தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த நூற்றாண்டு சங்க காலம் எனப்படுகின்றது.
சேரர், சோழர், பாண்டியர் எனப்படுகின்ற முடியுடை மூவேந்தர்களும் பாரி, அதியமான், ஓரி, குமணன் போன்ற குறுநில மன்னர்களும் நல்லாட்சி புரிந்தனர்.
மன்னனுக்கும், மக்களுக்கும், புலவர்களுக்கும் இடையே நல்லுறவு காணப்பட்டது. இதனால் இக்காலப் புலவர்கள் அதிக இலக்கியங்களைப் படைத்தனர். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் கூறுகின்ற அன்பின் ஐந்திணைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அன்பின் ஐந்திணைகள் யாவை
- குறிஞ்சி – புணர்தல்
- முல்லை – இருத்தல்
- மருதம் – ஊடல்
- நெய்தல் – இரங்கல்
- பாலை – பிரிதல், உடன்போக்கு
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்ந்தவர்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். வேட்டையாடுதல், தினை விதைத்தல் இங்கு வாழ்பவர்களின் தொழில் ஆகும்.
வேட்டையாடச் சென்ற தலைவனும் தினைப் புனம் காத்து நின்ற தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு புணர்ச்சியில் ஈடுபட்டதால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்கமாக புணர்தல் என்ற ஒழுக்கம் பேணப்பட்டது.
முல்லை
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம் எனப்படும். இங்கு வாழ்ந்தவர்கள் ஆயர்கள் என அழைக்கப்பட்டனர். மந்தை மேய்த்தல், நிலம் காத்தல் என்பன இவர்களது தொழில்கள் ஆகும்.
தொழிலின் பொருட்டு நிலம் காக்க எல்லைப் புறங்களில் மாடி வீடு அமைத்து காலம் குறித்து தலைவன் தொழிலுக்கு செல்வது உண்டு.
இதனால் குறித்த காலம் வரும் வரை தலைவி தன்னுடைய இல்லத்தில் கற்பு வழுவாது தலைவனுக்காக காத்துக் கொண்டு இருப்பதால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்ககம் இருத்தல் எனப்பட்டது.
மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். இங்கு வாழ்ந்தவர்கள் உழவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களது தொழில் உழவுத் தொழில் ஆகும். இந்த தொழிலானது குறிப்பிட்ட காலத்தில் நிறைவடைவதால் ஓய்வுக் காலம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்த ஓய்வுக் காலத்தில் ஆடவர்கள் பரத்தையர் வீடுகளுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்வர். இதனால் தலைவி தலைவன் மீது கோபம் கொள்வாள்.
அந்தக் கோபமானது பாணர்களாலும், புதல்வர்களாலும், செவிலித்தாய் முதலியவர்களால் தீர்க்கப்படுவதால் அந்தக்கோபம் பொய்க்கோபமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த நிலத்திற்கு உரிய ஒழுக்கமாக ஊடல் காணப்படுகின்றது.
நெய்தல்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்படும். இங்கு வசிப்பவர்கள் பரதவர் என அழைக்கப்பட்டனர். மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்து எடுத்தல் போன்றன இங்கு வாழ்பவர்களின் வாழ்வாதார தொழில்கள் ஆகும்.
தொழிலின் நிமித்தம் தலைவன் படகேறி கடலுக்கு செல்வான். அவன் திரும்பி வரும் வரை தலைவி அவனுக்காக ஏங்கி இரங்கிக்கொண்டு இருப்பாள். அதனால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்கமாக இரங்கல் காணப்படுகின்றது.
பாலை
வரண்ட நிலமான பாலைவனத்தால் சூழப்பட்ட நிலம் பாலை எனப்படும். அங்கு வாழ்ந்தவர்கள் மறவர் என அழைக்கப்பட்டனர்.
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலைவனம் உருவானதாக தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
இந்த நில மறவர்கள் களவெடுத்தல், வழிப்பறி செய்தல் முதலான தொழில்களில் ஈடுபட்டனர். இந்த தொழிலுக்காக தலைவன் தலைவியை நீண்ட நாட்கள் பிரிந்து வாழ வேண்டி ஏற்படும்.
இதனால் இந்த நிலத்திற்கு உரிய ஒழுக்கமாக பிரிதல் காணப்படுகின்றது. பிரிதலை தாங்க முடியாத தலைவி உடன் செல்வதும் உண்டு. அத்தோடு பிற நிலத்தவர்களூடாக உடன் செல்வதும் உண்டு. இதனால் பாலைவனத்தில் உடன்போக்கு என்னும் ஒழுக்கமும் காணப்படுகின்றது.
இவ்வாறாக சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், மருத நிலத்தில் ஊடலும் , நெய்தலில் இரங்கலும், பாலைவனத்தில் பிரிதலும் உடன்போக்குமாக அன்பின் ஐந்திணை ஒழுக்கங்கள் ஐவகை நிலங்களிலும் காணப்பட்டுள்ளன.
You May Also Like: |
---|
விருந்தோம்பல் பற்றிய கட்டுரை |
தமிழ் இலக்கிய வரலாறு |