தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை

Tharkappu Kalaiyil Pengal Katturai In Tamil

இந்த பதிவில் பெண்களின் சுய பாதுகாப்பிற்கு “தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தற்காப்பு கலையை பயில்வது சாலச் சிறந்தது.

தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெண்கள் தற்காப்புக் கலையைக் கற்பதன் அவசியம்
  3. தற்காப்புக் கலையின் பயன்கள்
  4. இந்தியாவிற்கு உரித்தான தற்காப்புக் கலை
  5. தற்காப்பு கலைகளின் முக்கிய வகைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய காலப்பகுதியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தற்காப்பு கலையை பயில்வது சாலச் சிறந்தது.

ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்று சொல்லப்பட்டாலும், உடலளவில் பெண்கள் மென்மையானவர்கள்தான். இயற்கை பெண்களை அப்படித்தான் படைத்திருக்கிறது.

அதனால் ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காத்துக்கொள்ளும் தைரியத்தையும், துணிச்சலையும் பெறவேண்டும்.

ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வதன் மூலம் தான் அந்த தைரியத்தை பெண்களால் பெறமுடியும். இக்கட்டுரையில் தற்காப்பு கலையில் பெண்கள் பற்றி நோக்கலாம்.

பெண்கள் தற்காப்புக் கலையைக் கற்பதன் அவசியம்

பெண்கள் எல்லா நேரத்திலும் பெரிதாக எந்த ஆயுதத்தையும் உடன் வைத்திருக்க முடியாது. எனவே தற்காப்புக் கற்றுக்கொள்வது அவசியமாகின்றது.

தற்காப்புக் கலையின் முக்கிய அம்சமே எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சல்தான். துணிச்சலை வரவளைத்துக் கொண்டு பெண்கள் வீறுகொண்டு எழுந்தால் எதிரிகள் யாரும் அவர்கள் எதிரில் நிற்க முடியாது.

தற்காப்புக் கலையின் பயன்கள்

பெண்கள் தங்களைப் பாதுகாத்துக கொள்ளவும், பயமின்றி நடமாடவும் தற்காப்பு கலை பயன்படுகின்றது. தற்காப்பு கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும்.

தற்காப்பு கலை பயிற்சி பெறுபவருக்கு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்து செயல்பட தூண்டப்படுகிறது. நம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. சமூக விரோத சக்திகளை எதிர்க்கும் திறன் மேலோங்கும்.

இந்தியாவிற்கு உரித்தான தற்காப்புக் கலை

களரி என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான தற்காப்புக் கலை ஆகும். இது களரிபயட்டு எனவும் அழைக்கப்படுகிறது. களரி என்ற சொல்லுக்கு போர்க்களம் என்று பொருள்.

அதாவது, இந்த தற்காப்புக் கலை போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தற்காப்புக் கலை என்ற எண்ணத்திலிருந்து களரி என்ற பெயர் உருவானது. இதன் தோற்றம் கேரள மாநிலம் ஆகும்.

இந்தியா மட்டுமின்றி உலகின் மிகப் பழைமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகவும் களரி இன்றும் அறியப்படுகிறது.

தற்காப்பு கலைகளின் முக்கிய வகைகள்

கராத்தே, ஜூடோ, குங்-ஃபூ, குத்துச்சண்டை, ஜியு-ஜிட்சு, கபோயிரா, முய் தாய், கிராவ் மாகா, கெண்டோ, அக்கிடோ, டங் ஸோ டூ போன்ற பலவற்றைக் கூறலாம். இதில் மிகச் சிறந்த தற்காப்புக் கலைகளில் ஒன்றாக கராத்தே காணப்படுகிறது.

இது ஓர் ஐப்பானிய தற்காப்புக் கலையாகும். உலகில் கராத்தே மிகவும் பிரபல்யமானதாகும்.

உலக அளவில் கராத்தேயைப் பெண்களும் விரும்பிக் கற்றுவருகின்றனர். இதில் எந்த ஆயுதங்களுமின்றி வெற்றுக் கைகளால் நிகழ்த்தப்படுகின்றது.

முடிவுரை

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் என்பதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். தற்போது ஏராளமான தற்காப்புக் கலைகள் இருக்கின்றன. அதில் எந்த கலையை பெண்கள் கற்றுக்கொண்டாலும் அவர்களது பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்பதில் ஜயமில்லை.

தங்களை எதிர்நோக்கியுள்ள அபாயத்தை பெண்கள் உணர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையை கற்க வேண்டும்.

அப்போதுதான் ஆபத்துக்களிலிருந்தும் பெண்களுக்கெதிராக நிகழும் வன்முறைகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

You May Also Like :
உடற்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை
உடல் ஆரோக்கியம் கட்டுரை