இந்த பதிவில் “உண்மையே உயர்வு தரும் கட்டுரை” பதிவை காணலாம்.
“பொய் சொல்ல கூடாது பாப்பா” என்று மகாகவி பாரதியார் குழந்தைகளிடத்து உண்மையினை விதைக்கின்றார்.
உண்மையே உயர்வு தரும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாற்று சான்றுகள்
- மேன்மை
- பொய்மையின் கீழ்நிலை
- உண்மையான வெற்றி
- முடிவுரை
முன்னுரை
“வாய்மையே வெல்லும்” என்ற வாசகத்தினை நாம் பல இடங்களில் காணமுடியும். இதன் மூலம் எமது வாழ்வில் உண்மையின் மேன்மையினை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
எம்முடைய முன்னோர்கள் வாய்மையும் நேர்மையும் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட்டால் தான் எமது வாழ்வானது மேன்மையடையும் என்று நம்பினார்கள்.
இதனை வலியுறுத்துவதாக ஏராளமான அறம் சார்ந்த இலக்கியங்களும் கொள்கைகளும் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இவை தொடர்பாக நாம் இந்த கட்டுரையில் நோக்கலாம்.
வரலாற்று சான்றுகள்
எமது சிறுபராயத்தில் நாம் கற்று கொண்ட பாடங்கள், கதைகள் வாயிலாக உண்மையினை கடைப்பிடித்து உயர்ந்தவர்கள் பலருடைய வரலாறுகளை நாம் கேட்டிருப்போம்.
உதாரணமாக அரிச்சந்திரனுடைய கதை மற்றும் சிபிசக்கரவர்த்தியின் கதை, மனுனீதி சோழனின் கதை என பல்வேறான கதைகளில் நம் முன்னோர்கள் அறத்தையும் உண்மையையும் நிலைநாட்ட தம் உயிரையும் ஈந்தழித்த வரலாறுகளை நாம் மறந்து விடக்கூடாது.
அவற்றில் இருந்த நாமும் பாடம் கற்று எமது வாழ்வில் உண்மையுடையவர்களாக இருக்க வேண்டும்.
மேன்மை
ஒருவரிடத்து எவ்வளவு செல்வங்கள் இருப்பினும் எத்தனை அதிகாரங்கள் இருப்பினும் அவர்களிடத்து உண்மையானது இல்லாது விடின் அவர்களால் மேன்மை நிலையினை அடைந்து விட முடியாது.
இன்றைய காலகட்டத்தில் அதிகளவான மக்கள் தொகையினர் பொய்மையின் பக்கம் சார்ந்து இலகுவாக வாழ்வில் முன்னேறி விடலாம் என நினைக்கின்றனர்.
இது அவர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் பின்னாளில் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
பொய்மையின் கீழ்நிலை
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது போல ஒருவர் உண்மைக்கு மாறாக பொய்மையினை ஆதரித்தால் அவருடைய வாழ்வு இருள்மயமானதாய் இருக்கும்.
பொய்மையும் தவறான வழிகளும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியினை கொடுத்தாலும் பின்னாளில் அது பல இன்னல்களை கொடுக்கும்.
பொய் பேசும் மனிதர்களுக்கு இந்த சமூகத்தில் எந்த மதிப்பும் கிடைப்பதில்லை அவர்களால் எந்த துறைகளிலும் புகழ் பெற்று விட முடியாது.
உண்மையான வெற்றி
தவறான வழிகளிலும் குறுக்கு வழிகளாலும் வெற்றி பெறுவதையே இன்று அனேகமானவர்கள் விரும்புகின்றனர். கடினங்கள் அற்ற வஞ்சகத்தினால் கிடைக்கின்ற எந்த வெற்றிகளும் வெற்றி ஆகாது.
அதுபோலவே உண்மையாக நின்று போராடி பெற்ற தோல்விகள் கொண்டாடப்பட வேண்டியதாகும். ஆதலால் தான் உண்மையின் வழியில் கடினமாக போராடி நாம் பெறுகின்ற வெற்றியினை தான் உலகத்தாரும் ஏற்று கொள்வர் என்பது நிதர்சனமாகும்.
முடிவுரை
“பொய் சொல்ல கூடாது பாப்பா” என்று மகாகவி பாரதியார் குழந்தைகளிடத்து உண்மையினை விதைக்கின்றார். உண்மை நிறைந்த மனமானது எதற்கும் அஞ்சாத தைரியத்தினை அவர்களுக்கு கொடுக்கின்றது.
புயல்போலும் பிரச்சனைகள் நமக்கு வந்தாலும் அவற்றினை தாண்டி வெற்றி பெற நம்மிடத்து உண்மை என்பது எப்போதும் அவசியமானதாகும்.
You May Also Like: