இந்த பதிவில் “இயற்கை பேரிடர் கட்டுரை” பதிவை காணலாம்.
இயற்கை சீற்றம் கொண்டு அழிவினை ஏற்படுத்த மனிதனின் நடவடிக்கைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
இயற்கை பேரிடர் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- இயற்கைப் பேரிடர்களும் மனிதர்களும்
- பேரிடர் மேலாண்மை
- இயற்கைப் பேரிடரால் ஏற்படும் பாதிப்புகள்
- இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கை எப்போதும் அழகு நிறைந்தது. மனிதனுக்குப் பல வழிகளிலும் உறுதுணையாகவும்⸴ மனிதகுல இருப்பிற்கு காரணமாகவும் உள்ளது.
இதற்கு மாறாக இயற்கையின் கோர முகம் அவ்வப்போது வெளிவந்த வண்ணமே உள்ளது. இதனை இயற்கை பேரிடர் உணர்த்திச் செல்கிறது.
புவி காலநிலை வேறுபாடு காரணமாக பேரிடர் நிகழ்கின்ற போதிலும் அதன் பின்னணியில் மனிதனது செயற்பாடுகளும் தங்கியுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
இதன் மூலம் மனிதகுலம் உயிரிழப்பு⸴ சொத்திழப்புக்களையும் சந்திக்கின்றது. இது அபாயகரமானதாக உணரக்கூடிய நிகழ்வாகும். இத்தகைய இயற்கைப் பேரிடர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்
இயற்கைப் பேரிடர்களும் மனிதர்களும்
உலகம் இன்றுவரை இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்த வண்ணமே உள்ளது. சுனாமி⸴நிலநடுக்கம்⸴ எரிமலை வெடிப்பு⸴ மண்சரிவு⸴ புயல்⸴ வெள்ளப்பெருக்கு⸴ வறட்சி⸴ பனிச்சரிவு⸴ மின்னல் மற்றும் இடி போன்ற பலவற்றையும் கூறலாம்.
நிலநடுக்கம் இயற்கை பேரிடர் என்றாலும் அதன் பின்விளைவுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை ஆகும். நகரங்களைக் கட்டும் மனிதனின் திட்டங்களும்⸴ நடவடிக்கைகளும் ஊரு விளைவிக்கப்பட்டு அவை பேரிடர் ஆகின்றன.
இதேபோல் 2013இல் உத்தரகண்டில் பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு நுண்மையான மலைப் பகுதிகளில் மின் உற்பத்திக்கான அணைகள் கட்டப்பட்டு அவற்றின் பொருட்டு பெரும் சாலைகள் அமைக்கப்பட்டது தான் காரணம் என உறுதியானது.
பேரிடர் மேலாண்மை
இடர் என்பது அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.
இந்த இடரானது உச்ச நிலையை அடையும்போது அது பேரிடராக மாறுகின்ற தன்மையையும்⸴ அவற்றினால் ஏற்படும் தீமைகளையும் அறிந்து அதிலிருந்து விடுபட உதவும் உத்திகளை ஏற்படுத்துவதே பேரிடர் மேலாண்மை ஆகும்.
பேரழிவுக்கு எதிரான நடவடிக்கைகளை இயற்கை அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்குப் பின்னர் சமுதாயத்தை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
இயற்கைப் பேரிடரால் ஏற்படும் பாதிப்புகள்
இயற்கை பேரிடரானது மனித குலத்திற்கு மட்டுமல்லாது விலங்குகள்⸴ தாவரங்கள் போன்றவற்றிற்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
இயற்கைப் பேரிடரினால் மனிதனின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. உயிரிழப்பு⸴ சுகாதார சீர்கேடுகள்⸴ சமுதாய சீர்கேடுகள் மற்றும் பொருளாதார சீர்கேடுகள்⸴ சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்றனவும் ஏற்படுகின்றன.
உலகில் நிகழ்ந்த பல இயற்கைப் பேரிடர் காரணமாகப் பல கோடிக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அது மட்டுமல்லாது உடமைகள்⸴ சொத்துக்கள் போன்றனவும் அழிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதனையும் கடந்த காலங்களில் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள்
- தீவிரம் மற்றும் இழப்புகளை அறிதல் வேண்டும்.
- இயற்கை வளங்களை சேகரித்தல்⸴ அத்தோடு மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல்.
- தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல்.
- எச்சரிக்கைகளைச் சரியாகப் புரிந்துவைத்துக் கொள்ளல் அவசியமாகும்.
- வதந்திகளை பேரிடர் காலத்தில் நம்பாதிருப்பதும் அவசியமே.
முடிவுரை
இயற்கை மனித வாழ்வியலோடு இணைந்து ஆகும். எனினும் இயற்கை சீற்றம் கொள்கின்ற போது மனிதனால் அதை தடுத்து நிறுத்த முடியாது.
எனவே முடிந்தளவு இயற்கையின் சமநிலை மாறாத வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையை நேசிப்போம், இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.
You May Also Like: