ஊழல் பற்றிய கட்டுரை

ஊழல் கட்டுரை

இந்த பதிவில் “ஊழல் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு நாட்டின் சமூக நல்வாழ்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மோசமான எதிரி ஊழலே ஆகும்.

ஊழல் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஊழலுக்கான காரணங்கள்
  3. ஊழலால் ஏற்படும் பாதிப்புகள்
  4. ஊழலைத் தடுக்கும் வழிமுறைகள்
  5. இந்தியாவும் ஊழலும்
  6. முடிவுரை

முன்னுரை

ஊழல் என்பது சமூக ஒழுக்கத்தை மீறுகின்ற மிக மோசமான விஷயம் என்று கூறினால் அதுமிகையல்ல. ஒரு நாட்டின் சமூக நல்வாழ்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மோசமான எதிரி ஊழலே ஆகும்.

ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும் ஊழல், சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடிக் கிடக்கின்றது எனலாம். ஊழல் சமூகத்திலிருந்தும் நாட்டிலிருந்தும் களையப்பட வேண்டியது மிகவும் அவசியமானதும், அவசரமானதும் ஆகும்.

ஊழல் பற்றிய பல்வேறு விடையங்கள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஊழலுக்கான காரணங்கள்

ஊழல் நிகழ்வதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. இதில் முதன்மையானதாக மனித பேராசைதான் மக்களை இதுபோன்ற செயல்களுக்குத் தள்ளுகின்றது எனலாம்.

மேலும் குறைந்த அளவிலான கல்வி, கடமை உணர்வின்மை மற்றும் ஊழல் செயலில் பங்கேற்பாளர்களின் பிற தனிப்பட்ட பண்புகள் போன்றவையும் ஊழலுக்கான காரணமாக காணப்படுகின்றது.

குறைந்த வருமானம், போதிய பண வரவு இல்லாமை காரணமாகவும் பலர் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

சட்ட மற்றும் நீதி அமைப்பின் செயலிழப்பு மற்றும் ஊழல் குற்றத்திற்கு போதுமான தண்டனை இல்லாத காரணத்தினாலும் ஊழல் நிகழ்கின்றது. தொழில்முறையில் திறமையின்மை, அதிகாரத்துவம் போன்ற காரணங்களினாலும் ஊழல் நிகழ்கின்றது.

ஊழலால் ஏற்படும் பாதிப்புகள்

பொருளாதார வளர்ச்சிக்கும், அரசின் வளர்ச்சிக்கும் இடையூறாக இருக்கிறது, மற்றும் சமூக சமத்துவமின்மை ஏற்படுகின்றது.

ஊழல் ஒரு சாமானுயனுக்குக் கிடைக்க வேண்டிய தரமான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையெல்லாம் திருடி விடுகிறது, ஊழலில் ஈடுபட்டமை சமூகத்தில் உள்ளவர்களுக்குத் தெரிய வரும்போது சமூகத்தில் அவர்களுக்கான நன்மதிப்பு இல்லாமல் போய்விடுகின்றது.

ஊழலால் அதிகம் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

ஊழலைத் தடுக்கும் வழிமுறைகள்

தனிநபர்கள் தொடங்கி, அரசாங்கம் வரை இணைந்து செயல்படுத்தினால்தான் ஊழலை ஒழிப்பது சாத்தியம்.

ஊழல் குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அறிவிப்புப் பலகைகள் இருப்பதில்லை. அவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒருவர் மீது லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டால் கூட அதற்கான தீர்ப்பு வருவதற்கு நீண்டகாலம் எடுக்காமல் ஊழல் வழக்குகளைத் தினசரி விசாரிக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் லஞ்சம் கேட்பவர்கள் மீது தைரியமாகப் புகார் செய்ய மக்கள் முன்வர வேண்டும்.

இந்தியாவும் ஊழலும்

இந்தியாவில் இன்று ஊழல் இத்துறையில் இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியாத அளவு அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. எனினும் இந்திய அளவில் அதிகம் ஊழல் அதிகம் நடக்கும் துறையாக காவல்துறை கூறப்படுகின்றது.

சுதந்திரத்துக்குப் பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எனினும் முற்றுமுழுதாக ஊழலை அழிக்க முடியவில்லை.

முடிவுரை

அதிகாரத்தால் மட்டும் ஊழல் நடப்பதில்லை. ஊழலற்ற தேசமாக மாற வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாற வேண்டும். எந்தவொரு பணிக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்குவதுதான் உண்மையான மக்களாட்சி என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

You May Also Like :
போதைப்பொருள் பாவனை கட்டுரை
காமராஜர் பற்றி கட்டுரை