இந்த பதிவில் “நாட்டார் பாடல்கள் கட்டுரை” பதிவை காணலாம்.
நாட்டார் பாடல்களை பயிற்சி பெறாதவர்களும் கூட பாடக் கூடிய எளிமையானதாக இருப்பது சிறப்பாகும்.
நாட்டார் பாடல்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நாட்டுப்புற பாடல்களின் மறுபெயர்கள்
- நாட்டுப்புற பாடல்களின் வேறு பெயர்கள்
- தொன்மை
- நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புகள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் எல்லா மொழிகளும் தோன்றுவதற்கு முன்னதாகவே வாய்மொழிப் பாடல்களும், கதைகளும் துவங்கிவிட்டன. அவ்வகையில் நாட்டுப்புற பாடல்கள் பழமைவாய்ந்த பாடல்களாகவும் சிறப்புமிக்க பாடல்களாகவும் காணப்படுகின்றன.
இவை மக்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை ஆகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவது உண்டு.
பொதுவாக நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமியம் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடுகின்ற பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இத்தகைய நாட்டுப்புற பாடல்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டுப்புற பாடல்களின் வேறு பெயர்கள்
நாட்டுப்புறப் பாடல்களை நாட்டுப்பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், பழைய பாடல்கள், மரபுவழி பாடல்கள், பாமரப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், கிராமிய பாடல்கள், ஜனகானம், தெம்மாங்கு எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள்
நாட்டுப்புறப் பாடல்களானவை பாடப்படும் சூழல் நிகழ்வுகளின் தன்மைக்கேற்ப அவை வகைப்படுத்தப்படுகின்றன.
அவ்வகையில் சூழலையும், குறிக்கோளையும் பொறுத்து நாட்டார் பாடல்களைத் தாலாட்டுப் பாட்டு, முளைப்பாரிப் பாட்டு அல்லது கும்மிப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு, நடைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வண்டிப்பாட்டு, நடவுப்பாட்டு, தெற்கத்தி பாட்டு என வகைப்படுத்தலாம்.
ஆறு. இராமநாதன் அவர்களால் புதிய வகைப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டது. அவையாவன தாலாட்டு, குழந்தை வளர்ச்சி நிலை பாடல்கள், விளையாட்டு பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழப்பு பாடல்கள் என்பனவாகும்.
தொன்மை
சங்க இலக்கியங்களில் நாட்டுப்புற பாடல்களின் செல்வாக்கினை காணக்கூடியதாக உள்ளது. கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் செப்பம் செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று காணப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பல பாடல்கள் நாட்டுப்புற பாடல்களை அடியொட்டியவையே. நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்திய போக்கினைக் காண முடிகின்றது.
சிற்றிலக்கியங்கள் பலவும் நாட்டுப்புற இலக்கிய வகைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவையே. உதாரணமாக ஏசல், ஏற்றம், தெம்மாங்கு, ஊசல் முதலானவற்றை கூறலாம்.
நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புகள்
நாட்டார் பாடல்கள் மக்கள் வாழ்வியலை பிரதிபலிப்பதாகவும் வாழ்வியலோடு கலந்தவையாகவும் விளங்குகின்றன. வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிற்கும் ஏற்ற வகையில் மக்களால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
கடினமான வேலைகளைச் செய்யும்போது வேலையில் களைப்புத்தன்மை தெரியாமல் இருப்பதற்காக பாடப்படுகின்றன.
மேலும் நாட்டார் பாடல்கள் கவலைகளை மறக்கச் செய்வதற்கும் காதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவும் வலிகளைக் கூறவும் சிறந்த ஒரு கருவியாக விளங்குகின்றன.
நாட்டார் பாடல்களின் கவர்ச்சியான இசையில் பாடப்படுகின்றது. மற்றும் பயிற்சி பெறாதவர்களும் கூட பாடக் கூடிய எளிமையானதாகவும் இருக்கின்றது.
முடிவுரை
இன்று பலவகை இசைகள் பாடல்களில் பயன்படுத்தப்பட்டாலும் குழந்தைப் பருவத்தில் தாய் பாடும் தாலாட்டு பாடலுக்கு இணையாக இல்லை. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நாட்டார் பாடல்கள் பாடப்படுகின்றன.
இவை எப்போதும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் ஆகும். நாட்டார் பாடல்களின் பெறுமதிகளை உணர்ந்து அவற்றை பாதுகாப்பதுடன் எதிர்கால சந்ததியினர் அறியும் வகையில் செய்தல் வேண்டும்.