உலகின் தொட முடியாத உயரங்களை தொட்டவர்கள் மனதிலும் வாழ்விலும் உண்மையினை கடைப்பிடித்தவர்களே ஆவார்கள். இந்த பதிவில் உண்மை பேசுதல் பற்றி நோக்கலாம்.
உண்மை பேசுதல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உண்மையின் உயர்வு
- சான்றோர் கருத்து
- வாய்மையே வெல்லும்
- உள்ளத்தில் துணிவு
- முடிவுரை
முன்னுரை
மனிதர்கள் கடைப்பிடிக்கின்ற ஒழுக்கங்களில் தலைசிறந்த ஒன்றாக உண்மை பேசுதல் காணப்படுகின்றது. பாரதியார் இது பற்றி பாடுகையில் “பொய் சொல்ல கூடாது பாப்பா” என்று குழந்தைகளிடத்தும் இந்த மனிதர்களிடத்தும் உண்மை பேசுதலின் அவசியத்தை விதைக்கின்றார்.
உண்மையாய் நடந்தவர்கள் இந்த உலகில் பல இன்னல்களை எதிர்கொண்டிருந்தாலும் எக்காலமும் அழியாத புகழையும் மேன்மையினையும் அடைந்திருக்கின்றார்கள்.
உண்மையின் உயர்வு
நாம் சிறுவயதில் இருந்த போது பல வரலாற்று கதைகளை கேள்வி பட்டிருப்போம். உண்மை பேசி இந்த உலகின் உன்னத நிலையினை அடைந்த அரிச்சந்திரன் கதை அனைவர் மனங்களையும் பாதிக்க கூடியது.
இந்த உலகில் உண்மையாக இருப்பது மிகவும் கடினமானது இருந்தாலும் அதனை போல மனநிறைவை தருவது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
உலகின் தொட முடியாத உயரங்களை தொட்டவர்கள் மனதிலும் வாழ்விலும் உண்மையினை கடைப்பிடித்தவர்களே ஆவார்கள்.
சான்றோர் கருத்து
உண்மை பற்றி நமக்கு எடுத்துரைப்பனவாக பல சான்றோர்களின் படைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் அவர்கள் வாழ்வில் உண்மையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்திகின்றார்கள். சிறப்பாக உலக பொதுமறையாம் திருக்குறளில்
“வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல்” என்று கூறப்படுகின்றது.
அதாவது பிறருக்கு தீங்கு விளைவிக்காத செயல்களே உண்மையானவை என்று திருக்குறளானது அழகாக எடுத்து கூறுகிறது.
வாய்மையே வெல்லும்
ஒரு சமூகத்தின் சட்டத்தையும் மக்களையும் காப்பாற்றும் நீதி மன்றங்களில் எம்மால் அவதானிக்க கூடிய வாசகமாக “வாய்மையே வெல்லும்” என்பதனை நாம் அவதானிக்கலாம்.
இந்த வசனமானது மனிதர்களிடத்தில் உண்மையாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை போதிக்கின்றது.
வாழ்வில் எத்தனை இடர்கள் வருகின்ற போதிலும் நாம் தவறான வழிகளை தேர்ந்தெடுக்க கூடாது. பொய்மை புயல்போல் சூழ்ந்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதுவே திண்ணம்.
உள்ளத்தில் துணிவு
எமது மனதில் உறுதி வேண்டுமானால் எமது எண்ணத்திலும் பேச்சிலும் உண்மையானது இருக்க வேண்டும்.
இந்தியாவின் தேசபிதா என்று அழைக்க கூடிய மகாத்மா காந்தி அவர்கள் சத்தியத்தின் வழி நின்றவர்.
அவரது உண்மையும் சத்தியமும் தான் அவரை இந்தியாவின் மகத்தான தலைவராக மாற்றியுது அதுவே இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தையும் பெற்று கொடுத்தது. ஆக நாமும் உண்மையோடு உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
முடிவுரை
சமகாலத்தில் அநீதிகள் தலைதூக்கும் வேதனை அழிக்கும் நிகழ்வுகள் நம்மை சுற்றி இடம்பெற்று கொண்டிருந்தாலும். அவற்றினை பொருட்படுத்தாது நாம் நல்ல எண்ணங்களையும் பழக்கங்களையும் நமக்குள் விதைத்து கொள்ள வேண்டும்.
இத்தகைய நல்லெண்ணம் எம்மையும் எமது சமூகத்தையும் நல்வழியில் இட்டு செல்லும்.
You May Also Like: