ஆசையை அடைய கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கை தான் முதல் லஞ்சத்தின் பிறப்பிடம். இன்று பல நாடுகள் வளர்ச்சி இன்றி வறுமை நோக்கி செல்வதற்கு முக்கிய காரணமாக லஞ்சம் மற்றும் ஊழல் காணப்படுகின்றது.
லஞ்ச ஒழிப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- லஞ்சம்
- லஞ்சம் ஏற்படக் காரணங்கள்
- லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு
- லஞ்சத்தைத் தடுப்பதற்கான வழிகள்
- முடிவுரை
முன்னுரை
சமூகத்தில் லஞ்சம் புற்றுநோயை போல் பரவி இன்றைக்கு சமூகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக மாறிவிட்டது.
முன்பெல்லாம் கடமைகளை மீறுவதற்காக தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது கடமையை செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லஞ்சம்
லஞ்சம் என்பது தனக்கு அல்லது வேறு ஒரு நபருக்கு நன்மை செய்வதற்கு அரசுக்கோ அல்லது வேறு ஒரு நபருக்கோ தீங்கு விளைவிப்பதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு நபர் நடவடிக்கை எடுத்தல். இங்கு இந்த நடவடிக்கைக்கு அல்லது தீர்மானத்திற்கு ஒரு கொடுப்பனவாகவோ அல்லது வேறு முறையிலோ லஞ்சம் கொடுக்கப்படுகின்றது.
லஞ்சம் ஏற்படக் காரணம்
பேராசை தான் லஞ்சம் ஏற்படப் பிரதான காரணமாகும். பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் லஞ்சத்தைப் பெற வைக்கின்றது.
சட்டங்கள் கடுமையாக இல்லாமை, நிர்வாக சீர்கேடுகள், மக்களின் தவறான செயற்பாடுகள் போன்றவை.
சிலர் தமது காரியங்கள் அல்லது தேவைகள் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காக அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்கின்றனர்.
வீதியில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காது முறைகேடாக நடத்து கொள்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க தாமே முன்வந்து லஞ்சம் கொடுக்கின்றனர்.
லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிகள்
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தொடர்பான புகார் எண், முகவரி இடம்பெற வேண்டும். இன்று பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகள் இருப்பதில்லை. அவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒன்லைன் மூலம் அரச சேவைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் லஞ்ச ஊழல் முறைகேடுகள் காலப் போக்கில் படிப்படியாகக் குறையும்.
சட்டங்களை மேலும் வலிமையாக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். லஞ்சம் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டால் அதற்கான விசாரனைகள் மற்றும் தீர்ப்புக்கள் தாமதமின்றி இடம்பெற வேண்டும்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு
ஊழல் மற்றும் லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட சாந்தாரம் கமிட்டியின் அறிக்கையின்படி 1965 தமிழகக் காவல்துறையின் ஒரு அங்கமாக லஞ்ச ஒழிப்புத் துறையைத் தமிழக அரசு அமைத்தது. மூன்று வழிமுறைகளைப் பின்பற்றி லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கின்றது.
1. இரசாயனம் தடவிய டூபாய் நோட்டுக்களைக் கொடுத்தனுப்பி கையும், கழவுமாக் கைது செய்தல்
2. அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி அதில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தல். இதில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பரிந்துரை செய்கிறது.
3. இரகசியப் புகார் அல்லது சொத்துக் குவிப்புக்கான ஆவணங்கள் இருந்தாலே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரமுண்டு.
முடிவுரை
லஞ்சம் உள்ள நாட்டில் அபிவிருத்தியையே, முன்னேற்றத்தையே காண முடியாது. லஞ்சத்தை ஒழிக்கும் போதுதான் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கைத்தரமும் வளர்ச்சி அடையும் என்பதனை உணர்ந்து அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
You May Also Like: