தில்லையாடி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு

thillaiyadi valliammai history in tamil

பெண்களின் பெருமையையும், வீரத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஜான்சிராணி, கண்ணகி போன்றவர்களை குறிப்பிடலாம். அந்த வகையில், 16 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார், வீரமங்கை வள்ளியம்மை. ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதில் எந்த பயனும் இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதே சரித்திரம் எப்போதும் பேசுகின்றது.

பெயர் வள்ளியம்மை 
பிறப்புபெப்ரவரி 22, 1898
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
இனம்தமிழர்
பூர்வீகம்தில்லையாடி (நாகப்பட்டினம்), தமிழ்நாடு
தேசியம்தென்னாப்பிரிக்கா
தாய்மங்களத்தம்மாள்
தந்தைமுனுசாமி
இறப்பு22 பிப்ரவரி 1914
கல்லறை இருக்கும் இடம்ஜோகானஸ், தென்னாப்பிரிக்கா

ஆரம்ப வாழ்க்கையும் வெள்ளையர்களின் ஆதிக்கமும்

வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலத்தில், தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு போன்றவற்றை பயிரிட விரும்பி வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத் தேடினர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் அடிக்கடி வெள்ளையர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். எனவே, தங்களது ஆதிக்கத்திலிருந்த இந்தியா போன்ற பிற காலனி நாடுகளிலிருந்து பண்ணைத் தொழிலுக்கேற்ற கூலிகளை இறக்குமதி செய்தனர்.

அவ்வேளையில் ஒரு கூலித் தொழிலாளியாக தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்திலிருந்து கப்பலேறி தென்னாபிரிக்காவுக்கு தன் மனைவி மங்களத்துடன் சென்றார் முனுசாமி.

அங்கு சென்ற பிறகே, இவர்கள் இருவருக்கும் வள்ளியம்மை பிறந்தார். எனினும் இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக்கொண்டு “தில்லையாடி வள்ளியம்மை” என அழைக்கப்படுகிறார்.

எதிர்கால இன்பக் கனவுகளோடு சென்ற இந்திய தொழிலாளர்கள் அங்கே வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தியர் ஒவ்வொருவரும் அங்கே வாழ்வதற்கு வரிகட்ட வேண்டும், அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது, அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையக்கூடாது, வெள்ளையர்களுடன் சமமாக அமர்ந்து பயணம் செய்யக்கூடாது இவ்வாறெல்லாம் இந்தியர்கள் ஒடுக்கப்பட்டனர்.

தென்னாப்பிரிக்க நாட்டின் திருமணப் பதிவு சட்டப்படியும், கிறிஸ்தவ மத சட்டப்படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் 1913 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பு அங்கு குடியேறி இருந்த இந்தியர்கள் அனைவருக்கும் எதிராக அமைந்திருந்தது.

வள்ளியம்மை வாழ்க்கையின் திருப்புமுனை

இந்தியர்கள் தமது வாழ்வுரிமையை மீட்க அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போராட்டத்தினை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார். அப்போராட்டத்தின் போது காந்தியடிகளின் வீரம் செறிந்த உரை, சிறுமியான வள்ளியம்மையின் மனதில் ஆழமாக பதிந்தது.

காந்தியடிகளின் உரிமை முழக்கத்தினால் கவரப்பட்ட வள்ளியம்மை அறப்போராட்டத்தில் முனைப்புடன் பங்கேற்றார். 1913 ஆம் ஆண்டு திங்கள் 23ம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை ஈடுபட்டார்.

வள்ளியம்மையின் சிறை வாழ்க்கை

அறப்போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக வள்ளியம்மைக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 3 மாத கடுங்காவல் தண்டனை வழங்கியது. சிறையில் வள்ளியம்மைக்கு கல்லும், மண்ணும் கலந்த உணவு கொடுக்கப்பட்டது. இதனால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டார். கடுமையான காய்ச்சலுக்கு உட்பட்ட அவருக்கு போதிய மருத்துவம் அளிக்கப்படவில்லை.

மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை உடல்நலக்குறைவால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்.

அந்த நிலையிலும் வெள்ளைக்கார சிறை அதிகாரி “உரிய அபராத தொகையை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுத் செல்” என்று கூறியும், “செத்தாலும் சிறையில் தான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையை கட்ட மாட்டேன்” என மறுத்து சிறையிலேயே இருந்தார்.

அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. கவலைக்கிடமான நிலையில், 1914 பிப்ரவரி 11 ஆம் திகதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். வீட்டில் படுத்த படுக்கையாக வள்ளியம்மை இருக்கும் செய்தி கேள்விப்பட்டு காந்தியடிகள் அவரைக் காண வந்தார்.

வள்ளியம்மையின் நிலை கண்டு கலங்கிய காந்தியடிகள், “சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” என்று கேட்டார். ஆனால் உடல்நிலை தளர்ந்திருந்தது நிலையிலும் வள்ளியம்மை ” இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார். அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்பேன். அதற்காக என் இன்னுயிரையும் தருவேன். ” என்று கூறிய வீர மங்கையாக காணப்படுகிறார்.

சிறைச் சூழலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வள்ளியம்மை 1914 பிப்ரவரி 22 ஆம் நாள் தமது 16வது அகவையில் மரணம் அடைந்தார்

காந்தியடிகளின் கருத்து

“என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது ” என்று காந்தியடிகள் மனம் வருந்தினார். மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்

அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர்நீத்த அவருடைய உருவம் என் கண் முன் நிற்கிறது. “நம்பிக்கைதான் அவரது ஆயுதம்” என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து இந்தியன் ஒப்பீனியன் இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.

தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள், ‘தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியடிகள் தமது தமிழகப் பயணத்தின் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வள்ளியம்மையின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். திருமணமாகாத இளம் பெண்ணான வள்ளியம்மையின் வாழ்வு இந்திய விடுதலைப்போருக்கு முன்னோடியாக அமைந்தது. அவருடைய அளப்பரியா தியாகம் போற்றி வணங்கத் தக்கது.

தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை மண்டபம்

தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் ஈகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.

காந்தி தில்லையாடிக்கு 1-5-1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.

தில்லையாடியில் காந்தி நினைவு தூபி அருகில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டு திருப்பனந்தாள் காசிமட இணை அதிபரால் திறந்து வைக்கப்பட்டது.

You May Also Like:
காமராஜர் வாழ்க்கை வரலாறு
ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு