சைவ சமயம் வளர்த்த அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் கண்ணப்ப நாயனாரும் ஒருவராக காணப்படுகின்றார்.
இறைவனை அடைவதற்கு தூய இறையன்பு ஒன்றே போதும், குலம் கோத்திரம் என்பது ஏதும் தேவையில்லை, எம்மால் இயன்ற காணிக்கையை இறைவனுக்கு கொடுத்து இறைவனை அடையலாம் என்பதை விவரிக்கும் வரலாறாக கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை காணப்படுகிறது. பக்தி என்பது எந்த ஒரு பொருளையும் சார்ந்தது அல்ல.
இயற்பெயர் | திண்ணன் |
பிறந்த இடம் | உடுப்பூர் |
தாய் | தந்தை |
தந்தை | நாகன் |
குலம் | வேடுவர் |
வாழ்க்கை முறையும் இறையருளும்
உடுப்பூர் காட்டின் அரசனான நாகனும், அவனுடைய மனைவியான தத்தையும் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமையால் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனை வேண்டி வணங்கினர்.
அதன் பயனாக ஓர் ஆண்மகன் பிறந்தான். ஆவலுடன், தனது மகனை தூக்கிய நாகன், அவன் திண்ணென இருந்ததால் திண்ணன் எனப் பெயரிட்டான். பின்னர் வளர்ந்து உரிய பருவத்தை அடைந்ததும் அவனுக்கு வில்வித்தையை நாகன் கற்பித்தான்.
வயோதிப பருவத்தை அடைந்த நாகன் வேட்டைக்கு செல்ல முடியாததால், திண்ணனை வேட்டுவ வீரர்களுடன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு அனுப்பினார். திண்ணன் வீரர்களுடன் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போதும் ஒரு பன்றியை கண்டான். பின்னர் பன்றியை துரத்தி சென்று அதனை வேட்டையாடினார்.
அதன்பிறகு முகலி ஆற்றின் கரைக்கு சென்று பன்றியினை அவனது நண்பனான காடனும், நாணனும் வாட்ட ஆயத்தமானார். அப்போது திருக்காளத்தி மலையை கண்ட திண்ணனார் மலைமேல் ஏறி பார்க்க ஆயத்தமாகி, பொன்னியாற்றில் நீராடிவிட்டு, காடனை பன்றியை உண்பதற்கு ஏற்றவகையில் தயார் செய்ய கூறிவிட்டு, நாணனை அழைத்துக்கொண்டு மலைமேல் ஏறினார்.
ஏற ஏற திண்ணனாருக்கு பரவசம் அதிகமாகியது. விரைவாக ஏறினார். அங்கு காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.
பசுவினை கண்ட கன்று போல ஓடிச்சென்று, கட்டியணைத்து “தனியாக காட்டில் இருக்கும் உங்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன், தனித்திருக்கும் உமக்கு சுவையான உணவு கொண்டு வருகிறேன்.” என்று கூறினார்.
பின்னர் முகலி ஆற்றின் கரைக்கு ஓடிச்சென்றான், அங்கு காடன் பன்றியை தீயில் வாட்டிக் கொண்டிருந்தான். திண்ணனார் அங்கு வாட்டிய இறைச்சியை அம்பினால் குத்தி கிழித்து, தனது வாயில் போட்டு சுவைத்து நல்ல சுவையான இறைச்சியை உமிழ்ந்து தேக்கமிலையில் வைத்தார். சுவையற்ற இறைச்சியை தரையில் உமிழ்ந்தார்.
சிறிது தூரம் நடந்து காட்டுப் பூக்களைப் பறித்துத் தலையில் செருகினார். பொன்முகலி ஆற்றின் நீரை வாயில் எடுத்துக்கொண்டும் குடுமிதேவரின் கோயிலை அடைந்தார்.
சுவாமிக்கு சூட்டப்பட்டிருந்த பூக்களை தனது கால்களால் அப்புறப்படுத்திவிட்டு, வாய்க்குள் முகர்ந்து கொண்டு வந்த நீரை குடுமி தேவரின் மேல் கொப்பளித்தார். பின்பு தான் கொண்டு வந்த பூக்களை சுவாமிக்கு சூடினார். அதன்பின் இறைச்சியை ஒவ்வொன்றாக எடுத்து படையல் இட்டார்.
குடுமித்தேவரை தினமும் சிவாகம முறைப்படி அர்ச்சிப்பவரான சிவகோசரியார் எனும் அந்தணர் ஆசாரசீலராக பூஜை பொருட்களுடன் குடுமித்தேவரது கோயிலுக்குள் சென்றார்.
கோயிலுள் மாமிசவாடை வீசுவதைக்கண்டு தாங்கமுடியாத துயரம் கொண்டு அவற்றை நீக்கிவிட்டு, ஆகம முறைப்படி சுத்தம் செய்து வணங்கி பூஜை செய்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.
சிவபெருமான் மேல் அளவில்லாத பக்தி கொண்ட திண்ணனார் பகல் பொழுதினில் தினமும் வேட்டையாடி முன் போல் இறைச்சியை தீயில் இட்டு வாட்டி, சுவைத்துப் பார்த்து சிவபெருமானுக்கு படையல் இடுவார்.
தினமும் ஆலயம் அசுத்தப்படுவதை பொறுக்க முடியாத சிவகோசரியார் “சுவாமி! தினமும் வேடுவர்கள் இவ்வாலயத்தை அசுத்தப்படுத்துகின்றனர். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே தயவு செய்து தேவரீர் என் மீது இரக்கம் கொண்டு இவ்விதம் நடைபெறாமல் காத்துக் கொள்ளும்” என முறையிட்டார்.
அன்றிரவு திருக்காளத்தியப்பர் சிவகோசரியாரின் கனவில் தோன்றி ” அன்பனே! கோயிலை வேடுவர் அசுத்தப்படுத்துவதாக எண்ணாதே. என்மேல் வைத்த அன்பினால் ஒருவன் அப்படி செய்கின்றான். அன்பால் அடியவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் எனக்கு இன்பத்தைத் தரும்.
அவனது கால் பதிந்த இடங்கள் எல்லாம் எனக்கு இன்பத்தை தருகின்றன. வாயால் கொப்பளிக்கும் நீர் கங்கை ஆற்றின் நீரை விட புனிதமானதாக எனக்கு தோன்றுகிறது. அவன் படைக்கும் எச்சில் உணவு தேவாமிர்தத்தை விட சுவையாக இருக்கிறது. நீ அவனது செயல்களை எனக்கு பின்னால் மறைந்து வந்து பார்” என்று கூறி மறைந்தார்.
மறுநாள், சிவகோசரியார் பொன்முகலியாற்றில் நீராடி ஆகம முறைப்படி பூஜை செய்து விட்டு சுவாமியின் பின்பக்கத்தில் மறைந்திருந்தார்.
பக்தி பரவசமாக பூஜைப் பொருட்களுடன் வந்த திண்ணனார், சுவாமியின் வலது கண்ணில் இருந்து ரத்தம் வழிவதை கண்டு பதறித் துடித்தார். பூஜை பொருட்களை வீசி எறிந்துவிட்டு சுவாமியின் வலது கண்ணால் வடியும் இரத்தத்தை துடைத்தார்.
துடைக்கத் துடைக்க இரத்தம் பெருகியது. உடனே காட்டுக்குள் சென்று பச்சிலைகளைப் பறித்து வந்து அவற்றைப் பிழிந்து சாறெடுத்து சுவாமியின் கண்ணுக்கு விட்டார்.
அப்படியிருந்தும் சுவாமியின் கண்களிலிருந்து இரத்தம் கசிவது நிக்கவில்லை. திண்ணனாருக்கு ஏற்பட்ட துயருக்கு அளவே இல்லை. பித்துப் பிடித்தவர் போல அங்கும் இங்கும் ஓடினார். தரையில் விழுந்து உருண்டார். பெருங்குரல் எடுத்து அழுதார்.
பின், “ஊனுக்கு ஊனிடல் வேண்டும்” என்ற பழமொழிக்கு இணங்க, தனது கண்ணைத் தோண்டி சுவாமியினுடைய கண்ணில் அப்பினார். அப்பியவுடன் சுவாமியின் கண்ணிலிருந்து ரத்தம் வருவது நின்றது அதனால் மகிழ்ந்த திண்ணனார் மகிழ்ச்சியால் ஆனந்தக் கூத்தாடினார்.
திண்ணனாரின் மாசில்லாத அன்பை உலகுக்கு புலப்படுத்த விரும்பிய திருக்காளத்தியப்பர் தனது மற்றய இடது இடது கண்ணிலிருந்தும் இரத்தம் கசிய பண்ணினார்.
அதைக் கண்ட திண்ணனார் கவலை கொண்ட போதும் ” இன்னொரு கண்ணிருக்க ஏன் துயரப்படுதல் வேண்டும்” என்று நினைத்து, அடையாளமாக தனது காலை சுவாமியின் ரத்தம் வடியும் கண்ணருகில் வைத்து தனது மறுகண்ணை அம்பினால் தோண்டினார்.
உயிர்கள் மீது அளவற்ற அன்பை வைத்திருக்கும் சிவபெருமான் திண்ணனாரது செயலை பொறுக்க முடியாது, ” நில்லு கண்ணப்பா!” என்று சொல்லியவாறு கரத்தைப் பற்றினார்.
“யாரும் செய்ய முடியாத இக்காரியத்தை செய்த உன்னை உலகோர் ‘கண்ணப்பர்‘ என்று அழைப்பர். உன் உயிரை விட மேலாக நினைத்த நீ என்றும் எனது வலது பக்கத்தில் நிற்க கடவாய்” என்று கூறினார்.
You May Also Like : |
---|
மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு |
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு |