இந்த பதிவில் “தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்குமான உணவு உற்பத்தியாக்கியாக தாவரங்கள் உள்ளன.
தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உயிரினங்களின் நிலைத்திருப்பு
- சுற்றுச்சூழலில் தாவரம்
- எதிர்நோக்கும் பிரச்சினைகள்
- தீர்வுகள்
- முடிவுரை
முன்னுரை
பூமியில் தாவரங்கள் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யக் கூட முடியாது. தாவரங்கள் இல்லாமல் பூமியில் வாழ்க்கை சாத்தியமற்றது.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் இந்த கிரகத்தில் உயிரியல் சமூகத்தின் இரண்டு முக்கிய வடிவங்கள் ஆகும்.
சிறிய உயிரினங்கள் முதல் மனிதன் என அனைத்து ஜீவராசிகளின் நிலைத்திருப்பும் தாவரங்கள் சார்ந்ததாகவே உள்ளன.
உயிரினங்களின் நிலைத்திருப்பு
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்குமான உணவு உற்பத்தியாக்கியாக தாவரங்கள் உள்ளன. மனிதர்களும் ஏனைய விலங்குகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணவுக்காக தாவரங்களிலேயே தங்கியிருக்க வேண்டும்.
தாவரங்கள் உணவு உற்பத்தியின் போது வெளிவிடும் ஆக்சிஜன் தான் அனைத்து உயிரினங்களினதும் பிராண வாயுவாக காணப்படுகின்றது.
இவை தவிர மர உற்பத்தி பொருட்கள், மருந்து பொருட்கள் என அனைத்து விதமான பயன்பாட்டிற்குமான அடிப்படை தாவரங்களே ஆகும்.
சுற்றுச்சூழலில் தாவரம்
சூழலியல் நிலைத்திருப்புக்கு தேவையான நீர் வட்டத்தில் ஆவியுயீர்ப்பு எனும் செயற்பாட்டின் மூலம் மழை உருவாக தாவரங்கள் காரணியாக செயற்படுகின்றது.
அத்துடன் ஆக்சிஜன் வட்டம், காபனீரொட்சைட் வட்டம் போன்றவற்றிலும் பங்காளராக செயற்பட்டு வளிமண்டல நிலைத்திருப்பிற்கு வழி வகுக்கின்றது.
மண்ணரிப்பு, மண் வளமிழப்பு, வரட்சி போன்ற பேரிடர்களிலிருந்து பூமியை காக்கும் கேடயங்களாகவும் செயற்படுகின்றன.
மேலும் புவி வெப்பமடைதலை தடுத்து அதனால் எமக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்தும் எம்மை பாதுகாக்கின்றது.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், கட்டிட உருவாக்கங்கள், அபிவிருத்தி திட்டங்கள் போன்ற கண்மூடித்தனமாக மனித நடவடிக்கைகளால் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.
அது மட்டுமல்லாது அதிகரித்த சனத்தொகையின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்ய விளைநிலங்களை விஸ்தரிப்பதற்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன.
மேலும் அதிகப்படியான மர உற்பத்தி பொருட்களுக்காகவும் தாவரங்கள் அழிக்கப்படுவதோடு காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் தாவரங்கள் அழிக்கப்படுதல் தற்காலத்தில் எதிர் நோக்கும் பிரச்சினையாக காணப்படுகின்றன.
தீர்வுகள்
தாவரங்களை பாதுகாப்பது இந்த தருணத்தின் மிகப்பெரிய தேவையாகும். குறிப்பாக வன பாதுகாப்பு தொடர்பாக கடுமையான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தல்.
மரப்பொருட்களுக்கு பதிலாக மாற்றீட்டு பொருட்களை பயன்படுத்தல், மீள் காடாக்கத் திட்டங்களை உருவாக்குதல்.
மேலும் இயற்கை தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றினை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் இதற்கான தீர்வாக அமைகின்றன.
முடிவுரை
பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தாவரங்கள் தங்கள் சார்பாக ஏதேனும் ஒன்றை கொடுக்கின்றன. அதற்கு ஈடாக அவை எதையும் பெறுவதில்லை. இயற்கை தொடர்பான தனது கடமைகளை மனிதன் மறந்து விட்டான் என்பது மிகவும் வருத்தமாக அமைகின்றது.
தாவரங்கள் சமநிலையில் இருக்கும் போது மாத்திரமே உயிர்க்கோளமும் தனது சமநிலை தவறாமல் இருக்க முடியும்.
தாவரங்கள் அழிந்து போகாமல் இருக்க முயற்சிப்பதுடன் அதிகளவில் மரங்களை நடவும் காடுகளை பரப்பவும் ஒத்துழைக்க வேண்டியது எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.
You May Also Like : |
---|
காடு பற்றிய கட்டுரை |
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை |