சீத்தலைச் சாத்தனார் என்ற பெயரிலே தமிழிலக்கிய வரலாற்றுக் காலத்தில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
அந்த வகையில், சங்க காலத்தில் மதுரையின் சீத்தலை எனும் ஊரில் வாழ்ந்த சீத்தலைச் சாத்தனாரே, இரட்டை காவியங்களுள் ஒன்றான “மணிமேகலை” என்ற காவியத்தை படைத்துள்ளார்.
இந்நூலானது பௌத்த சமயக் கொள்கைகளை பரப்பும் நூலாக பௌத்த மத கொள்கைகளை ஆழ்ந்த அனுபவ ரீதியில் உருவாக்கி உள்ளார்.
சீத்தலை சாத்தனார் வாழ்க்கை வரலாறு
காலம் | இரண்டாம் நூற்றாண்டு |
பிறந்த இடம் | சீத்தலை, மதுரை |
சமயம் | பௌத்தம் |
வேறு பெயர்கள் | நன்னூற் புலவன், தண்டமிழ் சாத்தன் |
சீத்தலைச் சாத்தனார் பெயர் காரணம்
“சீத்தலை ” என்கின்ற ஊரில் பிறந்தமையினால், ஊரின் பெயரை அடைமொழியாக கொண்டு சீத்தலைச் சாத்தனார் என அழைக்கப்படுகிறார் என ஒரு சாராரும்,
சங்கத்தில் அரங்கேற்றுவித்தலின் பொருட்டு வரும் நூல்களில் பிழைகள் காணப்படுகின்ற போது ஆக்கியோர்களைக் குற்றம் கூறுதற்குத் துணியாதவராய், ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று வருந்தித் தமது தலையைக் குத்திக் கொள்வாரென்றும்,
அதனால் அவரது தலை புண்பட்டுச் சீயோடிருந்தமையால் சீத்தலைச் சாத்தனார் என்று பெயராயிற்று என்று மற்றொரு சாரரும் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா என எந்த வகையான பாட்டுகளையும் எழுத வேண்டுமானாலும் சீரும், தளையும் தப்பாமல் வரவேண்டும்.
சீரும், தளையும் தப்பினால் பாட்டு பிழைத்துவிடும். அசை, சீர், தளை ஆகிய பாட்டிலக்கண உறுப்புகளை பயன்படுத்துவதில் வல்லவராக காணப்பட்டார்.
இதனால் இவரை சீர், தளை என்ற அடைமொழியுடன் ” சீத்தளைச் சாத்தன்” என அழைத்தனர் இதுவே பிற்காலத்தில் மருவி சீத்தலை சாத்தனார் என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது என தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் “சாத்தன்” என்ற பெயரானது பௌத்த சமயக் கொள்கையை கொண்டிருந்தார் என்பதனாலும், சாத்து என்கிற வணிக தலைவனாக இருந்ததனாலும் சாத்தன் என அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆரம்ப வாழ்க்கை
இவருடைய தந்தையார் மதுரையில் கூலவாணிகம் செய்தவர் என்பதை ‘மதுரைக் கூலவாணிகனார் மகனார் சீத்தலைச் சாத்தனார்’ என்ற தொடர் எமக்கு உணர்த்துகிறது.
இவரும் தமது தந்தையின் தொழிலையே ஆரம்ப காலத்தில் செய்து வந்தார். இவரும் கூலவாணிகராக இருந்தவர் என்பதை மணிமேகலைப் பதிகத்தில் வரும் “வளங்கெழு கூலவாணிகன் சாத்தன்” என்னும் அடி தெரிவிக்கிறது.
கூலம் என்றால் நெல், வரகு, சாமை, தினை முதலிய பதினெண் வகைப் பொருட்களுக்கும் வழங்கப்படுகின்ற பொதுப்பெயர் ஆகும்.
இளங்கோ அடிகளின் நட்பு
சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோ அடிகளும் சிறந்த நண்பர்களாக காணப்பட்டனர். சீத்தலை சாத்தனாரது உதவியாலும், அவரது தூண்டுகோலாலும் சமணத் துறவியான இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எனும் காவியத்தை சிறந்த முறையில் படைத்தார்.
மணிமேகலை நூல் அமைப்பு
கோவலன், மாதவி ஆகியோரின் மகளான மணிமேகலையைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு சாத்தனார் இயற்றிய நூலே மணிமேகலை ஆகும். இந்நூற்கு இவரிட்ட பெயர் “மணிமேகலை துறவு” என்பது ஆகும்.
சிலப்பதிகாரத்தைப் போலவே இந்நூலும் 30 காதைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நூலில் பெரும்பகுப்புகள் இல்லை. ஒவ்வொரு காதையும் ‘என்’ என்பதையே இறுதிச் சொல்லாகக் கொண்டு முடிகிறது.
பசித்தோருக்கு உணவிடல் தலையாய அறம் என்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. கிளைக்கதைகள் பல இந்நூலுள் பயின்று வருகின்றன.
பௌத்த அறங்களையும் தத்துவங்களையும் பரப்புவதே இந்நூற்கொள்கையாயினும் தமிழ்நிலத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
தமிழ் நிலத்தில் நிகழ்ந்த கடல்கோள் பற்றிய குறிப்புகள், காஞ்சியில் செயல்பட்ட கடிகைகள் (கல்விச்சாலைகள்) குறித்து இந்நூலில் பதிவுகள் உள்ளன.
சமய விவாவதங்கள் குறித்து முதன்முதல் கதைவடிவில் பேசும் தமிழ்நூல் இதுதான். தத்துவ விவாதங்களின் வழி அன்று இந்நிலத்தில் வழக்கிலிருந்த பல்வேறு சமயங்களைப் பற்றி சாத்தனார் எடுத்துரைக்கிறார்.
பௌத்தத் தத்துவங்களோடு பிற சமயத் தத்துவங்களையும் சாத்தனார் நன்கறிந்தவர் என்பதை இந்நூலின் இறுதி நான்கு காதைகளான சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை, கச்சிமாநகர் புக்க காதை, தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஆகியவை உணர்த்துகின்றன.
வாதம் என்ற சொல் முதன்முதல் இந்நூலில் தான் வருகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதனை ‘முதல் தருக்கக் காப்பியம்’ என்பர்.
மணிமேகலை உரையும் பதிப்பும்
மணிமேகலையை முதன் முதல் பதிப்பித்தவர் திருமயிலை சண்முகம்பிள்ளை என்பவர். அவருக்குப் பிறகு உ.வே.சாமிநாதர் குறிப்புரையுடன் மணிமேகலையைப் பதிப்பித்துள்ளார் (1898).
ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதல் இருபத்தாறு காதைகளுக்கு உரையெழுதினார். அவர் உடல்நிலை குன்றிப்போகவே இறுதி நான்கு காதைகளுக்கு ஔவை துரைசாமிப் பிள்ளை உரையியற்றி வெளியிட்டார்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடல், கணிகையர் கலைகளிற் சிறந்திருத்தல், குலத்தால் பயனின்மை, அறமே முதல், பெண் வீடுபேறு எய்தும் உரிமை போன்ற பல செய்திகள் வழி மணிமேகலையை சமுதாய எழுச்சிக் காப்பியமாகவும் சீத்தலைச் சாத்தனார் அமைத்துள்ளார்.
You May Also Like: