நாட்டின் முதுகெலும்பாக திகழும் “இளைஞர்கள் பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.
சமூகத்தின் மீது பற்றும் நாட்டின் மீது காதலும் கொண்ட இளைஞர்கள் ஒரு நாட்டின் பெரும் சொத்துக்கள் ஆவர். இளைஞர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளே முன்னேற்ற பாதையில் பயணிக்கும்.
இளைஞர்கள் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- அறிமுகம்
- நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு
- சமூக முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு
- எடுத்துக்காட்டான இளைஞர்கள்
- சாதிக்கும் உணர்வை விதைப்போம்
- முடிவுரை
அறிமுகம்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கிய பங்காளிகளாவர். துடிப்புமிக்க இளைஞர்கள் கைகளில் தான் நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. பழம்பெருமை மிக்க நம் இந்திய நாட்டில் இன்றைய மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாகவே உள்ளனர்.
நவீன உத்தி⸴ புதுமைகள் செய்தல்⸴ தாராள முயற்சி இவை அனைத்தையும் கொண்ட இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர். இத்தகைய இளைஞர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு
இளைஞர்களின் பங்களிப்பும் மாறுபட்ட அணுகுமுறைமையும் நாட்டின் வளர்ச்சிப் போக்கினை தீர்மானிப்பதற்கு பேருதவியாக இருந்தால் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சி விரிவுபடுத்தப்படும்.
அந்தவகையில் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிப் படிக்கற்களாவர். இளைஞர்களின் நேரடி மற்றும் மறைமுகமான பங்களிப்பானது நவீன இந்தியாவின் சவால்களையும்⸴ சறுக்கல்களையும் எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை கண்டறிந்து அரசியல் சமூகப் பொருளாதாரத்தில் வளமான பாதையில் பயணிக்க உதவுகின்றது.
சமூக முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு
இன்றைய இளைஞர்களின் பங்களிப்பானது சமுதாயத்தில் மிகவும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இளைஞர்கள் மத்தியில் எதையும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும்⸴ துணிவும் இருக்கின்றது.
எனவே ஒரு சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றால் அது இளைஞர்களின் கையில் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவது இந்த சமூகத்தின் கடமையாகும்.
சமூக சேவைகளில் இளைஞர்கள் தங்களை முழுமனதுடன் இணைத்துக் கொள்ளும்போது சமுதாயம் வளர்ச்சி காணும். சமுதாய அக்கறை உள்ளவர்கள் தான் நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களாக இருப்பர்.
எடுத்துக்காட்டான இளைஞர்கள்
சாதனை படைத்த இளைஞர்கள் பலர் சமுதாயத்தில் எடுத்துக்காட்டாக உள்ளனர். அன்று இளைஞரான காந்தியின் மனதில் எழுந்த சிந்தனைகளும்⸴ உத்வேகமும் தான் இந்திய சுதந்திரத்திற்காக அவரை அகிம்சை வழியில் போராட வைத்தது. கத்தியின்றி⸴ ரத்தமின்றி நடந்த விடுதலைப் போராட்டம் உலக சரித்திரத்தில் அழியா இடம் பிடித்தது.
இளமை முதல் ஐன்ஸ்டீனிடம் இருந்த அறிவியல் தாகம் தான் அவரை விஞ்ஞானத் துறையில் தடம் பதிக்க வைத்தது. “கர்ணம் மல்லேஸ்வரி” இல் தொடங்கிய ஒலிம்பிக் பதக்க வேட்டை “அபினவ் பிந்த்ரா” வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
சாதிக்கும் உணர்வை விதைப்போம்
இந்திய சமூகத்தில் ஜாதி உணர்வு அதிகம் உள்ளது. என்றாலும் பள்ளி⸴ கல்லூரிகள் மூலம் இது ஓரளவு தடுக்கப்படுகின்றது. இதனை முழுமையாக களைந்து சாதிக்கும் உணர்வைச் சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும்.
படித்து முடித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை ஊக்குவிக்காமல் சொந்த நாட்டில் சாதனை புரிந்து தாய் நாட்டின் பெருமையை பேணிக்காக்கும் உணர்வை இளைஞர்கள் மனதில் வளர்க்க வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்⸴ கல்வி உணர்வுக்கு ஊக்கப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.
முடிவுரை
இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். அத்தகைய இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள் ஆவார்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்த அவர்கள் தங்களது திறன்களை இழந்து விடாமலும் இருக்கும் வகையில் திறன்களை மேம்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது திறன்மிகு இந்தியா மட்டுமல்ல வல்லரசு இந்தியாவையும் உருவாக்க முடியும்.
You May Also Like: