இந்த பதிவில் “சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.
பெயர்: | சர்தார் வல்லப்பாய் படேல் |
பிறப்பு: | அக்டோபர் 31, 1875 |
பிறப்பிடம்: | நடீயாத், மும்பை மாகாணம், இந்தியா |
நாட்டுரிமை: | இந்தியா |
தந்தை: | ஜாவர்பாய் பட்டேல் |
தாய்: | லட்பாய் |
தொழில்: | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
இறப்பு: | 15 டிசம்பர் 1950 (அகவை 75) |
சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு
அறிமுகம்
இந்தியா விடுதலை அடைந்தபோது நாடு முழுவதும் ஆங்காங்கே மன்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 565க்கு மேற்பட்ட ராஜ்யங்கள் ஆண்டு கொண்டிருந்தன. இவ்வாறு சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைத்த பெருமை வல்லபாய் பட்டேலை சாரும்.
ஆனாலும் இப்பணி அவ்வளவு எளிதானது அல்ல. எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலக்கை அடையப் பல வழிமுறைகளையும் பின்பற்றி சிறிதும் அசராமல் இரும்பு மனிதர் போல் நின்று நாட்டை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்தார் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்.
இவர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும்⸴ உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற சிறப்புக்குரியவர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
ஜாவர்பாய் பட்டேல் – லட்பாய் தம்பதியினருக்கு 1875 ஒக்டோபர் 31ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரம்சந்த் என்ற ஊரில் மகனாகப் பிறந்தார். இவர் ஒரு குஜராத்திய குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார்.
இவருக்கு சோமாபாய் பட்டேல், நாச்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்மார்களும்⸴ காசிபாய் என்ற தம்பியும்⸴ தைபா என்ற தங்கையும் உடன்பிறப்புக்கள் ஆவார்.
இவர் தனது 22வது வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். தனது வழக்கறிஞர் குறிக்கோளை அடைந்து கொள்ள இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் படிப்பினை கற்றார். இரண்டு ஆண்டுகளிலேயே தேர்ச்சியும் அடைந்தார். அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
1890ஆம் ஆண்டு உயர்நிலைக் கல்வி பயிலும் போதே தனது 16வது வயதில் ஜாவெர்பென் படேல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
மனைவி ஜாவெர்பென் படேல் அவரது 33வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இவர் மனைவி மீது கொண்ட தீராத அன்பினால் மறுமணம் செய்துகொள்ளவில்லை.
வல்லபாய் பட்டேலின் சாதனைகள்
காந்தியின் உரையில் கவரப்பட்டு வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு சுதேசி இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
குஐராத் கேடா என்ற இடத்தில் அக்காலத்தில் பஞ்சம் நிலவியது. ஆங்கிலேய அரசிடம் வரிகேட்டு விவசாயிகள் போராடினர். விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
1937-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். இவரின் ஆற்றலை பாராட்டிய காந்திஜி அவர்கள்⸴ இவருக்கு “சர்தார்ˮ பட்டத்தை வழங்கினார்.
சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணையலாம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்ததும்⸴ அதனை சாதுரியமாக பயன்படுத்திய பட்டேல் அவர்கள் இந்தியாவிலிருந்த 500க்கும் மேற்பட்ட பிரிவினைகளை ஒருங்கிணைத்தார்.
இதனால் “இரும்பு மனிதர்ˮ என அழைக்கப்பட்டார். தற்போது உள்ள மாநிலம் சார்ந்த இந்தியாவை உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களையே சாரும்.
சுதந்திரத்தின் பின் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 வரை சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாது 1947ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான போரின் போது ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் செயற்பட்டார். சுதந்திர இந்தியாவின் சிப்பாய் என அழைக்கப்படுகின்றார்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1949ஆம் ஆண்டு வரை அமைச்சராகப் பணியாற்றினார். அரசியலமைப்பை வரையும் குழுவின் தலைவராக பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரை நியமிக்கும் முடிவை எடுத்ததும் இவரே.
ஐ.ஏ.எஸ்⸴ ஐ.பி.எஸ் போன்ற அரசு ஊழியர்கள் அமைப்பை உருவாக்கிட இவரது பங்களிப்பு அளப்பரியதாகும்.
அகில இந்திய “குடிமைப் பணிகளின் தந்தைˮ எனவும் இந்திய குடிமைப் பணியாளர்களுக்கான “புனித புரவலர்ˮ என்றும் அழைக்கப்படுகின்றார்.
கௌரவிப்புக்கள்
படேல் தனது இறப்பிற்குப் பின்பு 1991 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமகன்களுக்கான விருதான “பாரத ரத்னா விருதுˮ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1948ஆம் ஆண்டில் நவம்பரில் நாக்பூர் பல்கலைக்கழகம்⸴ அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் படேல் சட்டத்திற்கான “கௌரவ முனைவர்ˮ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
படேல் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்திடமிருந்து “கௌரவ முனைவர்ˮ பட்டத்தையும் 1949ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பஞ்சாப் பல்கலைக் கழகத்திடமிருந்து “முனைவர்ˮ பட்டத்தையும் பெற்றார்.
1947ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் படேல் இடம் பெற்றிருந்தார்.
படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ராஷ்டிரியா ஏக்தா திவாஸாக (தேசிய ஒற்றுமை தினம்) 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
நினைவுச்சின்னம்
சர்தார் – வல்லபாய் படேல் தேசிய நினைவகம், அகமதாபாத் சர்தார் சரோவர் அணை, குஜராத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.
ஒற்றமைக்கான சின்னமாக 182மீற்றர் அடி உயயரத்தில் உலகின் உயரமான சிலை பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பட்டேலின் 143ஆவது பிறந்த தினமான 2018ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் குஐராத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேல் அவர்கள் தனது 75ஆவது வயதில் காலமானார். இவர் உலகைவிட்டு மறைந்தாலும் இந்திய தேசத்திற்கு இவர் ஆற்றிய பணி என்றும் மங்காமலும் மறையாமலும் உள்ளது என்றால் அதுமிகையாகாது.
You May Also Like: |
---|
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு |
இடி அமீன் வாழ்க்கை வரலாறு |