வாணிதாசன் வாழ்க்கை வரலாறு

Vanidasan History In Tamil

இந்த பதிவில் பெருமைக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மாணவரான “வாணிதாசன் வாழ்க்கை வரலாறு” பதிவை காணலாம்.

எண்ணற்ற சிறந்த படைப்புகளை நமக்கு தந்த பாவேந்தர் பாரதிதாசனின் மாணவன் என்ற பெருமைக்குரியவர் வாணிதாசன் அவர்களாவார்.

வாணிதாசன் வாழ்க்கை வரலாறு

இயற்பெயர்:அரங்கசாமி
பிறந்த திகதி:ஜூலை 22, 1915
பிறந்த இடம்:வில்லியனூர்
தந்தை:அரங்க. திருக்காமு
தாய்:துளசியம்மாள்
துணைவியார்:ஆதிலட்சுமி
இறப்பு:ஆகஸ்ட் 7, 1974

அறிமுகம்

நமது இந்திய நாட்டில் ஏராளமான கவிஞர்கள் தோற்றம் பெற்று மறைந்துள்ளனர். அதில் பலரது பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் எண்ணற்ற படைப்புகளை நமக்கு அளித்ததுடன் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுள் ஒருவரே பாவேந்தர் பாரதிதாசனின் மாணவன் என்ற பெருமைக்குரியவர் வாணிதாசன் அவர்களாவார்.

இவர் கவிஞரேறு⸴ பாவலர்மணி⸴ பாவலர் மன்னன்⸴ புதுமைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படும் கவிஞராவார்.

தொடக்க வாழ்க்கை

பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட புதுச்சேரிக்கு அருகிலுள்ள நீர்வளம் நிறைந்த வில்லியனூர் எனும் ஊரில் பிறந்தார்.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட திருக்காமு மற்றும் துளசி அம்மையாருக்கும் 1915ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி மகனாகப் பிறந்தார். இவர் ஒரு வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவராவர்.

இவரது தந்தையின் தந்தையான அரங்கசாமி என்பவரது பெயரையே வாணிதாசனுக்குச் சூட்டினர். அரங்கசாமி என்ற இயற்பெயரை இவர் கொண்டிருந்தாலும் குடும்பத்திலுள்ள அனைவரும் இவரை செல்லமாக எதிராசலு என்றே அழைத்தனர்.

இவருக்கு 7வயது இருக்கும்போது தங்கை பிறந்தாள். இதன்பின் தாயார் உடல்நலக்குறைவால் இறந்தார். 1926ஆம் ஆண்டு வாணிதாசனின் தந்தை உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாக உறவுக்காரப் பெண்ணான செல்லம்மாளை மறுமணம் செய்து கொண்டார்.

எனினும் 12 வயது வரை தாயின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளர்ந்த வாணிதாசனைச் சிற்றன்னை வளர்த்தெடுத்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை 1922ஆம் ஆண்டு வில்லியனூர் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார்.

விளையாட்டின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இதனால் பள்ளிக்கு சரியாக செல்வதில்லை. தாயில்லா பிள்ளை என்பதால் தந்தை கண்டிக்காமல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்.

1924ஆம் ஆண்டு வாணிதாசன் வில்லியனூர் எனப்படும் மையப் பள்ளியில் பயின்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வாணிதாசன் அங்குதான் பிரஞ்சு மற்றும் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார்.

தந்தையின் பணி காரணமாக புதுச்சேரிக்கும் பாகூருக்கும் மாற்றப்பட்டார். இதனால் புதுச்சேரியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் தான் பாவேந்தர் அவரது வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதுமட்டுமல்லாது எல்லப்ப வாத்தியார்⸴ முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோரும் ஆசிரியராக இருந்தனர். இவர்கள்தான் வாணிதாசனின் தமிழார்வத்தை வளர்த்தவர்களாவார்.

1928ஆம் ஆண்டில் பள்ளித் தேர்வில் புதுவையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1934ல் பிரவே எனும் தமிழ்ப் பண்டிதர் தேர்வை தனியாக எழுதுவதற்காக பாவேந்தர் பாரதிதாசன் தனிப்பட்ட வகுப்பு நடத்தினார்.

அதில் பயின்ற இவர் தேர்விலும் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்கு தேர்வானார். 1930களில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வத்தால் கவிதை எழுதத் தொடங்கினார்.

1935ஆம் ஆண்டு தனது 20வது வயதில் தனது உறவுக்காரப் பெண்ணான ஆதிலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆண்களும் பெண்களுமாக மொத்தமாக ஒன்பது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.

இலக்கியப் பணி

சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளையொட்டி “பாரதி இன்றடா? பாட்டிசைத்து பாட்டிசைத்து ஆடடா” எனத் தொடங்கும் முதல் கவிதையை எழுதினார். இக்கவிதை மதுரையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சி.பா.ஆதித்தனாரின் திங்கள் இதழான தமிழன் இதழில் வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார். ரமி என்ற புனைபெயரில் தனது கவிதைகளை அனுப்பினார். ஆனால் இப்பெயரை தமிழன் இதழ் நிறுவனம் விரும்பவில்லை.

இதனால் வாணிதாசன் என்னும் புனைபெயரில் எழுதுமாறு கேட்டுக் கொண்டதும் ரங்கசாமியும் அதனை ஏற்று வாணிதாசன் எனும் பெயரிலேயே எழுதினார்.

இதன் மூலம் தொடங்கிய இவருடைய இலக்கிய பயணம் திராவிடநாடு இதழின் மூலம் சிறந்த புரட்சிக் கவிஞராக அடையாளம் காணப்பட்டார். பொன்னி⸴ முரசொலி⸴ முத்தாரம்⸴ மந்திரம்⸴ தென்றல் உள்ளிட்ட இதழ்களிலும் எழுதத் தொடங்கினார்.

தமிழிச்சி⸴ கொடிமுல்லை⸴ தொடுவானம் ஆகிய குறுங்காப்பிய நூல்களும் வெளிவந்தன. இதேபோல் இசைப் பாடல்களின் தொகுப்பான தொடுவானத்தில் தனது இசை ஞானத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இவருடைய கவிதைகள் வாணிதாசன் கவிதைகள் எனும் தலைப்பில் வெளிவந்தது. பாடல்களின் தொகுப்பில் இயற்கையை பற்றிய கருத்துக்கள் இவரது பாடல்களில் மிகுதியாய் இருந்ததால் இவரை தமிழகத்தின் “வேர்ட்ஸ்வார்த்ˮ என்று பாராட்டினார்கள்.

வாணிதாசனின் கவிதை வளத்தையும்⸴ உள்ளத்தையும் அறிந்தே திரு. வி.க. ‘திரு.வாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்’, என்றார். மயிலை சிவமுத்து, ‘தமிழ்நாட்டுத் தாகூர்’ வாணிதாசனார் என்று புகழ்ந்தார்.

கவிஞர் வாணிதாசன் எழுதிய நூல்கள்

  • இரவு வரவில்லை
  • இன்ப இலக்கியம்
  • இனிக்கும் பாட்டு
  • எழில் விருத்தம்
  • எழிலோவியம்
  • குழந்தை இலக்கியம்
  • கொடி முல்லை
  • சிரித்த நுணா
  • தமிழச்சி
  • தீர்த்த யாத்திரை
  • தொடுவானம்
  • பாட்டரங்கப் பாடல்கள்
  • பாட்டு பிறக்குமடா
  • பெரிய இடத்துச் செய்தி
  • பொங்கற்பரிசு
  • வாணிதாசன் கவிதைகள்- முதல் தொகுதி
  • வாணிதாசன் கவிதைகள்- இரண்டாம் தொகுதி
  • வாணிதாசன் கவிதைகள்- மூன்றாம் தொகுதி
  • விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ

இறுதிக் காலம்

கவிஞரேறு வாணிதாசன் 7-8-1974ல் தனது 59ஆவது வயதில் மறைந்தார்.

கவிஞரேறு வாணிதாசனுடைய தமிழ்த்தொண்டைப் பாராட்டித் தமிழக அரசு இவர் குடும்பத்துக்கு 10,000 ரூபா பரிசு வழங்கியுள்ளது.

இவர் பெயரில் சேலிய மேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவர் மறைந்தாலும் இவர் புகழ் என்றும் மங்காது.

You May Also Like:

அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை