பொழுது என அழைக்கப்படுகின்றது. ரம்மியமான மாலைப்பொழுது மனதிற்கு இன்பம் தருவதாகும்.

சூரியன் தன் பொற்கதிர்களால் பூமியைத் தழுவி விடைபெறும் நேரமே அந்தி என அழைக்கப்படுகின்றது. கதிரவன் இப்பூமியை விட்டு அகலும் வேளையில் பல வண்ணக் கலவைகளால் நிரம்பிய வானம் செந்தீயைப்போல சிவந்து காணப்படும்.

மஞ்சள் வெயில் பூமியெங்கும் படர்ந்து அந்திப்பொழுதின் ரம்மியமே பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காணப்படும். மாலை வானில் மேகங்கள் பஞ்சுப் பொட்டலங்களாய் ஆங்காங்கே சூழ்ந்து, காற்றினில் மிதந்து கொண்டிருக்கும்.

அந்தி வானத்தின் அடியினிலே சூரியன் மறையும் போது அதிகாலையில் இரைதேட தொலை தூரமாய் பறந்த புள்ளினங்கள் கூட்டங் கூட்டமாக இருப்பிடங்களை நோக்கி திரும்பும் காட்சி பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

மாலையானதும் மேய்ச்சல் நிலங்களிற்கு சென்ற ஆவினங்கள் களைப்புற்றனவாக கூட்டங் கூட்டமாக வீடு திரும்பும். களனிகளில் கடினமாக உழைத்த விவசாயிகள் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு கலப்பைகளை தோளில் சுமந்தவாறு தத்தமது வீட்டை நோக்கி வேகநடை நடந்து கொண்டிருப்பர்.

மாலை முழுவதும் மைதானங்களிலும் வெளி இடங்களிலும் குதூகலித்த சிறுவர்கள் இருள் சூழத் தொடங்கியதும் தமது வீட்டை நோக்கி விரைவாக செல்லுவார்கள். பகல் முழுவதும் பூமியை சுட்டெரித்த சூரியன் மறையும் நேரமாகையினால் வெம்மை தணிந்து குளிர் பரவத் தொடங்கும்.

பகலெல்லாம் தத்தமது கூடுகளில் ஓய்வெடுத்த இராக்கால பறவைகள் இரை தேடுவதற்காக தமது கூடுகளை விட்டு வெளிவரத்த தொடங்கும்.

நாள் முழுவதும் இரைச்சலுடனும் ஆரவாரத்துடனும் இருந்த இடங்கள் இருள் சூழ்ந்து மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கும் போது அமைதிபெற்று காணப்படும்.

மாலை நேர காட்சி கட்டுரை

காலைப்பொழுது எந்தளவிற்கு மனதை வசீகரிகக் கூடியதோ மாலைப்பொழுதும் பார்த்து இரசிப்பவர்களின் மனதிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரக்கூடியது.

அந்தி வானத்தின் அடியினிலே ஆதவன் மறையும் அழகை பார்த்து இரசிக்க வேண்டும் என்பது எனது என் நெடுநாள் அவா ஆகும். அதனை நிறைவேற்றுவதற்காக என் ஊரின் எல்லையில் உள்ள கடற்கரைக்கு செல்ல வேண்டுமென தீர்மானித்தேன்.

ஒருநாள் பாடசாலை விட்டு வந்து பெற்றோரின் அனுமதியுடன் கடற்கரைக்கு சென்றேன். மாலைப் பொழுதில் சூரிய அஸ்தமனத்தை கண்டுகளிப்பதற்காக என்னைப்போல் பலர் அங்கு வருகை தந்திருந்தனர்.

மேற்கு வானில் ஆழ்கடலின் அடியிலே கதிரவன் அஸ்தமிக்கத் தொடங்கினான். அந்திவானம் வெள்ளை மேகங்களையும் சிவப்பு மஞ்சள் வண்ணங்களையும் உடுத்தி அழகாக காட்சி தந்தது.

மேகங்களிடையே தோன்றிய மஞ்சட்கதிர்கள் கடல் அலைகளில் பட்டுத் தெறித்து என்னுடைய மனதை கொள்ளை கொள்ளச் செய்தது. சூரியன் சிறிது சிறிதாக கடலலைகளில் அமிழத் தொடங்க அந்த இடத்தில் இருள் சூழத்தொடங்கியது.

கடல் தாண்டி இரைத்தேடச் சென்ற புள்ளினங்கள் தமது இருப்பிடத்தை நாடிப்பறந்து கொண்டிருந்தன. கடற்கரையில் குதூகலமாய் விளையாடிய சிறுவர்கள் தமது வீடுகளிற்கு செல்லத் தயாராயினர்.

சில்லென்று வீசிய இளங்காற்று என் மேனியை தழுவிச் சென்றது. அந்தி வானத்தின் அழகும் ஆழ்கடலினுள் சூரியன் மறைவதனை பார்ப்பதும் எனக்கு மிகுந்த மனஅமைதியைத் தந்தது. மனநிறைவுடன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

You May Also Like:
காலை காட்சி கட்டுரை
நான் ஒரு பறவையானால் கட்டுரை