இந்த பதிவில் “சுற்றுச்சூழலை பாதுகாப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.
சுற்றுச்சூழல் மாசடைவதால் உயிரினங்களும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுற்றுச்சூழல் என்பது
- சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்
- சூழல் மாசடைதல்
- சூழல் மாசடைவினால் ஏற்படும் பாதிப்புக்கள்
- முடிவுரை
முன்னுரை
இந்த நீலநிற புவியை பாதுகாக்கும் உரிமையும், கடமையும் நம் அனைவருக்கும் உண்டு. நம் சுற்றுச்சூழல் முன்பு போல் இல்லாமல் தற்போது பெரிதும் மாசுபட்டு உள்ளமை வேதனைக்குரியதாகும்.
சுற்றுச்சூழலின் இத்தகைய நிலைக்கு காரணம் நாம் அனைவரும் தான். உலக மக்களின் வாழ்க்கைக்கு நிலைகளாக அமைபவை நிலம், நீர், காற்று, ஆகாயம் போன்றனவாகும்.
ஆனால் இவை அனைத்தும் மனித குலத்தால் மாசடைவிற்கு உட்படுகின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சுற்றுச் சூழல் என்பது
மனிதனைச் சுற்றியுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் ‘சூழல்‘ எனலாம். நாள்தோறும் நாம் காண்கின்ற எம்மைச் சுற்றியுள்ள சகல அம்சங்களையும் சூழல் என்பது குறித்து நிற்கும்.
நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் சுற்றுச்சூழல் என்று அழைக்கப்படுகின்றது.
காற்று, நிலம், மண், நீர், மரம் தாவரங்கள், உயிரினங்கள் போன்ற உயிருள்ள, உயிரற்ற பொருட்களைப் பற்றி எடுத்துக் கூறுவது சுற்றுச்சூழல் எனப்படும்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம்
இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்வுக்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது.
தற்காலத்தில் ஒரு நாட்டின் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது.
சூழல் மாசடைதல்
குடித்தொகை அதிகரிப்பு, நகராக்கவிருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பன பொதுவாகக் காணப்படும் விடயமாகும். எனினும் இவையே சுற்றுச்சூழல் மாசடைவிற்குக் காரணமாகவும் அமைகின்றன.
நாடுகளில் மேற்க்கொள்ளப்படும் கைத்தொழில் நடவடிக்கைகள், அபிவிருத்தி செயற்பாடுகள் போன்ற அனைத்து செயற்பாடுகளினாலும் சூழல் மாசாக்கப்படுகின்றது.
சூழல் மாசடைவினால் ஏற்படும் பாதிப்புக்கள்
சூழல் மாசடைவதன் விளைவாக சூழலில் உள்ள மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களும் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
நகரங்களில் வசதிவாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற மக்கள் நகருக்கு குடியமர்கின்றனர். இதனால் மக்கள் செறிவடைந்து சூழல் மாசடைகின்றது.
பூமிப்பந்தை சுற்றியுள்ள வாயுப்படலம் அசுத்தக்காற்று புகையால் மாசடைவினைச் சந்திக்கின்றது. இதனால் சுவாசப்பிரச்சினைகள் பலவற்றையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
மண் வளமானது செயற்கை ரசாயன உரங்களால் மாசுபட்டுக்கிடக்கிறது. இதனால் வளமான மண் அழிவடைவதுடன் விவசாய உற்பத்திகளும் பாதிப்பினைச் சந்திக்கின்றன.
சூரியனின் புற ஊதாக்கதிர்களின் அபாய தாக்குதலிலிருந்து நம்மை காப்பாற்றும் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுகிறது. இப்பாதிப்பால் பூமியின் வெப்பநிலை கடுமையாக உயரக்கூடும். மேலும் காடுகளை அழிப்பதால் பூமி வெப்பமடைகிறது.
சுற்றுச்சூழல் மாசடைவதால் வன உயிரினங்களும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும்.
முடிவுரை
கல்வியின் மூலம் வளரும் தலைமுறைக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வகை செய்தல் வேண்டும்.
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் குறித்த ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் மூலம் விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது ஒரு நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல. அது ஒரு உலக பிரச்னை ஆகும். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நம்மாலான பங்களிப்பினைச் செய்தல் வேண்டும்.
You May Also Like : |
---|
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு |
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை |