சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் | ஜுன் 26 |
International Day in Support of Victims of Torture | June 26 |
உடலால், உள்ளத்தால் வலியினையும், வேதனையினையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது சித்திரவதையாகும். நாகரீகமான வளர்ச்சிக் காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அதி உச்சத்தைத் தொட்டு மனித வாழ்க்கையை நாகரீகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனாலும் கூட நாகரீகமடைந்த மனித மனங்கள் சில மிருகத்தை விட மோசமான மனநிலையில் இருந்து வருகின்றன.
நாகரீகமும், விஞ்ஞானமும் வளர வளர மனிதர்களை வதை செய்யும் உத்திகளும் நவீனமடைந்து வரும் அவலநிலையும் தொடர்கிறது.
சர்வதேச சட்டத்தின் கீழ் சித்திரவதைக்கு முழுமையான தடை இருந்தபோதிலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் சித்திரவதைகள் தொடரத்தான் செய்கின்றன.
சர்வதேச சித்திரவதை தினம் உருவாக்கப்பட்டது வரலாறு
1987 ஆம் ஆண்டு சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு எதிராக ஐ.நா மாநாடு நடாத்தப்பட்டது. உறுப்பு நாடுகளால் சித்திரவதைக்கு எதிரான மாநாட்டை திறம்பட செயல்படுத்துவதற்கும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது.
சித்திரவதைக்கு எதிரான முக்கிய நடவடிக்கைக்கான இந்த மாநாடு 162 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஜூன் 26 ஆம் திகதியை சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு நாளாக அறிவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
சர்வதேச சித்திரவதை தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம்
ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.
சித்திரவதைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கை பாதுகாப்பதை நோக்கவும், சித்திரவதையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தின் முக்கியத்துவம்
சித்திரவதை செய்பவர்கள் “எல்லா மனித குலத்தின் எதிரியாக” பார்க்கப்படுகிறார்கள். சித்திரவதை மிகவும் காட்டுமிராண்டித்தனமாகவும், நாகரீக சமூகத்துடன் ஒத்துப்போகாததாகவும் கருதப்படுகிறது.
சித்திரவதைக்கு எதிராக ஒன்றுபடுவதற்கும் குரல் எழுப்புவதற்கும் இந்நாள் ஒரு வாய்ப்பளிக்கிறது.
உலகெங்கிலும் விடுதலை, நீதி, மனிதாபிமானம் மற்றும் அமைதி ஏற்பட மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுதல் அவசியமாகின்றது. இதனை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் இன்றியமையாததாக உள்ளது.
எதிர்காலத்தில் சித்திரவதை ஏற்படாமல் தடுப்பதற்கு இந்நாள் முக்கியம் பெறுகின்றது. குறிப்பாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சித்திரவதைகளுக்கெதிராக உள்ள சட்டக் காப்புகளை அறிந்திருப்பது எதிர்காலத்தில் சித்திரவதைகளை தடுக்கும் முயற்சிக்கும் வலுச் சேர்க்கும்.
சித்திரவதைக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகள் அவசியமாகின்றது. இத்தினம் கொண்டாடப்பட்டதன் பிற்பாடு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. தன்னார்வ நிதியம் நன்கொடைகளை வழங்குகின்றது. உலகெங்கிலும் ஜ.நா. அவையின் ஆதரவில் 200க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோரை புனரமைப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவளிப்பதற்கும், சித்திரவதையின் கொடூரத்தால் உயிர் துறந்தோர் குடும்பத்தினரின் அவலநிலை குறித்து நமது பார்வையைச் செலுத்துவதும் அவசியமாகின்றது.
சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சித்திரவதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சித்திரவதை எதிர்ப்பு தினம் என்பது வெறும் சடங்காக மாறிவிடும்.
You May Also Like : |
---|
உலக முதியோர் தினம் |
உலக புத்தக தினம் |