சுத்தம் பேணுவோம் கட்டுரை

sutham katturai in tamil

இந்த பதிவில் “சுத்தம் பேணுவோம் கட்டுரை” பதிவை காணலாம்.

சுத்தம் பேணுதலின் அவசியத்தை அனைவரும் அறிந்து அதன்படி சுத்தம் பேணுவதன் மூலம் நம்மையும் நம் சூழலையும் நலமாக வைத்துக் கொள்ள முடியும்.

சுத்தம் பேணுவோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சுத்தம் பேணுதல்
  • சுத்தம் பேணுவதன் நன்மைகள்
  • சுத்தம் பேணாவிடின் ஏற்படும் தீமைகள்
  • முடிவுரை

முன்னுரை

“சுத்தம் சுகம் தரும்” என்பது ஆன்றோர் வாக்கு ஆகும். ஏழ்மையாக இருப்பினும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் “கூழானாலும் குளித்துக்குடி, கந்தலானாலும் கசக்கிக் கட்டு” என்ற பொன்மொழிகளினூடாக எமக்கு கூறிச்சென்றுள்ளனர்.

சுத்தம் பேணுதல் என்பது செல்வச் செழிப்பின் போதும் மற்றும் ஏழ்மையாக இருப்பினும் கட்டாயம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய விடயமாகும்.

சுத்தம் பேணுதல் என்பது தனிநபர் சார்ந்த விடயமாக இருப்பினும் கூட ஒரு தனிநபர் சுத்தம் பேணாதவிடத்து அது அவரை மட்டுமல்லாது அவர் சார்ந்த சமூகத்தையும் பாதிப்படைய செய்யும். இக்கட்டுரையில் சுத்தம் பேணுதல் பற்றி நோக்கலாம்.

சுத்தம் பேணுதல்

சுத்தம் பேணுதல் என்பது அனைவருடைய கடமையாகும். சுத்தம் பேணுதல் எமது உடலில் இருந்நு ஆரம்பிக்கின்றது. அன்றாடம் குளித்தல், உணவருந்த முன் கை கழுவுதல், கழுவிய சுத்தமான ஆடைகளை அணிதல், மலசல கூடம் பாவித்தல் போன்றவை எமது உடல் சார்ந்த விடயங்களாகின்றன.

அத்துடன் நாம் வாழும் இல்லம் மற்றும் அது சார்ந்த சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது நாம் தொழில் புரியும் இடங்களையும் கூட நாம் சுத்தமாக பேண வேண்டும்.

உதாரணமாக முறையான கழிவகற்றல் செயன் முறைகள் போன்றவற்றை நாம் வாழும் சூழலில் செயற்படுத்துகின்ற போது எமது சமூகம் தானாகவே சுத்தமானதாக காணப்படும்.

சுத்தம் பேணுவதன் நன்மைகள்

சுத்தம் பேணுவதால் எமக்கும் எம்மை சார்ந்த சூழலுக்கும் பல நன்மைகள் கிடக்கின்றன. நமது உடலினை சுத்தமாக பேணுவதனால் நோய் நிலமைகளில் இருந்து எம்மை காத்துக் கொள்ளலாம்.

மேலும் எமது சூழலை சுத்தமாக பேணுகின்ற போது சூழலில் உள்ள நிலம், நீர், வளி என்பன மாசடையாமல் எமக்கு நன்மையை மட்டுமே வழங்குபவையாக காணப்படுகின்றன.

சூழல் சுத்தமாக காணப்படும் போது அது ஒவ்வொரு தனிமனிதருடைய உடல், உள ஆரோக்கியத்திலும் நல்வினை ஆற்றக் கூடியதாக காணப்படும்.

சுத்தமான காற்று, சுத்தமான நீர், மாசற்ற மண் என்பவற்றை நாம் அனுபவிக்க சுத்தம் பேணுதலானது எமக்கு உதவி செய்வதாக காணப்படும்.

சுத்தம் பேணாவிடின் ஏற்படும் தீமைகள்

சுத்தம் பேணாதவிடத்து நாம் பல தீமைகளை அனுபவிக்க நேரிடும். உதாரணமாக ஒழுங்காக உடலியல் சுத்தத்தை பேணாதவிடத்து பல நோய்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

கண்ட இடத்தில் எச்சில் துப்புதல், குப்பைகளை முறையாக அகற்றாமை போன்ற செயற்பாடுகள் நம் சார்ந்த சூழலில் உள்ள நீர், நிலம், வளி என்பவற்றை மாசுபடுத்தக் கூடியன இவை பல நோய்களை உருவாக்கும்.

மாசடைந்த நீரினை பருகுவதால் வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படும். அதேவேளை மாசடைந்த வளியினை சுவாசித்தால் நுரையீரல் சார்ந்த நோய்கள் போன்றவையும் ஏற்படும்.

மேலும் சுத்தமற்ற சூழலினால் மழைக்காலங்களில் டெங்கு போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

முடிவுரை

சுத்தம் பேணுதலின் அவசியத்தை அனைவரும் அறிந்து அதன்படி சுத்தம் பேணுவதன் மூலம் நம்மையும் நம் சூழலையும் நலமாக வைத்துக் கொள்ள முடியும்.

தனி மனித வாழ்வின் ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் சுத்தமும் அவசியம் என்பதை உணர்ந்து சுத்தம் பேணி சுகமாக வாழ பழகிக் கொள்ளுவோம்.

You May Also Like :
எரிபொருள் பயன்பாடு கட்டுரை
வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை