விளம்பரத்தின் தன்மை மாறுதல் கட்டுரை

Vilambarathin Thanmai Maruthal

இந்த பதிவில் “விளம்பரத்தின் தன்மை மாறுதல் கட்டுரை” பதிவை காணலாம்.

பொருளின் தரத்தினை மேம்படுத்தும் போது அப்பொருளினை வாங்கும் நுகர்வோர் பயனடைவர் என்பதை நிறுவனங்கள் கவனத்தில் கொண்டு செயல்படல் வேண்டும்.

விளம்பரத்தின் தன்மை மாறுதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விளம்பரத்தின் நோக்கம்
  3. தொலைக்காட்சியும் இதழ்களும்
  4. விளம்பரங்களினால் ஏற்படும் நன்மைகள்
  5. விளம்பரத்தின் தீமைகள்
  6. முடிவுரை

முன்னுரை

விளம்பரம் என்பது மக்களிடையே ஒரு வகையான தகவல்தொடர்பு ஆகும். ஒன்றைப் பற்றி அறிமுகம் செய்வது எதுவோ அது விளம்பரம் எனலாம்.

21 ஆம் நூற்றாண்டில், தொழில்நுட்பத்தின் வருகை மற்றும் விரைவான வளர்ச்சியால் பல்வேறு வகையான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் விளம்பரங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

சந்தைக்கு வந்த ஒரு பொருளை அறிமுகம் செய்து விற்பனை செய்வதற்கு விளம்பரம் அதிகம் துணைபுரிகின்றன. இத்தகைய விளம்பரங்களின் தன்மை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

விளம்பரத்தின் நோக்கம்

தகவல் எந்த வகையிலும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தப்பட்டு பொருத்தமான நபர்களுக்கு கடத்தப்பட்டு விளம்பரப் பொருளில் ஆர்வத்தை உருவாக்குதல் அல்லது சந்தையில் அதன் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

தன் உற்பத்திப் பொருளை அல்லது சேவையை உடனே மக்களின் பார்வைக்கு எடுத்துச் சென்று பொருள் ஈட்டுதல் மற்றும் வாங்குவோர் அல்லது நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பதை விளம்பரங்கள் நோக்கமாக கொண்டுள்ளன.

தொலைக்காட்சியும் இதழ்களும்

இன்றைய விளம்பரங்களில் தொலைக்காட்சியும், இதழ்களும் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன. சினிமாவில் பிரபல்யமான நடிகர், நடிகைகள் விளம்பரப் படப்பிடிப்புக்களில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

இதனால் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இதழ்களில் விளம்பரப்படுத்துவது மற்றும் இதழ்கள் குறித்துத் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துவது என்பனவும் காணப்படுகின்றன.

பெரும்பாலான இதழ்கள் விளம்பரங்களினாலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன என்றால் அது மிகையல்ல. விளம்பரத்தால் வரும் பணத்தைக் கொண்டே இதழ்கள் நடாத்தப்படுகின்றன.

விளம்பரங்களினால் ஏற்படும் நன்மைகள்

கல்வி குறித்த விளம்பரங்கள் கிராமங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அரசு மருத்துவமனைகள் முதலானவை உடல்சார்ந்த மற்றும் ஆரோக்கியம் சார்ந்து விழிப்புணர்வுகளைத் தந்து மக்களை விழிப்புணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றன.

புதிய புதிய உற்பத்திச் சாதனங்களை அறிமுகப்படுத்தி வேலைப் பளுவைக் குறைக்கின்றன. விளம்பரங்களினால் மக்கள் சந்தைக்கு வந்த பொருள்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிகின்றது.

நாட்டின் வருமானம் உயரும். அதாவது பொருட்களின் விற்பனை அதிகரித்து நாட்டின் வருமானமும் அதிகரிக்கின்றன.

மக்கள் தரமான ஒரு பொருளைத் தேர்வு செய்து வாங்க விளம்பரம் உதவுகின்றது.

விளம்பரத்தின் தீமைகள்

மக்களை உலகமயமாக்கும் தன்மையில் மிகுதியாக ஈடுபடச் செய்கின்றன. விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்குச் சொற்களும் வேறு மொழிக்கலப்புச் சொற்களும் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதனால், மொழிச் சிதைவு ஏற்படுகின்றது. பல விளம்பரங்கள் மக்களைச் சிந்திக்க வைப்பதில்லை. வெறும் பொருள் மீதான மோகத்தை மட்டுமே உண்டு பண்ணுகின்றன.

மக்களிடம் பரவலாக நிறைந்து கிடக்கும் பணத்தை முதலாளியிடம் கொண்டு சேர்க்கின்றன. உலகப் பணக்காரர்களை உருவாக்குகின்றன. மக்களுக்குத் தெரியாமலேயே மக்களைச் சுரண்டவும் செய்கின்றன.

முடிவுரை

விளம்பரத்தின் தன்மைக்கேற்ப பணம் நிறையத் தேவைப்படுகிறது. விளம்பரங்களின் தாக்கம் ஆரோக்கியமானதாகவோ அல்லது மோசமானதாகவோ மாறுவது அந்தந்த நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளது.

எனினும் ஒரு பொருள் பற்றிய அறிமுகமானது விளம்பரத்தின் மூலமே மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படுகின்றது.

பொருளின் தரத்தினை மேம்படுத்தும் போது அப்பொருளினை வாங்கும் நுகர்வோர் பயனடைவர் என்பதை நிறுவனங்கள் கவனத்தில் கொண்டு செயல்படல் வேண்டும்.

You May Also Like:
நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை
நுகர்வோர் விழிப்புணர்வு கட்டுரை