தூய்மை பாரதம் கட்டுரை

thooimai bharatham katturai in tamil

இந்த பதிவில் “தூய்மை பாரதம் கட்டுரை” பதிவை காணலாம்.

சுற்றுப்புற தூய்மையின்மையின் காரணமாக மக்கள் பலர் தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

தூய்மை பாரதம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சுகாதார கேடுகள்
  • இந்திய அரசின் முயற்சிகள்
  • தூய்மை பாரதம் திட்டம்
  • நமது கடமை
  • முடிவுரை

முன்னுரை

எத்தனையோ வளம் நிறைந்த இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அமைப்பில் பல தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கின்றது.

இம் முன்னேற்றமானது நிலையாகவும், தூய்மையாகவும், தொடர்ச்சியாகவும் அமைய வேண்டும் என்பதற்காக தான் ஐந்தாண்டு திட்டங்கள் பலவற்றை அரசு உருவாக்கி நடைமுறை படுத்துகின்றது. அவற்றில் ஒரு திட்டமான தூய்மை பாரதம் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

சுகாதார கேடுகள்

சுற்றுப்புற தூய்மையின்மையின் காரணமாக மக்கள் பலர் தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பொது இடங்களில் புகைப்பிடித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் கழிவகற்றல், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு, ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை சேர்த்தல் போன்ற விரும்பத்தகாத செயல்பாடுகள் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்குகின்றன.

இதன் விளைவாக வயிற்றுப் போக்கு, போலியோ, சரும நோய், சுவாச நோய் என பல தொற்று நோய்கள் பரவுகின்றன.

இந்திய அரசின் முயற்சிகள்

சுற்றுப்புறம் தூய்மையாக பேணப்படல் வேண்டும் என்பதனை கருத்திற் கொண்டு நம் அரசு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.

கிராமப்புற மக்களுக்கும் முறையான தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி, கழிவு நீர் அகற்றும் விழிப்புணர்வு உண்டாக்குதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் கண்காணித்தல் போன்றவற்றை செயற்படுத்த தொலைக்காட்சி தொடர்கள், கருத்து விவாதம் நடாத்துதல் போன்ற பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

தூய்மை பாரதம் திட்டம்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திட்டமான ‘தூய்மை இந்தியா’ என்பதனை மையாக கொண்டு ‘தூய்மை பாரதம்’ என்ற பொது இடங்களை தூய்மை செய்யும் செயல் திட்டத்தை பாரதப் பிரதமர் நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்.

சுகாதார திட்டமான இதனை அனைத்து மக்களும் செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இத்திட்டத்தில் அனைத்துப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அரசு நிறுவனங்களிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் வீடுகளிலும் காடுகளிலும் பொது இடங்களிலும் அனைத்து மக்களும் தாமே இந்த திட்டத்தினை செயற்படுத்தி வருகின்றனர்.

இதன் விளைவாக கிராமப்புற வீடுகளில் கழிவறை கட்டுதல், கிராமத்திற்கான பொதுக் கழிப்பறைகள், பெண்களுக்கான தூய்மை பிரச்சாரங்களை மேற்கொள்ளல் என்பன இதன் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நமது கடமை

வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தல், வீடுகளில் மக்கும் மக்காத குப்பைகளை பிரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்தல், சுற்றுப்புற தூய்மை, பொது சொத்துக்களை பாதுகாத்தல், கழிப்பறைகளை பயன்படுத்தல், காடுகளை பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளல் மற்றும் கடைப்பிடித்தல் எமது கடமையாகும்.

முடிவுரை

எத்தனையோ வளம் நிறைந்த நம் நாட்டில் அந்த வளங்களை பாதுகாத்தல் அதன் குடிமக்களாகிய எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

‘தூய்மை பாரதம்’ எனும் திட்டத்தில் ஏற்படும் முன்னேற்றம் நிலையாகவும், தொடர்ச்சியாகவும் அமைய வீடுகளிலும் பொது இடங்களிலும் காடுகளிலும் அனைத்து மக்களும் தாமே முன்வந்து இத்திட்டத்தினை செயல்பாட்டில் கொண்டுவருதல் ஒன்றே இந்த திட்டத்தின் வெற்றிக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

You May Also Like:
சுற்றுப்புற தூய்மை கட்டுரை
தூய்மை இந்தியா கட்டுரை