சுத்தம் சுகாதாரம் கட்டுரை

Sutham Sugatharam Katturai In Tamil

இந்த பதிவில் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான “சுத்தம் சுகாதாரம் கட்டுரை” பதிவை காணலாம்.

நோய்களில் இருந்து நம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் சுத்தம் சுகாதாரம் அவசியமாகும்.

சுத்தம் சுகாதாரம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுற்றுப்புறத் தூய்மை
  3. வீட்டின் தூய்மை
  4. சுகாதாரக் கேடுகள்
  5. சுத்தம் சுகாதாரம் பேணும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

சுத்தம் மற்றும் சுகாதாரம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்கவழக்கங்களாகும். மனிதனானவன் உடல் மற்றும் உள ரீதியாக ஆரோக்கியமாக வாழவேண்டும். ஆரோக்கியமான வாழ்வின் மூலமே ஒருவனது வாழ்வு சிறக்க முடியும்.

இத்தகைய நல்வாழ்க்கைக்கு வழி அமைப்பதே சுகாதாரமாகும். சுத்தம் பற்றி முன்னோர்கள் பல மொழிகளால் உணர்த்தியுள்ளனர்.

“கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடிˮ⸴ “சுத்தம் சோறு போடும்ˮ என்பன நம் நாட்டில் வழக்கத்திலுள்ள பழமொழிகளாகும்.

இன்றைய சூழலில் பல தொற்று நோய்கள் ஏற்பட சுத்தமின்மையே காரணமாகிறது. இதிலிருந்து நம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் சுத்தம் சுகாதாரம் அவசியமாகும். சுத்தம் சுகாதாரம் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சுற்றுப்புறத் தூய்மை

தூய்மை என்பது உண்ணும் உணவு⸴ உடுக்கும் உடை⸴ இருக்குமிடம் ஆகியவற்றில் மட்டுமல்ல நம் சுற்றுப்புற சூழலின் சுத்தமும் அதிலடங்கும். சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வையும் வாழ முடியும்.

நம்மை மட்டுமின்றி வீட்டையும் மற்றும் சுற்றுச்சூழலையும் தினமும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

குப்பைக் கழிவுகளை சுற்றுப்புறங்களில் வீசுதல் கூடாது, பொது இடங்களில் மலசலம் மற்றும் எச்சில் துப்பக் கூடாது. வீடும் நாடும் நமது இரு கண்கள் போல் காக்க வேண்டும்.

வீட்டின் தூய்மை

நாம் வசிக்கும் வீடு வாழ்வின் ஓர் அங்கமாகும். மன நிம்மதியை உணரும் இடமாகும். எனவே அத்தகைய இடம் தூய்மையாக இருப்பது அவசியம். பண்டிகைகள்⸴ விழாக்கள்⸴ விரதங்கள் போன்றன மறைமுகமாக வீட்டின் சுத்தத்தை பேணுவதற்காகவே உருவாக்கப்பட்டவையாகும்.

ஏனெனில் இக்காலங்களில் வீட்டை சுத்தம் செய்து சாணம் தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி கிருமிகளை அண்டவிடாமல் பாதுகாக்கப்படுகின்றது. நமது வீட்டின் சுத்தமே நாட்டின் சுத்தமாகும். எனவே சுகாதாரம் என்பது வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

சுகாதாரக் கேடுகள்

நம் நாட்டில் சுகாதாரக்கேடு என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. வாகனப் பெருக்கத்தினால் ஏற்படும் புகை⸴ தொழிற்சாலைக் கழிவுகள்⸴ சனத்தொகைப் பெருக்கம் போன்ற பல காரணங்களினால் சுகாதாரக் கேடுகள் இடம்பெறுகின்றன.

தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேறி நீர்நிலைகளுடன் கலக்கின்றன. இதனால் நன்னீர் அசுத்தமடைகின்றது. இதனை மக்கள் பருகுவதால் வாந்திபேதி⸴ வயிற்றோட்டம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.

போக்குவரத்துப் புகையினால் வளிமண்டலம் மாசடைகிறது. மாசுக் காற்றை சுவாசிப்பதால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகளினால் சுற்றுப்புறத் தூய்மை கெடுகிறது. இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபட சுத்தம்⸴ சுகாதாரம் அவசியம்.

சுத்தம் சுகாதாரம் பேணும் வழிமுறைகள்

தனிமனிதன் ஒவ்வொருவரும் முதலில் சுத்தத்தைப் பேண வேண்டும். அதனோடு ஒட்டுமொத்த சமூகத்தினதும் சுத்தம் பேணப்படும். நம் கண்கள்⸴ காதுகள்⸴ வாய்⸴ மூக்கு⸴ தோல் பராமரிப்பு போன்றவற்றினைப் பேணவேண்டும்.

சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைக்க வேண்டும். இதனால் உணவு மாசடைதல்⸴ உணவு நஞ்சாதல்⸴ நோய் பரவுதல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தலாம்.

சுற்றுச் சூழலை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். சூழலில் கழிவுகளை வீசுதல் கூடாது. பொது இடங்களில் மலசலங்களைக் கழித்தல்⸴ எச்சில் துப்புதல் கூடாது.

முடிவுரை

எவர் ஒருவர் தனது கடமைகளைச் சரிவர செய்கின்றாரோ அவருக்கு உரிமைகள் தானாகவே கிடைக்கும். எனவே நாம் நமது கடமைகளைச் சரிவர செய்தல் வேண்டும்.

சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுத்தம் சுகாதாரம் பேணுவதற்கு நம்மாலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதன் மூலம் சுத்தமான காற்றைச் சுவாசித்து சுகாதாரமான⸴ ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்.

You May Also Like:
சுத்தம் சுகம் தரும் கட்டுரை
உடற்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை