இந்த பதிவில் “காலை காட்சி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.
அதிகாலை பொழுதின் அமைதியான எழில் கொள்ளும் சூரிய உதய காட்சியை காணும் பொது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும்.
நான் கண்ட காலை காட்சி கட்டுரை
அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து, அமைதியான மனதுடன் கிழக்கு வானத்திலிருந்து சூரியன் உதித்தெழும் காட்சியை கண்டுகளிக்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசையாக இருந்தது.
அதற்கெனவே ஒருநாள் காலை ஐந்து மணிக்கு நித்திரை விட்டெழுந்தேன். என்னுடைய வீட்டின் சுற்றுப்புறம் பரந்து விரிந்த வயற்பரப்புகளுடன் கூடிய வெளியாக இருந்தது.
வயல்வெளியில் அடிவானத்திலிருந்து சூரியன் உதித்தெழும் காட்சி தெளிவாகத் தெரியும் என்பதால், நெல் மணிகள் கதிர்களாகக் காய்த்துத் தொங்கும் வயலின் வரம்பில் அமர்ந்திருந்தேன்.
முற்றாக இருள் விலகியிராத அந்த அதிகாலை வேளையில் சில்லென்ற இளம் காற்று என்னைத் தழுவிச் சென்றது. காற்றில் இருந்த ஈரப்பதன் என்மேனியை நடுநடுங்கச் செய்தன.
நெல்மணிகளினூடாக காற்று வீசும் போது அவை எழுப்பிய இசை இனிமையாக இருந்தது. இருண்டிருந்த வானத்தில் வெகுதொலைவில் ஒன்றிரண்டு விடிவெள்ளிகள் கண்சிமிட்டி நின்றன.
பொழுது புலர்வதற்கு அறிகுறியாக சிறிது சிறிதாக பறவைகளின் கீச்சுக் குரல்கள் கேட்கத் தொடங்கின. கண்ணுக்கு எட்டாத தொலைவில் அமர்ந்திருந்த கருங்குயிலொன்று பெருங் குரலெடுத்துக் கூவியது. குருவிகள் கீச்சு கீச்சு என சத்தமிட்டவாறு இரை தேட தயாராகின.
தொலைவானில் சூரிய உதயத்திற்கு அறிகுறியாக வானம் சிவந்து ஒளிப்பிழம்புகள் தெரியத் தொடங்கின. சற்று நேரத்திற்குள் கிழக்கு அடிவானம் செக்கச் சிவந்து சூரியன் உதயமாகத் தொடங்கினான்.
ரம்மியமான அந்தக் காட்சி மனதிற்கு இனிமையையும் உடலிற்கு புத்துணர்வையும் தந்தது. சில்லென்று வீசிய குளிர்காற்று சூரியக் கதிர்களால் வெம்மை பெறத் தொடங்கியது.
கூடுகளின் அமர்ந்திருந்த புள்ளினங்கள், தம்முடைய இரைதேடி வெகுதொலைவிற்கு பயணப்பட தொடங்கின. கணீரென ஒலித்த ஆலய மணியின் ஓசையில் பொழுது புலர்ந்து வெகு நேரமாகி விட்டதை உணர்ந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
காலை காட்சி கட்டுரை – 2
இரவெல்லாம் இவ்வுலகை சூழ்ந்திருந்த கருமையை விரட்டி ஆகாயத்தின் கிழக்கு பக்கம் கதிரவன் உதித்தெழுந்து இப்பூமிப் பரப்பை தன் கதிர்களால் அரவணைத்துக் கொள்ளும் ரம்மியமான பொழுதே காலைப் பொழுதாகும்.
அடிவானம் மஞ்சள் சிவப்பு நிறங்களால் செந்தனலென சிவந்திருக்க அதிலிருந்து சூரியன் வெளிப்படும் காட்சி அனைவரையும் மதிமயங்கச் செய்யக் கூடியது. இருளடர்ந்திருந்த இடங்களிலெல்லாம் சிறிது சிறிதாக ஒளி படர்வதை பார்க்கும் போதே மனதிற்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும்.
இரவு முழுவதும் உறங்கிக் கொண்டிருந்த இவ்வுலகம் சூரியனின் வருகையினால் உயிர் பெற்றெழும். தம்முடைய இருப்பிடங்களில் உறங்கிக் கொண்டிருந்த ஆவினங்கள் வரிசை வரிசையாக இரைதேட சென்று கொண்டிருக்கும்.
கூடுகளில் அமர்ந்திருந்த பறவையினங்கள் இரைதேடுவதற்காக கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து கொண்டிருக்கும். நிசப்தமாக உறைந்திருந்த இடங்கள் பறவைகளின் ஆனந்த ஒலியினால் நிறைந்திருப்பது மனத்திற்கு புத்துணர்சியைத் தரும்.
சூரிய ஒளியினால் நித்திரை விட்டெழுந்த மனிதர்கள் தங்களுடைய அன்றாட கடமைகளை செய்வதற்காக தயாராகி கொண்டிருப்பார்கள். விவசாயிகள் தம் வலிமையான தோள்களில் மண்வெட்டி மற்றும் கலப்பைகளை தாங்கியவாறு தங்களுடைய வயல் மற்றும் தோட்டங்களை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள்.
வேறு வேலைகளிற்கு செல்பவர்கள் மிகவும் விரைவாக தம் பணியிடத்திற்கு செல்ல தயாராகுவார்கள். அவசரமாக ஓடும் மனிதர்களையும் அவர்களின் மிகவிரைவான வாழ்க்கை ஓட்டத்தையும் பார்க்கும் போது மனதிற்குள் கவலை எழுந்தது.
வெள்ளை உடை அணிந்தவாறு நிரை நிரையாக வந்த மாணவர்களின் உற்சாகத்தையும், அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும் பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த நிறைவும் உற்சாகமும் எமது மனதில் தோன்றும்.
இனிமையான காலைப் பொழுதானது பலதரப்பட்ட உணர்வுகளை பெற்றுத் தரும் அற்புதமான பொழுதாகும்.
You May Also Like: |
---|
எனது எதிர்கால கனவு கட்டுரை |
நான் ஒரு கிளி கட்டுரை |