திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

Thiruchendur Murugan Temple History In Tamil

இந்த பதிவில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான “திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு” பற்றி காணலாம்.

திருச்செந்தூர் திருத்தலமானது ஆறுமுகப் பெருமானின் இரண்டாவது படைவீடாகும். இது சிதம்பரனார் மாவட்டத்தின் கரையில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

அறிமுகம்

திருச்செந்தூர் திருத்தலமானது ஆறுமுகப் பெருமானின் இரண்டாவது படைவீடாகும். இது தமிழ்நாட்டின் கிழக்குக் கரையோரமாக சிதம்பரனார் மாவட்டத்தின் கரையில் அமைந்துள்ளது.

திருத்தலத்திற்கு செந்தில் மாநகர் என்றும்⸴ சீரலைவாய் என்றும் பெயர்களுண்டு. இக்கோவிலானது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சிறந்து விளங்குவதாக அனைவராலும் நம்பப்படுகின்றது.

இக்கோவிலானது ஒன்பது அடுக்குகளையும்⸴ 152 அடி உயரத்தையும் கொண்டுள்ளதுடன் கோவிலின் கோபுரமானது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது என்பது மேலும் சிறப்பிற்குரியதாகும்.

திருச்செந்தூர் வேறு பெயர்கள்

தமிழ் நாட்டில் நாகரிக பண்பாட்டில் சிறந்து விளங்கிய ஒரு நகரம் திருச்செந்தூர் ஆகும்.

திருச்செந்தூர் வேறு பெயர்கள்:

  • அலைவாய்
  • திருச்சீர் அலைவாய்
  • வெற்றிநகர்
  • வியலாச்சேத்திரம்
  • அலைவாய் சேறல்
  • சிந்துபுரம்

போன்ற பல சிறப்புமிக்க பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இக்கோவில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டது.

அலைவாய்

மன்னார் வளைகுடாவின் கடற்கரையின் பகுதியில் அமைந்துள்ளதால் அலைவாய் என்றும்⸴ திரு என்னும் அடைமொழி பெற்றுள்ளதால் திருச்சீர் அலைவாய் என்றும் பாடல்களில் சிறப்பாக போற்றப்படுகின்றது.

வீரபாகு பட்டினம்

திருச்செந்தூரை வீரபாகு பட்டினம் என்றும் அழைப்பர். இதன் காரணம் திருச்செந்தூரில் வீரபாகு தேவர் அனைத்து கடவுள்களுக்கும் காவல் தெய்வமாய் விளங்குவதாலாகும். அதனாலேயே வீரபாகு பட்டினம் என்றும் அழைக்கப்படுகின்றது.

வியாழ சேத்திரம்

வியாழ பகவானால் முருகப் பெருமான் பூஜிக்கப்பட்ட தலம் ஆனதால் திருச்செந்தூர் வியாழ சேத்திரம் என்றும் போற்றப்படுகின்றது.

தல வரலாறு

தேவர்களை சூரபத்மன் தொந்தரவு செய்தார். இதனால் சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார்.

அதன் பின் சிவபெருமானின் கட்டளையை ஏற்று முருகப் பெருமான் சூரபத்மனை அழிக்க திருச்செந்தூர் வந்தார். இந்நிலையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி தேவர்களின் குருவான வியாழ பகவான் திருச்செந்தூர்த் தலத்தில் தவமிருந்தார்.

அவ்விடத்தில் வியாழ பகவானுக்கு காட்சி தந்த முருகப்பெருமான் அங்கு தங்கி வியாழ பகவானின் மூலம் அசுரனின் வரலாற்றை தெரிந்து கொண்டு தனது படைத்தளபதியான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார்.

ஆனால் சூரபத்மன் அதனை கேட்க மறுத்ததும் முருகன் சூரனை வதம் செய்தார்.
முருகன் வியாழ பகவானுக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வியாழபகவான் வேண்டிக்கொண்டார். அதன்படி முருகப்பெருமானும் எழுந்தருளினார்.

விஸ்வகர்மாவின் மூலம் வியாழபகவான் முருகனுக்கு கோயில் எழுப்பினார். சூரனை வெற்றி பெற்றதால் “ஜெயந்தி நாதர்” என அழைக்கப்பட்டார். இதுவே மருவி பிற்காலத்தில் “செந்தில்நாதன்” என அழைக்கப்பட்டது.

இதேபோல் “திருஜெயந்திபுரம்” என்று அழைக்கப்பட்ட தலமானது பிற்காலத்தில் மருவி “திருச்செந்தூர்” என அழைக்கப்பட்டது.

திருச்செந்தூர் ஆலயச் சிறப்புகள்

தொல்காப்பியம்⸴ புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை மற்றும் சிலப்பதிகாரம் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் இத்திருத்தலத்தின் சிறப்பு போற்றப்பட்டுள்ளன.

ஆறுபடை வீடுகளில் 5 மலைப்பகுதியிலும் திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.

திருச்செந்தூர் கோவில் ராஜகோபுர வாசலானது ஆண்டுதோறும் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் சூரசம்ஹாரம் முடிந்த பின்பு தெய்வானை திருமண நாளிலேயே மட்டுமே ராஜகோபுர வாசல் திறக்கப்படும்.

இங்குள்ள ஆலய மணியானது 100 கிலோ எடை கொண்டுள்ளது.

கோவிலின் மூலவருக்கு பின் பகுதியில் பாம்பரை எனும் சுரங்கப்பாதை உண்டு. அதன் உள்ளே சென்றால் முருகன் பூஜை செய்து வந்த பஞ்ச லிங்கங்களை காணலாம்.

பன்னிரு சித்தர்களின் 8 சித்தர்களில் சமாதியானது திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது.

சூரசம்ஹாரம் முடிந்த பின் தாமரை மலரை வைத்து பூஜை செய்துவருவர். இன்றும் முருகனின் இடது கையில் தாமரை மலர் மற்றும் ஐடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கின்றார்.

முருகனின் பின்புறம் இடது சுவரில் முருகன் பூஜை செய்ததாகக் கூறப்படும் லிங்கம் ஒன்று உள்ளது. சூரனை வதைத்த முருகன் நான்கு கைகளுடன் சிவபூஜை செய்து ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கின்றார்.

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில், தங்கள் ஊர் பெண் தெய்வானையை திருமணம் செய்ததற்காகவும், போர் முடிந்து முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுவர்.

உச்சிக்கால பூஜை முடிந்த பின் தினமும் ஒரு பாத்திரத்தில் பால்⸴ உணவு எடுத்துவந்து மேளதாளத்துடன் திருச்செந்தூர் முருகன் அமைந்திருக்கும் கடற்கரையில் அவற்றைக் கரைத்துவிடுவர். இப்பூஜையே கங்கா பூஜை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.

திருச்செந்தூர் முருகன் கோவிலின் இடது பக்கத்தில் வள்ளி குகைக் கோவில் அமைந்துள்ளமை மேலும் சிறப்பிற்குரிதாகும்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை தவம் செய்து அடையக்கூடிய பலனை திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு நாள் உபவாசம் எடுத்து முருகனை தரிசனம் செய்வதால் அந்த பலனை அடைந்துவிடலாம் என்று சூதம முனிவர் கூறியுள்ளார்.

புத்திரப்பேறு, உயர்பதவிகள், பொன் சேர்க்கை போன்றவற்றிற்கும் குரு பகவானே காரணமாகிறார். எனவே இக்கோவிலின் கடல் மற்றும் தீர்த்தத்தில் நீராடி, பின்பு இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு இக்கோவிலில் இருந்தவாறே முருகன் மற்றும் குரு பகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட்டு, கோவிலை 9 முறை வலம் வந்து வழிபடம் போது வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

பக்தர்கள் இந்த வழிபாட்டை செய்ய அவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.

நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். பொன் ஆபரணங்களின் சேர்க்கையும் ஏற்படும்.

You May Also Like:

ஆறுமுக நாவலர் பற்றிய கட்டுரை
ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு