இந்த பதிவில் அறிவை கூர்மையாக்க “இளமையில் கல்வி கட்டுரை” பதிவை காணலாம்.
உடலும் உள்ளமும் விரைந்து செயற்படக்கூடிய பருவம் இளமைப் பருவம் என்பதினால் இளமைப் பருவத்திலேயே கல்வியைக் கற்பது மிகவும் சிறந்ததாகும்.
இளமையில் கல்வி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளமையும் கல்வியும்
- இளமைக் கல்வியின் அவசியம்
- கல்வியின் சிறப்பு
- கற்றதன் பயன்
- முடிவுரை
முன்னுரை
வாழ்வியல் பருவங்களில் குறிப்பிடத்தக்க முக்கிய பருவங்களாக இளமைப் பருவம் மற்றும் முதுமைப் பருவம் போன்றன காணப்படுகின்றன. இதில் இளமைப் பருவமே வாழ்க்கையின் தொடக்க பருவமாகும்.
உலக மக்களில் பெரும்பாலானோர் இளமைப் பருவத்தினையே அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் இளமைப் பருவமே மனிதனின் மனங்களில் பல மாற்றங்களுக்கு வழிவகுப்பதுடன் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகவும் திகழ்கின்றது.
இக்காலத்திலே நாம் கல்வியை கற்றுக்கொள்ள அதிகம் வாய்ப்பு கிடைக்கின்றது. உடலும் உள்ளமும் விரைந்து செயற்படக்கூடிய பருவம் இளமைப் பருவம் என்பதினால் இளமைப் பருவத்திலேயே கல்வியைக் கற்பது மிகவும் சிறந்ததாகும். இளமையில் கல்வி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமையும் கல்வியும்
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்பார்கள் நம் முன்னோர்கள் இளமையில் கற்கும் கல்வி நமது மனதில் நன்கு பதியும். கல்லில் எழுதப்பட்ட எழுத்துப்போல் அழியாது.
இளம் வயதில்தான் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும். பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எவ்வாறு அதிவேகமாக இறங்குமோ அதுபோன்று இளமையில் விரைவில் அனைத்தையும் கற்கலாம்.
இளமைக் காலத்தில் மனமானது எதனையும் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் வாய்ந்தது. இதனைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் ‘‘இளமையில் கல்’’ என்று கூறியுள்ளனர்.
இளமைக் கல்வியின் அவசியம்
ஐந்து வயதிற்குள் ஒரு குழந்தை பெறும் அறிவு வளர்ச்சி குழந்தையின் ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்று உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.
இதனால் இக்காலத்தில் கல்வி அறிவைப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகிறது. இளமையில் கற்பது அனைத்திற்கும் அஸ்திவாரம் போன்றதாகும்.
கல்வியின் சிறப்பு
நம் வாழ்க்கையை முன்னேற்றும் சக்திவாய்ந்த கருவி கல்வியாகும். கல்வி நமது அறிவையும், ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல மதிப்பை தரும். கல்வி ஒழுக்கம் மற்றும் நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்தும்.
படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்கிறார் பேரறிஞர் பிளாட்டோ.
ஒரு மனிதன் கல்வியை பெறாமல் இருப்பதனால் அவனது பிறப்பிற்கு எந்தவித அர்த்தமும் இல்லை.
மற்றவர்களிடம் இருக்கும் பணம் பொருள் செல்வமானது காலத்தால் அழியக்கூடியது. கள்வர்களால் திருடிவிடக்கூடியது. ஆனால் கல்விச் செல்வமானது காலத்தினால் அழியாது. கள்வர்களினால் திருட முடியாது.
கற்றதன் பயன்
நாம் பெற்றுக் கொள்கின்ற பயன் நமக்கு மட்டும் பயன்படுவதாக இருக்கக்கூடாது. அந்தக் கல்வியை சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படும் வகையில் நாம் சேவையாற்ற வேண்டும்.
அறியாமையில் இருப்பவர்களுக்கு எமது கல்வி அறிவினால் உதவி செய்ய முடியும். நல்ல எண்ணங்களை வளர்த்து சிறந்த செயல்களையும் செய்ய வேண்டும். அதுவே கல்வியின் பயனாகும்.
இதனைத் திருவள்ளுவர் “கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று வலியுறுத்துகின்றார். கல்வியின் படி நடப்பதே கற்ற கல்வியின் பயனாகும்.
முடிவுரை
எம்மையும் இந்த உலகத்தையும் மாற்றி நல்வழியில் இட்டுச் செல்லக்கூடிய பெரும் சிறப்பு கல்விக்கு இருக்கின்றது.
இந்த உலகையே மாற்றக் கூடிய ஒரு பலமான ஆயுதம் உண்டு அதுதான் கல்வி என்கின்றார் நெல்சன் மண்டேலா.
படிப்பில் மட்டுமே பாரதத்தை பாராளச் செய்யலாம் என்ற அப்துல் கலாமின் வாக்கினை போல் நாமும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து மேன்மை அடைவோம்.
You May Also Like: |
---|
கல்வியின் சிறப்பு கட்டுரை |
கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை |