இந்த பதிவில் “மண் வளம் காப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.
உணவு உற்பத்தியினை நாம் மேற்கொள்ள மண் வளமாக இருப்பது முக்கியமானதாகும்.
மண் வளம் காப்போம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மண் வளத்தின் முக்கியத்துவம்
- உலக மண் வள நாள்
- மண் மாசடைதல்
- மண் வளத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
இறைவன் நமக்களித்த பல அற்புதமான வளங்களில் ஒன்றாக மண்வளம் உள்ளது. மனித சமுதாயத்தினுடைய வாழ்வும், மறைவும் மண் வளத்தைச் சார்ந்ததாகவே உள்ளது.
உலகில் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் மண்ணை சார்ந்தே வாழ்கின்றன. எனவே மண் இல்லையேல் இல்லை மனிதன் இல்லை என்பது மிகையல்ல.
இத்தகைய மண் வளத்தைப் பேணிக்காப்பது அனைவரதும் தலையாய கடமையாகும். மண் வளம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மண் வளத்தின் முக்கியத்துவம்
நலமான மண் வளம்தான் பசுமையான விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ளது. உலகின் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப உணவுத் தேவையும் அதிகரிக்கின்றது.
இதனை நிவர்த்தி செய்வதற்கு உணவு உற்பத்தி இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய உணவு உற்பத்தியினை நாம் ஏற்படுத்துவதற்கு மண் வளமாக இருப்பது முக்கியமானதாகும்.
தாவர வளர்ச்சிக்கு மண் ஓர் முக்கிய ஊடகமாகவும், உயிரின நலத்திற்கும், ஆரோக்கியமான வாழ்வினை மனிதன் வாழ்வதற்கும் வளமான மண்னே ஆதாரமாகவும் விளங்குகின்றது.
உலக மண்வள நாள்
ஆண்டுதோறும் டிசம்பர்-5 ல் உலக மண் வள தினவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய மத்திய அரசால் 2015-ம் ஆண்டு முதல், டிசம்பர்-5 மண்வள தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மண்வளத்தைப் பேணிக் காப்பது, மண் நலம் மற்றும் அதன் மேலாண்மையின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதே இந்நாளின் பிரதான நோக்கமாகும்.
மண் மாசடைதல்
மண் மாசுபடுத்தப்படும் போது, சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.
தரையில் வீசப்படும் கழிவுகள், எண்ணெய் மற்றும் எரிபொருட் கழிவுகளைக் கொட்டுதல் போன்ற பல காரணங்களினால் மண் அதிகம் மாசுபடுத்துகின்றன.
மண் மாசுபாடு பொதுச்சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, விவசாயமும் பெரும் பாதிப்பை சந்திக்கின்றது. எனவே மண் மாசுபாடு தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
மண் வளத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
மண் வளத்தை பாதுகாக்க, மண்புழு உரம், தொழு உரம், மக்கும் உரங்களை போட வேண்டும். எரு மற்றும் இயற்கை உரங்களை இட்டு, மண்வளத்தை பேணிக் காக்கலாம்.
மண்ணில் உள்ள பல்லுயிரிகளைப் பாதுகாப்பதன் மூலம் மண்ணை உயிர்த்தன்மையுடன் வைத்திருக்கலாம்.
மண்ணின் தன்மை அறிந்து உரமிடுதல் மூலம் மண் வளத்தை காக்க முடியும்.
மண்ணினுள் மக்காத பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக், பாலிதீன் போன்றவை கலப்பதை தவிர்க்க வேண்டும்.
தேவையற்ற ரசாயனங்களை மண்ணில் சேர்வதை தடுக்கும் போது மண் வளம் பாதுகாக்கப்படும்.
முடிவுரை
மண் வளம் நிறைந்த ஊரில் மனிதர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். சங்க இலக்கியத்தில் ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவாய் மாறும் திறன் படைத்தவையே நிலமும், நீரும் என்பது இதன் பொருளாகும்.
அவ்வகையில் மண்வளத்தை பாதுகாப்பது உயிரினும் மேலான கடமை என்பதை உணர்ந்து செயற்படுவதுடன் வளமான மண்ணின் முக்கியத்துவத்தினை அனைவரும் உணர்ந்து நீடித்த நிலையான மண்வள மேம்பாட்டு முறைகளைப் பின்பற்றிட வேண்டும்.
You May Also Like: |
---|
மழை நீர் உயிர் நீர் கட்டுரை |
செக்கிழுத்த செம்மல் கட்டுரை |