சர்வதேச விளையாட்டு தினம்

உலக விளையாட்டு தினம்

சர்வதேச விளையாட்டு தினம்ஏப்ரல் 6
The International Day of Sport for Development and PeaceApril 6

அனைவரது வாழ்க்கையிலும் விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாகும். தனிநபர்களின் நெகிழ்ச்சி, வலிமை மற்றும் உடல் தகுதி ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதில் விளையாட்டு பங்களிப்புச் செய்கின்றது.

விளையாட்டு என்பது உடல் எடையைப் பராமரிப்பது மட்டுமின்றி சுயமரியாதையை பலப்படுத்தவும் சகிப்புத்தன்மையை மேலோங்கச் செய்யவும் ஒற்றுமைக்கு சாதகமான தூண்டுகோலாக விளங்கி வருவதும் மறப்பதற்கு அல்ல.

உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு கருவியாகவே விளையாட்டுத்துறை கருதப்படுகின்றது.

விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இத்தினத்தினை அமைதி தினமாகவும் கூறலாம். ஏனெனில் உலகம் முழுவதிலும் விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் காண்கின்றோம்.

சர்வதேச விளையாட்டு தினம் உருவாக்கப்பட்டதன் வரலாறு

1500 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டி அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபை 1896 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதியில் நவீன ஒலிம்பிக் போட்டியை நடத்த முடிவு செய்தது.

முதல் முறையாக கிரேக்கத்தில் ஏதேன்ஸ் நகரில் நவீன ஒலிம்பிக் போட்டி (First Modern Olympic Game) தொடங்கியது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஐ.நா பொதுச் சபையில் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினத்தை முன்மொழிந்தது.

2013 இல் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனடிப்படையில் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் முதன் முதலில் 2014 இல் கொண்டாடப்பட்டது.

அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச விளையாட்டு தினம் ஏப்ரல் 6 ஆம் திகதி உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச விளையாட்டு தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளின் பங்களிப்பைக் கொண்டாடுவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துவதற்கும், சமூகங்களை மிகவும் சுறுசுறுப்பாகவும் ஒருங்கிணைந்ததாகவும் மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச விளையாட்டு தினத்தின் முக்கியத்துவம்

உலகெங்கிலுமுள்ள மக்கள் மற்றும் சமூகங்களில் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளின் நேர்மறையான தாக்கத்தை அங்கீகரிக்கும் வாய்ப்பாக இந்த நாள் காணப்படுகின்றது.

விளையாட்டுக்கள் சமூகம் மற்றும் குழுக்களிடையே உறவை வெளிப்படுத்துகின்றது. மக்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை நிலை நாட்டும் அதே வேளையில் நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை ஊக்குவிக்கிறது.

தனி மனிதனது வாழ்க்கையின் முன்னேற்றுவதற்கு விளையாட்டு அளப்பரிய பங்காற்றுகின்றது. ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ விளையாட்டுக்கள் அவசியம்.

அதுமட்டுமின்றி விளையாட்டுக்களினால் குழு ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் போன்றனவும் கிடைக்கின்றது.

நமது ஆர்வத்தையும், ஆற்றலையும், உற்சாகத்தையும் ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு.

மனித வாழ்வில் மகிழ்ச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் தோன்றிய விளையாட்டுக்கள் இன்று மனித வாழ்வியலோடு இரண்டறக்கலந்துள்ளது என்றே கூற முடியும்.

சாதாரண மனிதர்களாகப் பிறந்து சாதனை நாயகர்களாக வரலாற்றில் பரிணமிக்கும் வகையில் மனிதர்களை விளையாட்டுக்கள் உருவாக்குகின்றன என்றால் அது மிகையல்ல.

அகப்புற வளர்ச்சிக்கு மட்டுமன்றி அமைதிக்கும் வழிகோலும் விளையாட்டை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் சர்வதேச விளையாட்டு தினத்தில் ஆங்காங்கு தமது திறமைகளால் சாதனைகளை நிகழ்த்தும் இளைஞர் யுவதிகளை முழு உலகிற்கும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

You May Also Like :
உடல் ஆரோக்கியம் கட்டுரை
உடல் நலமும் உள நலமும் கட்டுரை