சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் கட்டுரை

sothanai kadanthu suthanthiram adainthu katturai

இந்த பதிவில் “சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் கட்டுரை” பதிவை காணலாம்.

சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்து வந்த பாதையானது பலரது தியாகங்களும், சோதனைகளும், துன்பங்களால் நிறைந்தவையாகவும் காணப்படுகின்றது.

சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்திய சுதந்திர தினம்
  3. சுதந்திரப் போராட்ட தியாகிகள்
  4. தமிழர்களின் தியாகங்கள்
  5. கடந்து வந்த பாதை
  6. முடிவுரை

முன்னுரை

இந்தியாவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பல தியாகங்களையும் பல சோதனைகளையும் கடந்து வந்து சரித்திரம் படைத்துள்ளோம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

வேலூர் புரட்சி, சிப்பாய் எழுச்சி என்று தொடங்கி காந்தி தலைமையிலான மாபெரும் விடுதலைப் போராட்டம் வரை அமைதி வழியிலும், ஆயுதம் தாங்கிய முறையிலும் இந்தியர்கள் முன்னெடுத்த நீண்ட, நெடிய போராட்டத்தின் வரலாறு பல சோதனைகளை கடந்து சுதந்திரம் படைத்துள்ளமையைப் பறைசாற்றுகின்றது.

இந்திய சுதந்திர தினம்

1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் நமது நாடு சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷ் குடியாட்சியிடம் இருந்து நமது நாட்டின் இறையாண்மையும் பொறுப்புகளும் இந்திய மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மாற்றத்தை அதிகார மாற்றம் என்று சிலர் அழைத்தார்கள்.

ஆனால் இந்த மாற்றமானது நமது முன்னோர்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கண்ட கனவை நனவாக்கும் உச்ச நிலை என்று கூறினால் அது மிகையல்ல. ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் இந்திய மக்களின் வாழ்விலும் மனதிலும் ஆழமாக பதிந்த நாளாக விளங்குகின்றது.

சுதந்திரப் போராட்ட தியாகிகள்

தேசத்தின் சுதந்திரம் பற்றி நினைவில் வரும் போதெல்லாம் தேசத்திற்காய் உயிர் நீத்த தியாகிகளின் தியாகச் செயல்களும் அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளுமே நினைவிற்கு வரவேண்டும்.

ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பல சித்திரவதைகளை அனுபவித்தனர். தமது உயிரைச் துச்சமென எண்ணி கலகங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

பல சோதனைகளை அனுபவித்த போதிலும் துவண்டுவிடாமல் இந்திய சுதந்திரத்திற்காய் பாடுபட்டனர். இத்தகைய சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரும் போற்றுதற்குரியவர்களாவர்.

தமிழர்களின் தியாகங்கள்

இந்திய சுதந்திரப் போர் ஒரு சகாப்தம். இந்த சகாப்தத்தை உருவாக்க தங்கள் இன்னுயிரை ஈந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்த விடுதலைப் போராட்ட ஈகியரில் முதன்மையானவர்கள் தமிழர்கள்.

சிவகங்கைச் சீமையில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கொடிகாத்தகுமரன், வ.உ.சிதம்பரனார், பாரதி, சுப்ரமணிய சிவா இவர்கள் இந்திய சுதந்திர வரலாற்றில் களமாடிய வீரத்தமிழர்கள்.

இவர்களில் பலர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்படும், தூக்கிலிடப்படும், தமது உயிர்களைத் தியாகம் செய்தும் சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

கடந்து வந்த பாதை

சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்து வந்த பாதையானது பலரது தியாகங்களும், சோதனைகளும், துன்பங்களால் நிறைந்தவையாகவும் காணப்படுகின்றது.

நாட்டின் விடுதலை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தனது வாழ்நாளையே அர்ப்பணித்து பல உயிர் தியாகங்களை அளித்தே சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடிந்தது. கடந்து வந்த பாதையை என்றும் நாம் மறக்கக்கூடாது.

சோதனையைக் கடந்து சுதந்திரம் அடைந்தோம் என்பதை மனதிற்கொண்டு சுகந்திர இந்திய தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.

முடிவுரை

இந்தியா இன்று உலக அரங்கில் தனக்கான ஓர் சிறப்பிடத்தை பெற்றுள்ளது. இன்று இந்திய தேசத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல சோதனைகள் மறைந்துள்ளன.

இறையாண்மை கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது, பல ஆயிரக் கணக்கான தியாகிகள், புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லக் கூடியதாகும்.

இன்று தாய்மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், பல தலைவர்களதும் பல போராட்ட வீரர்களது தியாகங்களுமேயாகும்.

You May Also Like:
என் கனவு இந்தியா கட்டுரை
தூய்மை இந்தியா கட்டுரை