செய்யும் தொழிலே தெய்வம் கட்டுரை

seiyum thozhile deivam katturai in tamil

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தான் செய்கின்ற தொழிலை நேசிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். மாறாக தான் செய்யும் தொழில் பற்றி தாழ்ந்தனவாக நினைக்க கூடாது.

ஏனெனில் இன்று நாம் செய்யும் தொழிலே நாளை நம்மை சிறந்தவர்களாக மாற்ற உதவும் எனவேதான் நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் எமது வாழ்க்கையை மாற்றுவதற்கு வழியமைத்து தருகின்றன.

செய்யும் தொழிலே தெய்வம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • செய்யும் தொழிலை நேசித்தல்
  • தொழில் முன்னேற்றம்
  • தொழில் செய்வதன் முக்கியத்துவம்
  • இன்றைய தொழிலும் சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளும்
  • முடிவுரை

முன்னுரை

தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை தொழிலில் அலட்சியத்தோடு இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. அந்த வகையில் நாம் செய்வது சிறு தொழிலாக இருந்தாலும் சரி அல்லது பெரும் தொழிலாக இருந்தாலும் சரி செய்யும் தொழிலே தெய்வம் எனக் கொண்டு மனம் விரும்பி நமது தொழிலை செய்தல் வேண்டும்.

செய்யும் தொழிலை நேசித்தல்

தொழிலில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எந்த தொழிலுமே கிடையாது. அந்த வகையில் நாம் செய்யும் தொழிலை நேசிப்பது அனைவரதும் கடமையாகும். ஒவ்வொரு மனிதரும் நாம் செய்கின்ற தொழில் எம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு செயற்படுதல் அவசியமாகும்.

மேலும் நாம் உணவு, உடை, தளபாடங்கள், கட்டுமானங்கள் என பல்வேறுபட்ட தேவைகளை பற்றி சிந்தித்து பார்த்தால் அவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் உழைப்பே இருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். இவ்வாறாக சிந்தித்துப் பார்ப்பதினூடாகவே தொழில் மீதான நேசம் எமக்கு ஏற்படக்கூடும்.

தொழில் முன்னேற்றம்

மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவே தொழில் காணப்படுகின்றது. அந்த வகையில் ஏதாவதொரு தொழிலை மேற்கொள்வதின் மூலமாகவே எமது குடும்பமானது சிறப்பாக வாழ்வதற்கு வழியேற்படுகிறது.

நாம் செய்யும் தொழிலை சிறப்பாக செய்கின்ற போது அதற்கேற்ற சிறந்த ஊதியமானது எமக்கு கிடைக்கப் பெறும்.

நாம் செய்யும் தொழிலில் எமது கடின உழைப்பை செலுத்துவதன் மூலமாக சிறப்பாக எம்மால் முன்னேற முடிவதோடு எமது தொழிலும் முன்னேற்றமடையும். இதன் காரணமாக எமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்.

தொழில் செய்வதன் முக்கியத்துவம்

இன்று நாம் சுதந்திரமாக செயற்படுவதற்கு பிரதான காரணம் நாம் செய்யும் தொழிலே ஆகும். ஏனெனில் சமூகத்திற்கு மத்தியில் மதிக்கப்படவும், நாளையை எண்ணி நமது வாழ்வை தொலைக்காமலும் செயற்பட தொழிலானது முக்கியமானதாகும்.

ஒவ்வொருவரும் பல துறைகளில் தொழில்களை மேற்கொண்டு வருவதனாலே தான் நாடு மட்டுமல்லாது ஒவ்வொரு குடும்பமும் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. உற்பத்தி திறனை பெருக்கி நாட்டினை வளம் பெற செய்வதில் தொழிலானது அவசியமாகும்.

இன்று கல்வித்துறை, போக்குவரத்து துறை, மருத்துவத்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் ஒவ்வொரு தொழிலாளரின் செயற்பாடு காணப்படுகின்ற போதே எம்மால் இத்துறைகளை வளர்ச்சியடையச் செய்து கொள்ள முடிகிறது.

இன்றைய தொழிலும் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்

இன்றும் சமூகத்திற்கு மத்தியில் தொழில் ரீதியில் ஏற்றத் தாழ்வுகள் என்பது இடம் பெற்றுக் கொண்டே வருகின்றது. அதாவது தான் செய்கின்ற தொழிலை அடிப்படையாக வைத்து சில தொழிலாளர்களை தாழ்த்துகின்றனர்.

நாம் செய்யும் தொழில் அனைத்தும் சமமான தொழில்களே தான் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

அந்த வகையில் விவசாயி ஒருவர் சேற்றில் கால் வைக்கா விட்டால் எம்மால் சோற்றில் கை வைக்க முடியாது என்ற கூற்றினூடாக புலப்படுவது யாதெனில் அனைத்து தொழிலும் சமமான தொழில் என்பதே ஆகும்.

முடிவுரை

மனிதனது வாழ்க்கையை சிறப்புற வாழ்வதற்கு பிரதானமானதாக தொழில்களே திகழ்கின்றன.

திருவள்ளுவர் தனது குறளில் “தோன்றில் புகழொடு தோன்றுக” என கூறியமையானது புகழோடு வாழ வேண்டுமாயின் தொழில்களில் ஈடுபட வேண்டும் என்பதனையே உணர்த்தி நிற்கின்றது. மேலும் ஒவ்வொருவரும் தொழிலினது மேன்மையை உணர்ந்து செயற்படுவது அவசியமானதாகும்.

You May Also Like:

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுரை

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கட்டுரை